சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் சிறுநீரகக் கல்லடைப்பும், தீர்வுகளும்...

Published On 2024-04-10 11:18 GMT   |   Update On 2024-04-10 11:18 GMT
  • முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
  • பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.

முதுமையில் 7 ஆண்களில் ஒருவருக்கும், 13 பெண்களில் ஒருவருக்கும் சிறுநீரகக் கல்லடைப்பு நோய் தோன்றுவதாக உள்ளது. சிறுநீரகக் கல்லடைப்புக்கு எளிமையான பல மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டு இருப்பினும், முதுமையில் பலருக்கு இது சவாலாக உள்ளது.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பல்வேறு வகையாக உள்ளன. கற்கள் உருவாக பல்வேறு காரணங்களும் உள்ளன. அதில் கால்சியம் ஆக்சலேட் கற்களும், யூரிக் அமில கற்களும், கிருமித் தொற்றால் உருவாகும் கற்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன. குறிப்பாக யூரிக் அமில கற்களே முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. முதுமையின் உடலில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

கால்சியம் வகை சிறுநீரகக் கற்கள் பொதுவாக 20-30 வயதுகளில் உண்டாகக்கூடும். சிறுநீரில் உள்ள கால்சியம் (சுண்ணாம்பு) படிமங்கள், பாஸ்பேட், கார்பனேட் அல்லது ஆக்சாலேட் ஆகியவற்றுடன் ஒன்றுகூடி கற்களை உண்டாக்குவதாக உள்ளது. யூரிக் அமில வகை கற்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் உண்டாவதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கூடுதலாக சில வகை மருந்துகளும் சீறுநீரகக் கற்களை உண்டாக்க காரணமாக உள்ளன.

மாபெரும் பாரம்பரிய அறிவை மையமாகக் கொண்ட சித்த மருத்துவம் சிறுநீரகக் கல் உண்டாவதற்கு, உடலில் அதிகமாகும் பித்தமே முக்கிய காரணமாகின்றது. எனவே பித்தம் தணிக்கும் உணவும், மருந்தும் முதுமையில் சிறுநீரகக் கற்களை உண்டாக்காமல் தடுக்க உதவும்.

சிறுநீரகக் கற்கள் என்றாலே சித்த மருத்துவத்தை நாட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இயற்கையிலே உண்டு. ஏனெனில் சித்த மருந்துகள் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் என்பது தான். உண்மையில் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மையுள்ள பல மூலிகைகளும், பற்ப செந்தூர மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உள்ளன என்பது சிறப்புமிக்கது.


சித்த மருத்துவ மூலிகைகளில் மூக்கிரட்டை, நெருஞ்சில், யானை நெருஞ்சில், நன்னாரி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை, வாழைத்தண்டு, அருகம்புல், கொள்ளு, நாயுருவி ஆகியன சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்ற பலன் தருவதாக உள்ளன. அஞ்சறைப்பெட்டி சரக்குகளில் புளி, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியனவும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையன.

மேலும் சிறப்பாக தாதுக் கலப்புள்ள மருந்துகளான சிலாசத்து பற்பம், நண்டுக்கல் பற்பம், வெங்கார பற்பம் ஆகிய பல மருந்துகள் கற்களை உடைத்து, சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றுவதாக உள்ளன. கீழாநெல்லி, நெல்லி ஆகிய மூலிகைகள் கற்கள் உருவாவதை தடுப்பதாகவும் உள்ளன.

பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் சிறுநீரக கற்களைக் கரைக்க பயன்படுத்தப்படும் மூலிகையாக உள்ளது சிறுகண்பீளை தான். இதில் உள்ள முக்கிய தாவர வேதிப்பொருட்களான 'குர்செடின்' மற்றும் 'பெட்யூலின்' ஆகியவை அதன் சிறுநீர்பெருக்கி செய்கைக்கும், சிறுநீரகத்தில் உள்ள கற்களின் அளவைக் குறைக்கும் செய்கைக்கும் காரணமாக உள்ளன.

மேலும் சிறுகண்பீளை சிறுநீரில் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் ஆகிய படிமங்களின் வெளியேற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், மெக்னீசியத்தின் அளவைப் பராமரிப்பதன் மூலமும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறுபீளையை தனி கசாயமிட்டு குடித்து வந்தாலும் அல்லது சிறுபீளையுடன் கற்களை கரைக்கும் பிற மூலிகைகளான நெருஞ்சில்முள், மூக்கிரட்டை, மாவிலங்கப்பட்டை ஆகியவற்றை யும் சேர்த்து கசாயமிட்டு குடித்து வந்தாலும் சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும். 'சிறுபீளைக் குடிநீர்' எனும் சித்த மருந்தும் நல்ல பலன் தரும்.

அதே போல் சிறுநீரகக் கற்களை கரைக்க பயன்படும் எளிய மூலிகை கீழாநெல்லி. இதன் இலைப்பகுதியில் உள்ள 'பில்லாந்தின்' எனும் வேதிப்பொருள் சிறுநீரகக்கல் உருவாக்கத்தின் பல நிலைகளில் தலையிட்டு கற்கள் உருவாவதைத் தடுப்பதோடு, கற்களை கரைக்கவும் உதவுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து 45 நாட்கள் வரை கீழாநெல்லியை எடுத்துக்கொள்ள சிறுநீரகக் கற்கள் கரைவதுடன் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். சிறுநீரகக் கல் நோய்நிலையில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவெனில் 50% பேருக்கு மீண்டும் கல் உருவாக வாய்ப்புள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில் கீழாநெல்லி மீண்டும் கல் உருவாவதை தடுக்க உதவும்.

