சிறப்புக் கட்டுரைகள்
null

சேங்கனூரில் 2 ஆலயங்கள்

Published On 2024-04-18 11:14 GMT   |   Update On 2024-04-18 11:17 GMT
  • சோழ மன்னர்கள் அரியணை ஏறும்போது 5 ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில்தான் விழாவை நடத்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.
  • விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் அத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான்.

கும்பகோணம் யாத்திரையின் போது சேங்கனூருக்கு செல்ல அவசியம் நேரம் ஒதுக்குங்கள். கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் சாலையில் திருப்பனந்தாள் என்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சேங்கனூர் இருக்கிறது.

இந்த ஊர் மிகுந்த பழமை சிறப்பு கொண்டது. நாயனார்களில் ஒருவரான சண்டேஸ்வரர் நாயனார் அவதரித்த ஊர். இந்த ஊரில் ஒரு சிவாலயமும், ஒரு பெருமாள் ஆலயமும் உள்ளது. ஆதி காலத்தில் இருந்தே சிவாலயம் புகழ் பெற்று திகழ்கிறது.

சோழ மன்னர்கள் அரியணை ஏறும்போது 5 ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில்தான் விழாவை நடத்தி பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அந்த 5 ஊரில் முதன்மையான ஊராக சேங்கனூர் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள சிவாலயத்தில் சகி தேவி அம்மை சமேத சத்தியகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் ஏழு சிகரங்களாக பாரதத்தில் ஏழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும் மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது.

விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் அத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது.


கால்கள் வெட்டப்பட்டவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வ தியுடன் தரிசனம் தந்து, "என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,"என கூறி தன் கழுத்தில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்' ஆக்கினார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 41 வது தேவாரத்தலம் சேங்கனூர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சகிதேவியம்மை கோச்செங்கட்சோழன் கட்டிய இந்த மாடக்கோவில் கட்டு மலையின் மேல் உள்ளது.

கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலை மேல் ஒரு பிரகாரமும் சுற்றிக் கீழே ஒரு பிரகாரமும் உள்ளன. மேருமலையின் ஒரு சிறு பகுதி விழுந்த தலம் ஆகையால் கோவில் சிறு மலையில் அமைந்துள்ளதை போன்ற தோற்றத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் மேலே ஒரு பிரகாரம் மற்றும் கீழே ஒரு பிரகாரம் என இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கந்தபுராணம் வழிநடைப்படலம் பகுதியில் இந்த தலம் பற்றிய வரலாறு உள்ளது.

சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு உருத்திர பாசுபதப் படையைப் பெற்றார். அப்போது தேவதச்சன் இத்தலத்தை ஒரு நகரமாக ஆக்கினான். இதனால் இத்தலம் குமாரபுரம் என்றும் முருகன் வழிபட்டதால் சேய் – முருகன் நல் ஊர் என்பதே – சேய்ஞலூர் என்றும் பெயர் பெற்றது. முருகனுக்கு பெரிய தனி சன்னதி உள்ளது. அனைத்து சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார்.

சிவபெருமான் சண்டிகேஸ்வரருக்கு உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறி சண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இத்தல மகிமையை கூறியுள்ளார்.

நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிபிச்சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7 வது பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் தேவார பாடல்கள் பாடியுள்ளனர்.

சத்திய கிரீஸ்வரரை வழிபட்ட பிறகு சீனிவாச பெருமாள் ஆலயத்துக்கும் சென்று வழிபட வேண்டும்.

வைஷ்ணவர்களின் ஆதாரநூலாக விளங்கும் ஆழ்வார்களால் பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை பிறந்த ஊராகும். யாமுனசூரி நாச்சியாரம்மாள் தம்பதியினரின் மகனாக வைணவ குடும்பத்தில் அவதரித்தார் பெரியவாச்சான் பிள்ளை, இவர் பெற்றோர் இவருக்கு ஸ்ரீ கிருஷ்ண சூரி என்று பெயரிட்டு அழைத்தனர்.

சிறு வயது முதலே கல்வி, கேள்விகளில் மட்டுமல்லாமல், இறை உணர்விலும் வழிபாட்டிலும் சிறந்து விளங்கினார் கிருஷ்ண சூரி. பெற்றோர் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்த னர், அவருக்கோ மண வாழ்வில் நாட்ட மில்லை. மனம் எப்பொழுதும் ஏழுமலையானையே நாடியது. பெற்றோர் அவரையும் அவர் மனைவியையும் திருமலை யாத்திரைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்று ஏழுமலையானை வழிபட்ட பெரியவாச்சான் பிள்ளை, அங்கேயே இருந்து விட முடிவு செய்தார். அவருக்கு ஏழுமலையானை விட்டுப் பிரிய மனமே இல்லை. ஆனால், அவர் தாய், தந்தையருக்கு ஆற்ற வேண்டிய கடமையை அவருக்கு நினைவூட்டிய இறைவன், ஒரு பிரம்மச்சாரியின் வடிவில் தோன்றி, அவரை ஊருக்குத் திரும்ப உத்தரவிட்டார்.

