சிறப்புக் கட்டுரைகள்

விட்டுக் கொடுப்பதன் மகிமை

Published On 2024-04-07 11:14 GMT   |   Update On 2024-04-07 11:14 GMT
  • விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும்.
  • உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது.

விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை எனும் பழமொழிப்படி வாழ விரும்பும் பண்பாளர்களே! வணக்கம்!

நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம், விட்டுக்கொடுப்பது என்பது இயலாதவர்களின் கோழைக்குணம் என்று. ஆனால் விட்டுக் கொடுப்பது என்பது வெற்றியாளர்களின் தயாள குணம் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

புதுச்சேரியை ஒட்டிய ஒரு தமிழக கிராமத்தில் ('நல்லூர்-1' என வைத்துக் கொள்வோம்) ஓர் அரசுப்பள்ளி; அதே பகுதியில் மற்றுமொரு கிராமத்தில் ('நல்லூர்-2' என வைத்துக் கொள்வோம்) மற்றோர் அரசுப்பள்ளி. இரண்டு பள்ளிகளுக்கும் எப்போதும் போட்டி மனப்பான்மை தான்; கட்டுரை, கவிதை, பேச்சு எனும் இலக்கியப் போட்டிகளா? கபடி, கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்து எனும் விளையாட்டுப் போட்டிகளா? அனைத்துப் பள்ளிகளுக்கு இடையில் எப்போது நடந்தாலும் இந்த இரண்டு பள்ளிகளுக்கிடையில்தான் யார் முதல்? யார் இரண்டாவது? எனும் போட்டி.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஓர் நிகழ்வு; பசுமை மாறாமல் விவரித்தார் பசுமை சுந்தரம். அன்று ஆரோவில்லில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி. அது சுழற்கோப்பைக்கான போட்டி; அந்தப் பேச்சுப் போட்டியில் எந்தப் பள்ளி மூன்றுமுறை தொடர்ந்து வெற்றி வாகை சூடுகிறதோ அந்தப்பள்ளிக்கு அந்தக்கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும்.

குறிப்பிட்ட அந்தச் சுழற்கோப்பைக்கான போட்டியில் ஏற்கனவே நல்லூர்1 பள்ளி இரண்டுமுறை தொடர்ந்து வென்றிருக்கிறது; அந்த வெற்றியைத் தற்போது போட்டியில் பங்கெடுக்கப் போகும் பத்தாம் வகுப்பு மாணவனே இரண்டு முறையும் பெற்றுத் தந்திருக்கிறான்; இம்முறையும் அவனே முதலில் வந்துவிட்டால் நல்லூர்1 பள்ளிக்குச் சுழற் கோப்பை நிரந்தரமாகச் சென்றுவிடும். அப்படிச் சென்றுவிட்டால் அந்த இடத்தில் பெரும் கைகலப்பை ஏற்படுத்த நல்லூர் 2 பள்ளி மாணவர்கள் ஆயத்தமாக இருந்தனர். அதனை உரியவாறு எதிர் கொள்ள நல்லூர்1 பள்ளி மாணவர்களும் தயாராகவே இருந்தனர்.

போட்டிகள் நிறைவு பெற்றன. முடிவுகள், பரிசளிக்கும் சமயத்தில் அறிவிக்கப்படும். பரிசளிப்புக்குச் சிறப்பு விருந்தினராக அந்தப் பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழும் ஒரு பெருமகனார் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் வள்ளலோடு விழாக் குழுவினர். கீழே பரிசுகள் பெறும் ஆவலோடு பல பள்ளி மாணவர்கள். ஆயினும் நல்லூர்2 பள்ளி மாணவர்களுக்கும், நல்லூர்1 பள்ளி மாணவர்களுக்கும் எதிர்பார்ப்பெல்லாம் அந்தப் பேச்சுப் போட்டிக்கான சுழற்கோப்பை க்கான அறிவிப்பை நோக்கியே இருந்தது.

