சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்

Published On 2024-04-13 11:19 GMT   |   Update On 2024-04-13 11:19 GMT
  • கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பில் மழைதான் கடவுள், மழையின்றி இவ்வுலகம் இல்லை எனும் உண்மையைக் கூறுகின்றார்.
  • எமன் நமக்கு உடம்பா? உயிரா? உணர்ச்சியா? இயற்கையா? செயற்கையா? என்றால், இயற்கை ஓர் இயக்கத்தை உண்டாக்கியது.

உலகப்பொது மறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார். அதன் விவரம்,

அதிகாரம்: வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களைப் பற்றி வள்ளுவர் ஆங்காங்கே கூறினாலும், வான் சிறப்பு என்று மழைநீருக்கு ஓர் அதிகாரத்தை ஒதுக்கி அதனின் உயர்வை விளக்குகின்றார். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பில் மழைதான் கடவுள், மழையின்றி இவ்வுலகம் இல்லை எனும் உண்மையைக் கூறுகின்றார்.

புல், செடி, கொடி, மரம் போன்ற நமக்கு உணவாகப் பயன்படுகின்ற தாவரங்கள் விளைவதற்கு மழை நீர் இன்றியமையாததாக உள்ளது. உணவுப் பொருள்களைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு நீர் தேவைப்படுகிறது. நீர் இல்லாமல் உயிர் வாழமுடியாது. நமக்கு நீர் இன்றியமையாததாக உள்ளது. எல்லா ஜீவராசிகளின் உயிரைக் காக்க மழை நீரே அவசியமாக உள்ளது.

உணவுப்பொருள் உருவாவதற்கும் அதனை உட்கொள்வதற்கும், மழைநீர் இன்றியமையாதது.


காய், கனி உணவுகளினால், உடம்பிற்குக் கிடைக்கக்கூடிய சத்து உதிரமாகவும், சுக்கில சுரோணிதமாகவும் இருக்கும். நீர்தான் பெண்களுக்கு கருமுட்டையாகவும், சுரோணிதமாகவும் இருக்கும். இதே நீர் காமத்திற்குக் காரணமாக உள்ளது.

மழைபொய்த்தால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பசி என்னும் நோய் வருத்தி, இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் துன்பமுறும். மழைபொய்த்தால் உழவுத்தொழில் செய்ய முடியாது. விவசாயி வாழ முடியாது. சிலகாலங்களில் மழை பொய்த்து இவ்வுலக மக்களை வருத்தும். சிலகாலங்களில் மழை பெய்து இவ்வுலக மக்களை வாழவைக்கும்.

மக்களின் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக மழையே உள்ளது. மேகத்திலிருந்து மழை பெய்யாவிட்டால் புல் முளைக்காது. புல்லே முளைக்காத வறட்சியில் வேறெந்த உயிரினமும் வாழ முடியாது.

மேகம், கடலிலிருந்து நீரை மேல்கொணர்ந்து மழை உண்டாக்கும். அப்போது கடலில் முத்துப் போன்ற உயர்ந்த பொருள்களும் உண்டாகும். அவ்வாறு மழை பெய்யாமல் இருக்குமானால், கடலுக்கும் பெருமை இருக்காது.

மழை பெய்யாது இருந்தால் மக்களிடம் வறுமையும், பிணியும் உண்டாகும். அதனால் தேவதைகளுக்கும், தெய்வங்களுக்கும் செய்கின்ற விழாக்கள், பூஜைகள், வழிபாடுகள் தடைபட்டுப் போகும்.

மழை பொய்த்துப் போனால், நலிந்த மக்களுக்கும். ஏழைகளுக்கும் பசியாற்ற முடியாது. ஏனைய தர்மத்தையும் செய்ய முடியாது. தர்மம் தடைபட்டுப் போகும். தன்னை இறைநிலைக்கு உயர்த்திக்கொள்ளும் ஞானியர்கள், தவமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

மழைநீர் இல்லை என்றால், மக்களுக்கு முறையான வாழ்க்கை நிலையில்லாமல் போய்விடும். பண்புள்ள மக்களாக வாழமுடியாது. சமுதாயத்தில் ஒழுக்கம் மாறும், சத்தியம் இருக்காது. பொய் பேசுவார்கள். எல்லாவிதமான கேடுகளும் விளையும்.

அதிகாரம்: நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன.