ஆனால், பெரியவாச்சான் பிள்ளையோ, சம்சாரம் ஒரு நோய் என்றும் தாம் அதிலிருந்து விடு பட்டு இறைவனை நாட விரும்புவதாகவும் கூறினார். அந்த பிரம்மச் சாரி ஒரு சாளகிராமத்தை அவரிடம் கொடுத்து. "இது சீனிவாச பெருமாள், இதை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பு" என்றார். "இதில் உருவ மில்லையே'' என்று பெரியவாச்சான் பிள்ளை கேட்க, "உனக்கு பக்தி இருந்தால் இதில் இறைவன் ஆவிர்பவிப்பார்" என்று கூறினார்.


சாளகிராமத்தைப் பெற்றுக்கொண்ட பெரியவாச்சான் பிள்ளை மனமின்றி திருப்பதியில் இருந்து புறப்பட்டு வந்தார். சேங்கனூர் அடைந்ததும், கொள்ளிடம் ஆற்றங்கரையில் கணவனும் மனைவியும் நீராடினர். அப்போது ஆற்றங்கரையில் வைத்திருந்த சாளகிராமம் காணாமல் போய் விட்டது. இதைக் கண்டு பெரிய வாச்சான் பிள்ளை பெரும் அதிர்ச்சி அடைந்தார். "பக்தி இருந்தால் இறைவன் ஆவிர்பவிப்பார் என்று பிரம்மச்சாரி கூறினாரே, எனக்கு பக்தியே இல்லை போலும் அதனால்தான் சாளக்ராமம் என்னை விட்டுப் பிரிந்து விட்டது' என்று எண்ணி வேதனைப்பட்டார். இவ்வாறே நாட்கள் கழிந்தன. அப்போது இறைவன் அவர் கனவிலே தோன்றி, "நீ சாளகிராமத்தை தொலைத்த இடத்தில் தான் தோன்றி உள்ளேன்" எனக் கூறினார்.

உடனே, பெரியவாச்சான் பிள்ளை மகிழ்ச்சியுடன் ஆற்றங்கரைக்குச் சென்று மணலில் இறைவனை தேடினார். ஓரிடத்தில் இறைவனின் முகம் அவருக்கு தென்பட்டது. உடனே அங்கு ஆழமாகத் தோண்ட, சீனிவாச பெருமாள் முழு உருவமாக அங்கு மணலுக்குள் காட்சி அளித்தார். பெரிய வாச்சான் பிள்ளை ஆனந்தக் கூத்தாடினார்.

ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டு இறைவனை ஏற்றி வந்தார். தற்சமயம் சீனிவாசர் ஆலயம் அமைந்துள்ள இடம் வந்ததும் வண்டியின் அச்சு முறிந்தது. இங்குதான் இறைவன் வீற்றிருக்க விரும்புகிறார் என்று எண்ணிய பெரியவாச்சான் பிள்ளை, அங்கே இறை வனை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்.

பின்னர், அவர் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத சுவாமியை தரிசிக்க எண்ணினார். அங்கு அவருக்கு நம்பிள்ளை ஆச்சார்யராக அமைந்தார், அவர் வழி காட்டுதலின் பேரில் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு பாஷ்யம் அமைத்தார். பெரிய பெருமாளே அவருக்கு, 'அபயபிரதராஜன்' என்றும் ரங்கநாயகித் தாயார் அவருக்கு, வியாக்யான சக்ரவர்த்தி என்றும் விருது வழங்கி கவுரவித்தனர்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து பல நூல்களை இயற்றிய அவர் தன் இறுதி காலம் நெருங்குவதை அறிந்து சேங்கனூர் திரும்பினார். அங்கு அவருக்காக அர்ச்சவதாரமாக எழுந்தருளிய சீனிவாசப் பெருமானை அடைந்து, சரணாகதியாக அவர் பாதத்தில், 'அடிக் கீழமர்ந்து புகுந்தேனே' எனக் கூறி ஐக்கியமானார்.

இன்றும் சீனிவாசப் பெருமானின் பாதத்தில் சாளகிராம ரூபத்தில் பெரியவாச்சான் பிள்ளை காணப்படுகிறார்.

வழக்கமாக சீனிவாசப் பெருமாள் அபய மற்றும் வரத ஹஸ்தத்துடன் அமைந்திருப்பது வழக்கம். ஆனால் இங்கோ இடுப்பில் கை வைத்து மிக ஒய்யாரமாக பெரியவாச்சான் பிள்ளைக்காக எழுந்தருளி இருக்கிறார். திருப்பதியில் நடக்கும் முக்கிய உற்சவங்கள் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும், அங்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனைகளையும் பக்தர்கள் இங்கு நிறைவேற்றுகிறார்கள். பெரியவாச் சான் பிள்ளை திருநட்சத்திரமான ஆவணி ரோகிணியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கோவிலுக்கு அடுத்த தெருவில் பெரியவாச்சான் பிள்ளை அவதரித்த திருமாளிகை அமைந்துள்ளது. அதில் அவர் ஒவியம் மற்றும் சுவாமி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாவின் பூர்வீக இல்லத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆராதித்த விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

Tags:    

Similar News