நல்லூர்1 பள்ளி சார்பில் கலந்துகொண்டு பேசிய மாணவன் மனத்தில் இப்போது ஒரு வித்தியாச எண்ணம் ஓடத் தொடங்கியிருந்தது. தன்னுடைய கட்டுரை நோட்டிலிருந்து ஒரு தாளைக்கிழித்து, மள மளவென்று நாலைந்து வரிகள் எழுதத் தொடங்கினான்; எழுதியவுடன் அந்தத் தாளை மடித்துச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வள்ளலிடம் பணிவோடு தந்துவிட்டு வந்தமர்ந்து கொண்டான்.

முடிவுகளைச் சிறப்பு விருந்தினரே அறிவிக்கத் தொடங்கினார்; சுழற்கோப்பைக்கான பேச்சுப்போட்டி முடிவு என்று சொல்லிவிட்டு நல்லூர்1 பள்ளி மாணவனை அழைத்து அருகில் நிற்கச் சொன்னார்; நமக்குப் பரிசில்லையோ? என நல்லூர்2 பள்ளி மாணவர்கள் அதிர்ந்தனர். சிறப்பு விருந்தினர் பேசத் தொடங்கினார், "மாணவக் கண்மணிகளே இந்தச் சுழற்கோப்பைக்கான பரிசை அறிவிப்பதற்கு முன், நல்லூர்1 பள்ளி மாணவன் எனக்குத் தனிப்படத் தந்த கடிதத்தை நீங்கள் எல்லோரும் கேட்கும்படி வாசிக்கிறேன்" என வாசித்தார்.

ஐயா வணக்கம்! நான் மாணவன் யுவராசன். இந்தப் பேச்சுப் போட்டியிலும் நான் தான் வெல்வேன், சுழற்கோப்பை நிச்சயம் எங்கள் பள்ளிக்குத்தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. ஆயினும் இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையாகிய மாணவர்கள் நாங்கள் தற்போது இரு பிரிவுகளாக நிற்கிறோம். முடிவு எனக்குச் சார்பாக வந்தால், ஒருபிரிவு மாணவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாமல் மனம் கோண நேரிடும். எனவே அருள்கூர்ந்து முடிவை நல்லூர்2 பள்ளியின் மாணவனாகிய எனது நண்பனுக்கு அறிவிக்கவும்.

மாணவர்களின் எதிர்கால ஒற்றுமையை மனத்தில் கொண்டு, இப்போட்டியிலிருந்து நான் விட்டுக்கொடுத்து விலகிக் கொள்கிறேன்!". மாணவனின் கடிதத்தை வாசித்தவுடன் வள்ளல், "எனவே பரிசும் சுழற்கோப்பையும் யுவராசன் வேண்டுகோள்படி நல்லூர்2 பள்ளிக்குச் செல்கிறது. அந்த மாணவனின் விட்டுக் கொடுத்தலுக்காக ஒரு பரிசு கொடுக்க வேண்டுமென்றால், அதற்கான பரிசு இன்னும் இந்த உலகத்தில் உருவாகவில்லை !" என்று அறிவித்தார். அங்கிருந்த மாணவர்கள் எல்லாருமே மனமகிழ்ச்சியோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த நிகழ்வில் அந்த மாணவன் யுவராசன் செய்த விட்டுக்கொடுத்தல் என்பது, கலந்துகொள்ளாமலேயே பயந்து விலகிக் கொள்வதல்ல; போட்டியிலும் கலந்து கொண்டு, தனது திறமையையும் நிரூபித்து விட்டு, பிறகு ஒரு துறவியைப் போல வேண்டாமென்று விலகி நிற்பது சமூக அக்கறை சார்ந்த வெற்றிச் செயல்.

வாழ்க்கையே போட்டிமயம்தான். எந்நேரமும் போட்டிகள்தாம். ஆயினும் விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டுக்கொண்டே இருப்பதன்மூலம் என்னத்தைக் கட்டிக்கொண்டு எடுத்துச் செல்லப்போகிறோம்?.

