சிறப்புக் கட்டுரைகள்

அந்த பயம் இருக்கட்டும்

Published On 2024-04-14 10:11 GMT   |   Update On 2024-04-14 10:11 GMT
  • அச்சம் என்பது மனிதனின் உள்ளத்தில் தோன்றுகிற இயல்புணர்ச்சி.
  • அச்சம் என்பது மூடநம்பிக்கையா? அல்லது அறிவியல் சார்ந்த உள்ள உணர்வா?.

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சியே ஆகவேண்டும் என வாழும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

பிறந்த குழந்தை முதற்கொண்டு, முதிர்ந்த பெரியவர் வரை அவர்களோடு ஒட்டிக்கொண்டே இருக்கும் மனிதக்குணம் அச்சம் என்பது ஆகும். பிறந்த குழந்தையை மேல்நோக்கித் தூக்கிப்போட்டுப் பிடித்தால் அதற்கு உயிரே போய்வந்தது போன்ற பயம் பற்றிக்கொண்டு அலறத் தொடங்கும்; தாயின் கருவறையில் கதகதப்பாகப் பாதுகாப்பாக இருந்த குழந்தை வெளியே வந்து பிறந்தவுடன் அழத் தொடங்குவதே ஒருவித இனம்புரியாத அச்சத்தின் காரணமாகத் தான்.

'யானைக்குப் பயப்படுவியா? பூனைக்குப் பயப்படுவியா?' எனக்கேட்டு, கைகளை முகத்தருகே விரைவாகக் கொண்டுபோய் வீசிக், கண்களை இமைக்க வைத்து, 'பயந்துட்டே! பயந்துட்டே!' எனக் குழந்தைகளோடு விளையாடுவதே அவர்களுக்கிருக்கும் பய உணர்வை வெளிப்படுத்தத்தான். வயதான பெரியவர்கள் தங்களது செல்பேசிகளைக் கயிறுகட்டிக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வதும், பணத்தை உடையில் ஐந்தாறு இடங்களில் பிரித்துப் பத்திரப்படுத்தி வைப்பதும் அவை தொலைந்து விடுமோ என்கிற அச்சத்தின் காரணமாகத்தான். சில வீடுகளில் சில பெரியவர்களும், சில சிறுவர்களும் போகும் வழியில் எங்கே தொலைந்துபோய் விடுவார்களோ என்கிற அச்சத்தின் முன்ஜாக்கிரதையோடு தான் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்

அச்சம் அல்லது பயம் என்பது மனித மனத்திலே தோன்றுகிற ஓர் உணர்வு. மனிதர்களுக்கு மட்டுமில்லாது பிற ஐந்தறிவு உயிர்களுக்கும் இந்த அச்ச உணர்வு தோன்றுவதைக் காணலாம். அறிவின் துணைகொண்டு,முன் அனுபவ வழிநின்று, காரண காரிய இயல்புகளை வைத்து தர்க்கரீதியாக அச்சப் படுவதும் உண்டு. எந்தக் காரணங்களுமின்றி அச்சம் கொள்வதும் உண்டு. அழுவது, கோபம்கொள்வது, ஆச்சரியப்படுவது, மகிழ்வது, இரக்கப்படுவது, குழம்பி நிற்பது, பெருமிதப்படுவது, அமைதியாய் இருப்பது ஆகியவை போல அச்சமும் உயிரினங்களிடத்தில் தோன்றுகிற ஒரு மன உணர்வுதான்.

'அச்சமே கீழ்களது ஆசாரம்!' என்று குறிப்பிடும் திருவள்ளுவர், 'கீழ்மக்களே அச்சப்படுவதைக் குல வழக்கம்போலக் கொண்டிருப்பர்' என்கிறார்.ஆனால் அவரே மற்றொரு குறளில் ' அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்கிறார் 'அதாவது அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டியது அறிவுடையவர்கள் செய்யும் செயல்!' என உறுதிபட எடுத்துரைக்கிறார்.