நீத்தார் பெருமை என்றால், எல்லாவற்றையும் துறந்த சித்தர்களின் சிறப்பைக் கூறுவதே ஆகும். நீத்தார் என்றால் எல்லாவற்றையும் துறப்பது. காமத்தை அறுத்து தேகத்தை மாற்றிக்கொள்வது. நெருப்பு நீத்துப் போனால் சாம்பல் மட்டுமே மிஞ்சும். நெருப்பு இருக்காது. அதுபோல் உண்மைப் பொருள் அறிந்து காமத்தை வெல்ல வேண்டுமெனில் தலைவனின் ஆசி இருக்க வேண்டும்.

தவம் என்பது வைராக்கியத்தின் அடிப்படையிலும் முன் செய்த நல்வினையாலும் வருவது. வைராக்கியம் திருவருள் துணை இல்லாமல் வராது.

எல்லாம் வல்ல இயற்கை வெவ்வேறு உருவங்களாக உள்ளன. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இயற்கையின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும். மனிதனின் இயல்புகளைப் புரிந்திருக்க வேண்டும்.


அதாவது மனிதனின் இயல்பு என்ன? மும்மலம் வந்ததின் காரணம் என்ன? ஆணவம், காமம், மாயை ஏன் வந்தது? பரிணாம வளர்ச்சி என் வந்தது? ஏன் காமம் வந்தது? ஏன் பசி வந்தது? துறவு ஏன் மேற்கொள்ள வேண்டும்? இத்தகைய உண்மையை அறிந்தவனே துறவு மேற்கொள்ள முடியும்.மனிதனுக்கு குணக்கேடுகள் இருக்கும்வரை அவனால் துறவு மேற்கொள்ள முடியாது. மனிதனின் குணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த குணக்கேடுகள் எப்படி வந்தன ? இயற்கையாக வந்ததா? செயற்கையாக வந்ததா? இதுதான் பிறப்புக்கு காரணமாக உள்ளதா? இப்போது வந்ததா? அல்லது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வந்ததா?

இவ்வாறாக மனிதனின் இயல்பை ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது மனிதன் தோன்றினானோ அப்பொழுதே, குணக்கேடுகள் இருந்துள்ளன. அப்பொழுதே குணப்பண்புகளும் இருந்துள்ளன.

ஞானிகள் தவமுயற்சியால், சான்றோர் தொடர்பால் குணக்கேட்டை நீக்கியுள்ளார்கள். காமம் நீங்காமல் குணக்கேடு நீங்காது.

தலைவன்மீது பக்தி செலுத்தி யோகாப்பியாசம் அறிந்து, மூச்சுக்காற்றின் இயல்பறிந்து, மூலாதாரக்கனலை எழுப்பினால் காமம் அற்றுப் போகும். அப்போது குணப்பண்பு உண்டாகும்.

காமம் அற்றுப்போனால் தேகம் நீத்துப் போகும். உணர்ச்சியற்றுப் போகும். பசியற்றுப் போகும். கபம் அற்றுப் போகும். நம் எதிரியான எமன் வீழ்ந்து போவான்.

அப்படியானால் எமன் நமக்கு உடம்பா? உயிரா? உணர்ச்சியா? இயற்கையா? செயற்கையா? என்றால், இயற்கை ஓர் இயக்கத்தை

உண்டாக்கியது. எல்லா ஜீவராசிகளும் தோன்றி வாழ்கின்றன. பின்பு அழிந்து போகின்றன.

ஞானிகள் தங்களுடைய அழிவை நிறுத்தி மரணத்தை வென்றார்கள். அத்தகையவர்களின் பெருமையே நீத்தார் பெருமை.

உண்மைப்பொருள் அறிந்து, கட்டுப்பாடுகளை உருவாக்கி உடல்கூறினை அறிந்து, இயல்பறிந்து அதன் வகை தொகை அறிந்து, துறவு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கூறுகின்ற உண்மைப் பொருளை துணிவுடன் கூறுவதும், அவர்களின் பெருமையைப் புகழ்ந்து எழுதுவதுமே நூலிற்குப் பெருமை. அதுவே சிறந்த நூலாகும்.

சாகாத வரம் பெற்றவர்களின் பெருமையை அளக்க முடியாது. இவ்வுலகில் பிறந்து இறந்தவர்களின் தொகையை எவ்வாறு கணக்கெடுக்க முடியாதோ? அவ்வாறே துறந்தார் பெருமையைக் கூறுவதற்கும் இயலாது.