பேருந்துக்கும் ரேசனுக்கும் சினிமாவுக்கும் வரிசையில் நிற்பது தொடங்கி, பேருந்து ரயில்களில் இருக்கை பிடிப்பது, திருமண விருந்துகளில் உணவிருக்கை தேடுவது என எங்கெங்கு பார்த்தாலும் கண்களுக்குத் தெரியாத போட்டிமயம்தான். இதில் யாருக்கும் விட்டுத்தர யாருக்கும் மனம் கிடையாது. பேருந்துகளில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்திருப்போர் என எவர் வந்தாலும் எழமறுக்கிற குணமுடையவர்தாம் உண்டு. கேட்டால், இப்படி ஒவ்வொருவருக்காக நான் என் இடத்தை விட்டுத்தர வேண்டுமென்றால் எனக்கான இருக்கையை நான் எப்போது அனுபவிப்பது? என்று கேட்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ரயில் பயணத்திற்கான படுக்கை வசதிப் பயணச்சீட்டைப் பதிவு செய்யும்போது, கீழ்ப் படுக்கை வந்தால் சலித்துக்கொள்வார். ஏனென்று கேட்டால், "ஏறியவுடனேயே என்னுடைய கீழ்ப்படுக்கையைக் கேட்டு யாராவது ஒருகிழமோ அல்லது கர்ப்பிணியோ வந்து விடுவர். அவர்களுக்கு அதை வழங்கிவிட்டு, வழக்கம் போல நான் மேல்படுக்கையில்தான் பயணிக்க வேண்டும்; என் ராசி அப்படி!" என்பார். இந்தப் பயணத்தின்மூலம் முடியாத ஒருவருக்காக நமது வசதியை விட்டுக் கொடுத்திருக்கிறோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் நொந்துகொள்வது எந்த வகையில் நியாயம்?.

சாலைகளில் வாகனம் ஓட்டிக்கொண்டு பயணிக்கும்போது, யார் யாருடன் போட்டிபோடுவது என்கிற தராதரமின்றி, ஒரு சைக்கிள்காரர் ஒரு பேருந்தோடு போட்டிபோட்டுக்கொண்டு வழிதராமல் செல்வதைப் பார்க்கலாம். சாலை என்பது பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் உரிமையுடையது என்றாலும் அதைத் தமக்கே தமக்கான சொந்தப் பாதைபோல விட்டுக் கொடுக்காமல் வழியடைத்துச் சென்றால் பாதை எங்கே வசப்படும்? பயணம் எங்கே ருசிப்படும்?.

விட்டுக்கொடுப்பது என்பது வீட்டில் தொடங்க வேண்டும். முன்பெல்லாம் வீட்டுக்கு ஐந்தாறு குழந்தைகள் இருந்தனர். அண்ணன் தம்பி அக்கா தங்கைகளுக்கிடையே அன்பையும் பொருள்களையும் பகிர்தலும், விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் அவர்களுடனேயே வளரும் குணங்களாக இருந்தன. இப்போது ஒருகுழந்தை உலகமாகிப்போன சமூகத்தில், உறவுகள் சுருங்கிப்போனதால், எல்லாரும் எல்லாருக்கும் போட்டியாளர்கள் எனும் நிலையே மிதமிஞ்சிக் காணப்படுகிறது. விட்டுக்கொடுக்காமல் வென்றெடுப்பதே வாழ்நிலைப் போக்காகவும் ஆகிப்போனது.

ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே இருக்கும் இருபால் மனிதர்களைத் திருமணத்தில் இணைத்து, கணவன் மனைவி எனவாக்கி, அவர்களைக் குடும்ப அமைப்புக்குள் கொண்டு வருவதே மனிதர்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனும் மாபெரும் தத்துவத்தை உணர்த்துவதற்கே ஆகும். கணவன்-மனைவி என்போர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது என்பதையும் தாண்டி இருவருக்கும் அப்பால் சமூக நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும்.அதற்காக தத்தமது சொந்த சுக துக்கங்களை விட்டுக கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ரயில் தண்டவாளங்களைப் பாருங்கள் எங்கும் இணைபிரியாமல், இணைந்தும் விடாமல் சமமான இடைவெளியோடு நீண்டு இருப்பதா லேயே அவை பயணத்திற்குப் பயன்படுபவையாக இருக்கின்றன. அவற்றின்மேல் பெட்டிகளும் அவற்றை இழுத்துச் செல்லும் எஞ்சினும் பயணிப்பதால் மக்கள் ஊர்விட்டு ஊர்செல்லும் பயணம் எளிதாக நடைபெறுகிறது. இம்முறை மாறுபட்டால் என்ன ஆகும்?