அச்சம் என்பது மனிதனின் உள்ளத்தில் தோன்றுகிற இயல்புணர்ச்சி. ஆதி மனிதன் தனது உதவிக்காகப் படைக்கப்பட்டுள்ள இயற்கையைப் பார்த்தே முதலில் அச்சப்படத் தொடங்கினான். எது நமக்கு வியப்பைத் தருகிறதோ அது நாளடைவில் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லையெனில் அதுவே நமக்கு அச்சமளிப்பதாக மாறிவிடுகிறது. உயர்ந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், மரம் செடி கொடிகளும், ஆறும் அருவிகளும், காற்றும் மழையும், கடலும் நெருப்பும், இடி மின்னலும் அவனுக்கு முதலில் வியப்பைத் தந்திருக்கலாம்; பலநேரங்களில் இயற்கைப் பேரிடர்களாக அவை உருமாறி, அவனைத் துன்பப் படுத்தியபோது அவன் இயற்கையைப் பார்த்து அஞ்சத் தொடங்கியிருப்பான்.

அச்சப்படுத்திய இயற்கையை வழிபடுவதன் மூலம் தனக்கு உதவியாக வசப்படுத்திக் கொள்ளலாம் என நம்பினான். ஆதியில் வழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது. எனினும் மிகுந்த கவனத்தோடு இயற்கையோடு அனுசரணையோடு வாழ்ந்தால் தனது வாழ்வியல் வசதிக்கான அனைத்தையும் இயற்கையிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து கொண்டான். கண்மண் தெரியாத அச்சத்திலிருந்து கவனப்படும் அச்சத்திற்கு மனித குலம் மாறியிருப்பதே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியல் சாதனை.

அச்சம் என்பது மூடநம்பிக்கையா? அல்லது அறிவியல் சார்ந்த உள்ள உணர்வா?. அறிவியல் வளராத அந்தக் காலத்தில் மனிதன் எதற்கெடுத் தாலும் பயப்படுவது; காரணம் தெரியாமல் பயப்படுவது என்று இருந்தது; அது மூடத்தனம். ஆனால் இன்று எல்லாச் செயல்களுக்கான காரண காரியங்களையும் அறிந்தே அவன் கவனத்துடன் செயல்படும்போது அது அறிவுசார் அச்சமாகவே கொள்ளப்பட வேண்டியதாகிறது.

பேய் பிசாசுகளுக்கும் இருட்டுக்கும் அஞ்சுவது மூடத்தனம். வீரன் போருக்கு அஞ்சுவது கோழைத்தனம்;மாணவர்கள் தேர்வெழுத அஞ்சுவதும் இந்த வகையைச் சேர்ந்ததே!. சமூக ஏற்றத்தாழ்வு காரணமாக சாதியில், அந்தஸ்தில், பணபலத்தில், அதிகாரத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்துத் தாழ்ந்தவர்கள் அஞ்சுவது தன்னம்பிக்கையின்மை; சுயமரியாதை உணராத தன்மை. அஞ்சக் கூடாததற்கு அஞ்சக் கூடாது! என்று வள்ளுவர் இவர்களுக்குத் தான் அறிவூட்டுகிறார். 'பெரியோரை வியத்தலும் இலமே!' என்பதன் மூலம் கணியன் பூங்குன்றனார் மற்றொரு கோணத்தில் மனிதர்களுக்கான சுய மரியாதையை எடுத்துரைக்கிறார்.

தவறுகளே நமது அச்சங்களுக்கு அச்சாரம். செய்தால் தவறு நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சிச், செய்யாமல் இருப்பது கோழைத்தனம்; செயல்களைச் செய்யாதவரை தவறுகள் நிகழ்வதில்லை; செய்தபின் தவறு நிகழ்ந்து விட்டாலும் அதே தவறு மீண்டும் நேர்ந்துவிடக் கூடாதே என்கிற அச்சத்துடன் செய்து வெற்றி காண்பதே விவேகமான செயல். இங்கே அச்சம் என்பது கவனத்துடன் செய்வது என்றே பொருள்படும்.

