சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள் மீனா: கேமிராமேன் பிரியன்...

Published On 2024-04-15 11:20 GMT   |   Update On 2024-04-15 11:20 GMT
  • நான்கைந்து காஸ்ட்யூமில் அந்த பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது.
  • கருவேல மரக்கிளையை வெட்டி, கட்டாக கட்டி முந்தானை தலைப்பு சேலையை சுற்றி தலையில் வைத்து விறகு கட்டை சுமந்து செல்ல வேண்டும்.

உண்மையிலேயே என் மீது பிரியமானவர்.

தனது கேமரா கண்கள் மூலம் மீனாவை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக காட்ட முயற்சிக்கும் நல்ல மனசுக்காரர்.

நானும் முரளியும் ஜோடி சேரும் படத்தில் அவர் ஒளிப்பதிவாளராக வந்தால் மட்டும் ரொம்ப டென்சன் ஆகிவிடுவார்.

அப்போ, அவருக்கு முரளியை பிடிக்காதோ என்று நினைத்து விடாதீர்கள். என்னை தான் எதிர்பார்த்த அளவுக்கு பளிச்சென்று காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கம்தான். வேறு எதுவும் இல்லை.

ஏனெனில் நாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் போது லைட் போட்டால் என் முகம் பளிச்சென்று தெரியும். முரளி முகம் கருப்பாகி விடும். லைட் போடாமல் எடுத்தால் என் முகம் டல்லாகிவிடும். இது தான் பிரச்சினை. இந்த ஜோடியை வைத்து எடுத்தால் எனது ஒளிப்பதிவு டல்லாகிவிடுமே என்று கிண்டல் செய்வார். இந்த கிண்டலை முரளி அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ரொம்ப நல்ல மனிதர். அன்பாக பழகுவார்.

பொற்காலம் படத்தில் 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலுக்கு அவரது கேமரா கண்களை அற்புதமாக சுழலவிட்டிருப்பார்.

பொற்காலத்தின் வெளிப்புற படப் பிடிப்புகள் மைசூருவில் நடந்தது. பாவாடை, தாவணி கட்டி பொம்மை போல் ஆடும் காட்சிகள் அனைத்தும் அங்கு படமாக்கப் பட்டது. 'தஞ்சாவூரு மண்ணை எடுத்து, பாடல் காட்சியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. முழு பாடலையும் ஒரே நாளில் எடுக்க வேண்டிய கட்டாய சூழல். எனக்கு மறுநாள் ஐதராபாத்தில் வேறு பட ஷூட்டிங் போக வேண்டும். எனவே காலை 9.30 மணிக்கெல்லாம் ஷூட்டிங் தொடங்கி விட்டது. நான்கைந்து காஸ்ட்யூமில் அந்த பாடல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. எனவே ஓய்வே இல்லாமல் படப்பிடிப்பு தொடர்ந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத்தான் முடிந்தது.

உடனே புறப்பட்டு நேராக விமான நிலையத்துக்கு சென்றேன். போகும்போதே காரில் இருந்தே மேக்-அப்புகளை கலைத்து தலையை வாரி விட்டு சென்றேன். அங்கிருந்து விமானத்தை பிடித்து ஐதராபாத் சென்று வேறு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். எவ்வளவு அழகான பாட்டு, சூப்பர் சீன்கள் ஒரே நாளில் அரங்கத்தில் வைத்து முடிக்க வேண்டியதாயிற்றே என்று வருத்தமாக இருந்தது. எல்லா காட்சிகளையும் உள்வாங்கி பொறுமையாக ரசித்து ரசித்து நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.

ஆனாலும் பாடல் காட்சிகள் அழகாக அமைந்ததை நினைத்து சந்தோஷமாக இருந்தது. வருத்தத்தை ஜீரணித்து கொண்டேன்.

'அந்த படத்தில் 'கருவேலங் காட்டுக்குள்ள, கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது' என்ற பாடல் முழுக்க கருவேலங் காட்டுக் குள்ளேயே படமாக்கப்பட்டது.

 

அய்யோ... முள்ளு முள்ளாக இருக்கும்... கீழேயும் முட்கள் நிறைய கிடக்கும். காலில் செருப்பு கூட போடாமல் அந்த காட்டுக்குள் பாடல் காட்சியில் நடிக்கணும். கிராமங்களில் கருவேல மரக்கிளைகளை வெட்டி எடுத்து அடுப்பு எரிக்க பயன்படுத்துவார்கள்.

அதைப்போலவே நான் கருவேல மரக்கிளையை வெட்டி, கட்டாக கட்டி முந்தானை தலைப்பு சேலையை சுற்றி தலையில் வைத்து விறகு கட்டை சுமந்து செல்ல வேண்டும். அப்பா... காட்சியில் நடிக்கவே இவ்வளவு கஷ்டமாக இருக்கே. நிஜமாகவே கிராமத்து பெண்கள் கை, கால்களில் முள் குத்துவதையும் தாங்கி கொண்டு விறகு வெட்டி வெயிலில் எப்படித்தான் சுமந்து செல்கிறார்களோ என்று ஆச்சரியப்பட்டேன். கிராமத்து பெண்களின் அன்றாட வேலையும், அவர்கள் படும் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கஷ்டத்துக்கு இடையிலும் எனக்கு எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை சேரன் கொடுத்தார். அதை என்னால் மறக்க முடியாது. அதாவது கருவேலங் காட்டுக்குள் ஷூட்டிங் நடந்த போதுதான் எனது பிறந்தநாள் வந்தது.

வழக்கமாக பிறந்தநாள் என்றால் வீட்டிலோ, நண்பர்களுடன் ஓட்டலிலோ கொண்டாடுவோம். கேக் வெட்டி பிடித்தமான உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவோம். அந்த நாள் ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் இப்போது காட்டுக்குள் ஷூட்டிங்... எங்கே பிறந்தநாளை கொண்டாடுவது என்று நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

பிறந்தநாள் அன்று ஷூட்டிங் சென்றேன். அந்த கரு வேலங்காட்டுக்குள்ளேயே பிறந்தநாள் கொண்டாடத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். கேக் தயாராக இருந்தது. அதை பார்த்ததும் ஆச்சரியத்தில் 'என்ன சார்...' என்றேன்.

எல்லாம் உங்கள் பிறந்தநாளுக்குத்தான் என்றார்.

படக்கு ழுவினர் மத்தியில் கேக் வெட்டினேன். எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள். அப்போது வானத்தில் இருந்து பூமழை பொழிவது போல் ஏராளமான பூக்கள் மேலிருந்து கொட்டியது.

ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்த்தேன். பூ தூவுவதற்காக கிரேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் ஏதோ ஷூட்டிங்குக்காக கிரேன் நிற்கிறது என்று தான் நினைத்து இருந்தேன். கருவேலங்காட்டுக்குள் கனவுலக நிகழ்ச்சி போல் அந்த பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி விட்டார்கள். மறக்க முடியாத கருவேலங்காடு... அது திருவண்ணாமலை அருகே உள்ள கிராமம். இன்னும் என் கண் முன்னால் அந்த காட்சிகள் தெரிகிறது. இந்த காலத்தை போல் செல்போன் வசதிகள் இருந்திருந்தால் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் இதய கேமராவுக்குள் இதே போல் எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள் படமாக பதிந்து இருக்கி ன்றன. அடுத்த நினைவு களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

பை... பை... (தொடரும்)

Tags:    

Similar News