எளிமையாகக் கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகையான நெருஞ்சில் முள்ளினை கசாயமாக வைத்துக் குடித்து வருவதும் சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும். இதன் சிறப்பு என்னவெனில் சிறுநீரகக் கற்களை கரைப்பதோடு மட்டுமின்றி, இரத்தத்தில் அதிகமாகும் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் இவற்றையும் குறைத்து சிறுநீரகத்தை காக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் இதற்குண்டு

வளர்ச்சிதை மாற்றக் கோளாறால் உண்டாகும் மற்றொரு வகையான கற்கள் ஆக்சலேட் வகை கற்கள் தான். அத்தகைய கற்களைக் கரைக்க உதவும் எளிய மூலிகையாக மூக்கிரட்டை கீரை உள்ளது. இதனை அவ்வப்போது சூப் அல்லது கசாயம் வைத்து குடித்து வருவது ஆக்சலேட் கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக செயல்திறனை அதிகரிக்க உதவும்.

அதேபோல் மீண்டும் மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கத்தைத் தடுக்க வெந்தயம் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தயம் உட்கொள்வதால் கால்சியம் ஆக்சலேட் வகை கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கப்படும் என்கின்றன மொரோக்கோ நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள்.

சீரகம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டுமே சிறுநீரகக் கல் உற்பத்தியைத் தடுத்து சிறுநீரக செல்களை காக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுமுடிகள் தெரிவிக்கின்றன. ஆகவே முதுமையில் சீரகம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப்பெட்டி சரக்குகளை அவ்வப்போது கசாயமிட்டு குடித்து வருவதும் நல்லது. அஞ்சறைப்பெட்டி சரக்கான சோம்பு கசாயமும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் இயற்கை பானமாக உள்ளது.

சீரகத்தில் உள்ள 'குமினால்டிஹைடு' மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன. உடலில் உண்டாகும் பல்வேறு படிமங்களை சிறுநீரகத்தில் படியாமல் தடுத்து சிறுநீரில் வெளியேற்றுவதாக வாழைத்தண்டு உள்ளது. அவ்வப்போது அருகம்புல் கசாயமாக்கி குடித்து வருவதும் நன்மை பயக்கும்.

சிறுநீரகக்கற்கள் உருவாக்கத்திற்கு உணவு முறையும், குடிதண்ணீரும் முக்கிய பங்காற்றுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளும், காற்றேட்டப்பட்ட பானங்களும் கல் உருவாவதில் கூடுதல் பங்களிப்பை அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இயற்கையான பானங்களை நாடுவதும், இயற்கையான உணவை உண்பதும் கற்கள் உருவாக்கத்தை தடுக்க உதவும்.

நாட்பட்டு சிறுநீரகத்தில் இருக்கும் சிறுநீரகக்கல் முதுமையில் நாட்பட்ட சிறுநீரக நோய் உண்டாவதற்கு வழிவகுக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையோடு மருத்துவ ஆலோசனைப்படி மருத்துவம் மேற்கொள்ளுதல் அவசியம்.

முதுமையில் சர்க்கரை நோயுள்ள பலருக்கு சிறுநீரகக்கல் உண்டாக வாய்ப்புள்ளதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் உள்ள நபர்களுக்கும் யூரிக் அமில கற்கள் உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு காரணமாகும் இன்சுலின் தடையே யூரிக் அமில கற்களை உண்டாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகிறது.

டேஷ் உணவு முறையானது (Dash Diet) சிறுநீரகக்கல் உருவாவதை தடுக்கும் வல்லமை படைத்தது. இது அதிகரித்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பினையும் தடுக்க உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள். உணவில் அதிக அளவு பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்வதும், கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை குறைந்த அளவு உண்பதும் டேஷ் உணவுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுவாகவே புளிப்பான பழங்களை எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கற்களை கரைக்க உதவும். இருப்பினும் முதுமையில் வயிற்றில் அமில சுரப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் வாதம் அதிகரித்த நிலையில் உள்ளவர்கள் அவற்றை குறைவாக எடுப்பது நல்லது. ஏனெனில் "புளி துவர் விஞ்சு கறியால் வாதம் பூரிக்கும்" என்கிறது சித்த மருத்துவம்.

சிறுநீரகக்கல் நோய்நிலையில் முள்ளங்கி, புடலங்காய், வெண்பூசணிக்காய், வெள்ளரிக்காய் ஆகிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தேநீர், காபி குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கேரட், பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி சாறாக எடுத்துக்கொள்வது சிறுநீரகக்கல் நோயில் நல்ல பலன் அளிக்கும். இதில் உள்ள வைட்டமின்-ஏ சத்து கல் உருவாவதை தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.

சாதாரணமாக 5 மில்லிமீட்டர் அளவுள்ள கற்கள் வரை போதுமான தண்ணீர் குடித்தாலே வெளியே வந்துவிடக்கூடும். கற்கள் அளவு அதை விட கூடுதலாக இருப்பின் முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகின்றது.

முதுமை என்பதே பல்வேறு நோய்களுக்கு ஆதாரமான நிலை தான். மருந்து சீட்டு பரிந்துரைப்படி எத்தனை எத்தனை மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது முதுமையின் மனதை உடைக்கும். இருப்பினும் முதுமைக்கு தேவை அறம் சார்ந்த மருத்துவமும், கூடவே கொஞ்சம் அக்கறையும் தான். இவ்விரண்டால் ஆயுள் நீளும், ஆரோக்கியமும் செழிக்கும்.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News