ஒரு தந்தை, வீட்டுக்கு வந்திருந்த தனது நண்பரை உபசரிப்பதற்காகத், தனது மகனின் கையில் கண்ணாடிக் குவளையில் தண்ணீரைக் கொடுத்தனுப்பினார். கொடுப்பதற்குமுன், "பத்திரம்! கண்ணாடிக் குவளை பத்திரம்! கீழே போட்டு உடைத்து விடாமல் கொண்டுபோக வேண்டும்!" என்று மூன்றுமுறை கூறி, மகனது தலையில் மூன்றுமுறை கொட்டினார். அவரது நண்பர் கேட்டார், "இன்னும் உன் மகன் கையில் நீ கண்ணாடிக் குவளையைக் கொடுக்கவே இல்லையே!; அவன் அதைக் கீழேபோட்டு உடைக்கவும் இல்லையே! அதற்குமுன் ஏன் அவனது தலையில் குட்டுவைத்து அழ வைக்கிறாய்?". தந்தை சொன்னார், "அவன் கீழே போட்டு உடைத்த பின்னால், அவனை அடித்து என்ன ஆகப்போகிறது?". ஆக நிகழ்வதற்கு முன்னரேயே நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்கான அச்சத்தை ஊட்டுவதற் காகவே அந்தத் தந்தை அப்படி நடந்து கொண்டிருக்கிறார்.


அச்சம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே அமைந்த குணம். தனக்குப் பழக்கமில்லாத ஒரு செயலில் இறங்கும்போதோ, அல்லது செய்வதற்குச் சவாலான காரியத்தைச் செய்யத் தொடங்கும்போதோ, ஏற்கனவே பலர் முயன்று தோற்றுப்போன செயலில் நாம் ஈடுபடும்போதோ மனத்தில் பயம்வந்து பற்றிக்கொள்வது இயல்புதான். 'பயப்படாமல் இரு!' என்று இப்படிப்பட்ட தருணங்களில் சொல்வதென்பது, நல்ல நகைச்சுவையைச் சொல்லிவிட்டுச் சிரிக்காமல் இரு! என்று கட்டுப்படுத்துவதற்கு இணையானது.

சிலருக்கு மேடைக்கூச்சம் இருக்கும்; பேசத் தொடங்கும்போது கைகால்கள் அச்சத்தில் உதறத் தொடங்கும்; பிறகு வார்த்தைகளும் கோர்வையாக வராமல் குழறத் தொடங்கும். இவர்கள் பலமுறை தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் மூலமும், முயற்சிகள் மூலமும் மேடைப் பயங்களிலிருந்து முற்றிலும் வெளியேறி, ஆகச் சிறந்த பேச்சாளராக உருமாறும் வெற்றிகளைப் பெற்றுவிடுவர். திரைத்துறையில் சிறந்துவிளங்கும் நடிகர்கள்கூட, 'ஓவ்வொரு முறை மேக் அப் போட்டுக் கொள்ளும்போதும் இந்தக் காட்சியில் நன்றாக நடிக்க வேண்டுமே! எனும் பயம் வந்து பற்றிக்கொள்ளும்' என்றே கூறி வருகின்றனர்.அது அவர்களை அந்தந்தத் தருணங்களில் சிறப்பாக நடிக்க வைக்கும்.

அரசியல்துறை தொடங்கி, கலைத்துறை, அறிவியல்துறை, கல்வித்துறை, வியாபாரத்துறை, காவல்துறை, நிருவாகத் துறை, இராணுவத்துறை, வேளாண்மைத் துறை என எல்லாத்துறைகளிலும், குடும்பம், சமூகம் என எல்லா நிலைகளிலும் நாம் காரியமாற்றத் தொடங்கும்போது நம்மைக் கவனப்படுத்துகிற அச்சத்தையும் கொஞ்சம் மனத்தில் தேக்கிவைத்திருப்பது மிகவும் நல்லது.

'எண்ணித் துணிக கருமம்' எனும் வள்ளுவக் கட்டளை மூன்று பகுதிகளைக் கொண்டது; கருமம் என்பது செயல்; நன்மை விளைக்கிற வாழ்வியற் செயல்பாடுகளில் மனிதர் ஈடுபட வேண்டும்!; அவற்றில் ஈடுபடும்போது அச்சமின்றித் துணிச்சலோடு இறங்கிச் செயல்படவேண்டும். துணிச்சலோடு இறங்குவதற்குமுன் தீர ஆலோசித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவெடுத்து இறங்க வேண்டும். இங்கே சாதக பாதகங்களை ஆராயும்போதே கவனப்படும் அச்சத்துடன் செயல்படவேண்டும். இந்த மாதிரியான அச்சமே எல்லாச் செயல்களையும் கவனமாகச் செய்ய வைத்து நிச்சய வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