நானும் பயணம் போவேன் எனத் தண்டவாளங்கள் புறப்பட்டால் பெட்டிகள் எப்படி ஊர்போய்ச் சேரும்? பெட்டிகளின்றி நான் மட்டுமே செல்வேன் என்று எஞ்சின் அடம்பிடித்தால் மக்கள் எப்படிப் பயணிக்க முடியும். வாழ்க்கையும் அப்படித்தான். மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் தகுதிக் குணங்களுக்கேற்ப விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொண்டால்தான் உலகம் சரியான திசையில் சுழலும்.

போட்டி உலகம்தான்; உறங்கும்போதுகூட விழிப்புணர்வோடு வாழவேண்டும்தான்; அதற்காக எப்போதும் நாம் மட்டுமே வாழவேண்டும்; மற்றவர்கள் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என வாழக்கூடாது. அப்படி வாழ்வது தன்னல வாழ்வு. தானும் வாழ்ந்து மற்றவர்களும் வாழவேண்டும் எனக் கருதுவதே சமூக நலம்கருதும் பொதுநலவாழ்வு. அதற்கு முக்கியமாக விட்டுக்கொடுத்துப் பழகவேண்டும்.

ஆக்குகின்ற எல்லாவற்றையும் அனுபவித்து விடுவோம் என்று நினைப்பது அறியாமை; அடுத்தவருக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பது கோழைத்தனமோ அஞ்சும் தன்மையோ கிடையாது. சமூகத்தில் நம்மைப்போலப் பிறரும் வரவேண்டும் என்று நினைப்பது வெற்றிமேல் வெற்றி தரும்.

திருக்கோயிலூரில், மழைபெய்து கொண்டிரு க்கும் போது ஓர் குடிசையில் ஒருவர் படுத்திரு க்கிறார்; அப்போது மற்றொருவர் அங்கு வந்து மழைக்கு ஒதுங்க இடமுண்டா? எனக் கேட்க, படுத்திருந்தவர் எழுந்து இடம்தர இருவர் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் மூன்றாவதாக ஒருவர் வந்து மழைக்கொதுங்க இடமுண்டா? என் வினவ, அமர்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்க மூன்றாவது நபரும் உள்ளே அவர்களோடு நின்று கொள்கிறார்.

ஒருவர் கிடக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம் எனும்படியான நெருக்கடி மிகுந்த இடத்தில், முதலாவது நபராகிய பொய்கையாழ்வார், தான் படுத்திருந்த இடத்தைப் பூதத்தாழ்வாருக்கு விட்டுக் கொடுத்ததால் இருவர் அமர்ந்து கொள்கின்றனர். பிறகு பேயாழ்வாருக்காக இருவரும் எழுந்து நின்று மேலும் இடத்தை விட்டுக்கொடுத்ததால் மூவர் நின்று கொள்கின்றனர். அந்த முதல் ஆழ்வார்கள் மூவருக்குமிடைடையே விட்டு க்கொடுக்கும் மனப்பான்மை செழித்திருந்ததால், இப்போது அவர்களோடு நெருக்கமாக நாலாவது நபர் ஒருவரும் வந்து நின்றுகொண்டு ஆசி வழங்கினாராம். அந்த நாலாது நபர் அவர்கள் வணங்கும் அந்தப் பெருமாளைத் தவிர வேறு யார்?.

விட்டுக்கொடுத்தலே தெய்வீகம்! விட்டுக்கொடுத்தலே ஆனந்தம்!

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News