இயற்கையின் கூறுபாடுகளை அறிந்திருக்க வேண்டும். இயற்கையின் இயல்பே வினாடிக்கு வினாடி நம்மைக் காப்பதுபோல் காத்து நரை, திரை, மூப்பு உண்டாக்கிச் சாகடித்து விடும். இயற்கை என்பது பிறப்பு. வீடுபேறு என்பது மோட்சம். எல்லோரும் இறப்பார்கள். இறவாமல் இருப்பவர்களின் பெருமைக்கு எல்லையே இல்லை.

பூமியில் பிறந்தால் அவன் மீண்டும் பிறக்காமல் மோட்சகதி அடையவேண்டும். அத்தகையவர்களின் பெருமையே இவ்வுலகத்தில் உயர்ந்தது.

ஒருவன் இறந்து விட்டால் மீண்டும் கருப்பைக்குப் போவான். அதாவது, மீண்டும் விதையாவான்.

யானை போல் வலிமையுள்ள ஐம்புலன்களை, மனவலிமையுடன் அறிவு எனும் குத்துக் கோலால் அடக்கி ஆள வேண்டும். அத்தகையவர் மேலான நிலத்தின் விதைக்கு ஒப்பாவார்.

உண்மைப்பொருள் அறிந்து, பொறி புலனை வென்று, பெரும் சக்தியைப் பெற்றுவிட்டால் இந்திரன் நடுங்குவான். பொருள் அறிந்து புலனை அடக்கி துறவு மேற்கொண்டவரிடம் அரசர்களும், செல்வந்தர்களும் தாள்பணிந்து நிற்பர்.

தலைவன் ஆசிபெற்று வாசி வசப்பட்டு காயசித்தி அடைந்து, தன்னை வென்றவனுடைய ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவுமில்லை.

மற்றவர்கள் செய்ய முடியாத ஒன்றைச் செய்தவர்கள் பெரியோர்கள். பெரியோர்களின் ஆசியையும், அருளையும் பெற்றவர்கள், மற்றவர்கள் செய்யமுடியாத ஒன்றைச் செய்வார்கள். எமனை வெல்லும் வல்லமை படைத்தவர்களே மீண்டும் பிறக்காத நிலை அடைந்தவர்கள், அவர்களின் செயல்கள் அரிய செயல்களாக மட்டுமே இருக்கும்.

சுவை- நாக்கு -தண்ணீரின் கூறு

ஒளி - கண் -சூரியனின் கூறு

ஊறு - தேகம் -மண்ணின் கூறு

ஓசை- செவி -காற்றின் கூறு

நாற்றம் - மூக்கு - கந்தத்தின் கூறு

இவ்வாறு ஐம்புலன்களின் இயல்பறிந்து பஞ்சபூத தத்துவங்களை எவன் தெரிந்து கொண்டானோ அவனே உலகத்தை பற்றிய உண்மை தெரிந்தவன்.

நிறை மொழி எது?

காம தேகத்தில் தடுமாற்றம் இருக்கும். காம தேகம் அற்றுவிட்டால் கசடு இருக்காது. மாசற்ற கொள்கை, மாசற்ற தேகம் இருந்தால் உடம்பினுக்குள் உத்தமனைக் காணலாம். அறம், பொருள், இன்பத்தைப் பற்றிக் கூறுகின்ற மொழியே உயர்ந்தது. அதுவே நிறைமொழி. எத்தனை யுகங்கள் மாறினாலும் அது மாறாது. மூட நம்பிக்கையைக் கூறாத மொழி, மனிதாபிமானத்துடன் நடக்க வழிசொல்லுகின்ற மொழி நிறை மொழி. அறியாமையை நீக்கக் கூடிய மொழி, அன்புமொழி, ஆக்கம் நிறைந்த மொழி, ஆற்றல் பெற்ற மொழி, ஈடு இணையில்லாத மொழி, அருள் மொழி தமிழ் மொழி இதுதான் என்றும் அழியாத வேதமாகவும் இருக்கும். உயர்ந்த குணப்பண்பு உள்ளவர்களிடம் சினம் இருக்காது. அவர்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை உண்டு. அத்தகையவர்கள் இறைவனுக்கு ஒப்பாவார்கள். அத்தகையவர்களுக்குச் சினம் வந்தால் அதனைத் தாங்கும் சக்தி இவ்வுலகத்திற்குக் கிடையாது.

Tags:    

Similar News