ஒரு கடற்கரை நகரம். அந்த நகரத்தில் உள்ள மக்கள் நாள்தோறும் தங்கள் உணவில் மீனைச் சேர்த்துக்கொள்ளத் தவறுவதில்லை. ஆனால் அந்த நகரத்தின் கடலில், கரையோரப் பகுதியில் மீன்கள் கிடைப்பதில்லை. கடலில் வெகுதூரம் சென்றே மீன்பிடித்து வரவேண்டிய கட்டாயம். பெரிய பெரிய படகுகளை ஏற்பாடு பண்ணி, கடலில் நெடுந்தூரம்வரை சென்று மீன்பிடித்துத் திரும்பினால், முக்கல்வாசி மீன்கள் இறந்துபோய் விடுகின்றன; கால்வாசி மீன்கள் சோர்ந்து விடுகின்றன. அவற்றைச் சந்தையில் வாங்கிச் சமைத்தால், அப்போதுதான் பிடித்து உயிர்ப்புடன் இருக்கும் மீனைச் சமைத்துச் சாப்பிடுவது போன்ற சுவை உண்டாவதில்லை; எனவே மக்கள் ஆதரவு இந்த மீன்களுக்குக் கிட்டவில்லை. ஐஸ் கட்டிகளில் போட்டுக் கொண்டு வந்தாலும் சுவைக்கவில்லை..

மீன்பிடி நிறுவனம், புதிதான ஒரு உத்தியைக் கையாளத் தொடங்கியது. பெரிய பெரிய படகுகளில் தண்ணீர்த் தொட்டிகளை ஏற்றிப், பிடிக்கும் மீன்களை அவற்றுள் போட்டு உயிருடன் கொண்டுவந்து விற்பனை செய்தது. மீன்கள் உயிருடன் இருந்தாலும் அவற்றிடம் சோர்வு இருந்ததால் அவை புத்தம்புது மீன்போலச் சுவையாக இல்லை என மக்கள் வெறுத்தனர்.


அடுத்து ஒரு சிறப்பான முயற்சியை மீன்பிடி நிறுவனம் அறிமுகப் படுத்தியது. இப்போது மீன்கள் உயிர்ப்புடனும் சமைத்தால் சுவையாகவும் இருப்பதாக நகர மக்கள் ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி விட்டனர். அந்த மீன்பிடி நிறுவனம் கையாண்ட உத்தி இதுதான்; படகுகளில் கொண்டுசெல்லப்பட்ட தண்ணீர்த் தொட்டிகளில் பிடிக்கின்ற மீன்களைப் போட்டதோடு, ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு சிறு சுறா மீனையும் போட்டு விட்டனர்.

சுறா மீனிடமிருந்து தப்பித்து உயிர் வாழவேண்டுமே என்கிற அச்சத்தில், தண்ணீர்த் தொட்டிகளில் இருந்த மீன்கள், நொடிப்பொழுதும் அயராமலும் சோராமலும் சுற்றிக்கொண்டே இருந்ததனால் அவை பலமணி நேரங்கள் உயிப்புடன் புதுமீன்கள் போல இருந்தன.

மனிதனும் அப்படித்தான். அவனுக்கு அன்றாடம் ஏற்படுகிற இடைஞ்சல்களும். அவற்றிலிருந்து எப்படியாவது காயப்படாமல் வெளியேறிவிட வேண்டுமே என்கிற அச்சமுமே அவனை உயிர்ப்புடனும் புத்துணர்வுடனும் வைத்திருக்கின்றன.

எல்லாச் செயல்களையும் செய்வதற்குமுன் சிறிது நேரம் சிந்தித்துத் திட்டமிடுவதும், ஏற்படப்போகும் தடைகளுக்கு எப்படி விடைகாண்பது? என்கிற கவனத்துடன் கூடிய அச்சத்துடன் அணுகுவதும் நம்மைத் தோல்வியற்ற வெற்றிநிலைக்கு இட்டுச்செல்லும்.

பயப்படுங்கள்; துணிச்சலோடு செயல்படுவதற்குமுன் கொஞ்சம் பயப்படுங்கள். பயம் பலவேளைகளில் நல்லது!.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News