சிறப்புக் கட்டுரைகள்

9 தடவை திருமஞ்சனம் ஒளிமயமான எதிர்காலம்: குடவாசல் சீனிவாச பெருமாள் ஆலயம்

Published On 2024-04-05 10:31 GMT   |   Update On 2024-04-05 10:31 GMT
  • தலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
  • கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வரும் வழியில் குடவாசலுக்கு 1 கி.மீ முன் குடமுருட்டி ஆறு உள்ளது.

கும்பகோணம் பகுதியில் எத்தனையோ வைணவ தலங்கள் இருந்தாலும் குடவாசலில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயம் தனித்துவம் கொண்டது. ஏனெனில் இந்த தலம் பெருமாள் தாமாகவே விரும்பி அமர்ந்த தலமாகும். எனவே இந்த தலத்தில் பெருமாளின் அருள் அலைகள் மிகவும் நிரம்பி இருப்பதாக வைணவ பக்தர்கள் நம்புகிறார்கள்.

புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடப்பது போல இந்த தலத்தில் புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. கடன் தொல்லைகள் நீங்கவும், தொழில் விருத்தி பெறவும், செல்வம் அதிகரிக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த ஆலயத்தில் வழிபடுகிறார்கள்.

திருமணம் கைகூட வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தை பெருமாள் காலடியில் 12 வாரங்கள் சனிக்கிழமைகளில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இந்த தலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

கும்பகோணம் யாத்திரை மேற்கொள்பவர்கள் தங்கள் பயண திட்டத்திற்கு ஏற்ப இந்த ஆலயத்துக்கு செல்வதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆலயம் கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. காரில் சென்றால் 30 அல்லது 35 நிமிடங்களில் சென்று விடலாம்.

அதற்கு முன் இந்த ஆலயத்தை பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

பூமியில் மிகப்பெரிய பிரளயம் ஏற்படும் சூழல் தோன்றியது. இதைக் கண்டு அச்சமடைந்த பிரம்மா மகா விஷ்ணுவிடம் சென்று 4 வேதத்தையும் மற்றும் உலக உயிரினங்களை மீண்டும் தோற்றுவிற்பதற்குமான வித்துகளையும் பாதுகாத்து தரச்சொன்னார்.

இதையடுத்து அமிர்தம் மற்றும் மண் கலந்து செய்த குடம் ஒன்றில் உயிரினங்களை உண்டாக்குவதற்கான வித்துக்களை நடுவிலும், அதைச் சுற்றி நான்கு வேதங்களை யும் வைத்து, அமிர்தத்தையும் அதனுடன் சேகரித்து அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து மேருமலையில் உச்சியில் வைத்து ஆராதித்து வருமாறு மகாவிஷ்ணு யோசனை கூறினார்.

பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல்நீரால் சூழப்படும் போது அந்தக் குடமானது தென்திசை நோக்கி மிதந்து சென்று ஓரிடத்தில் நிலைபெறும். அமிர்த குடம் நிலை பெற்ற இடத்திற்குச் சென்று உமது படைத்தல் வேலையைத் தொடங்கலாம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படியே பிரம்மாவும் செய்ய அந்த அமிர்தக்குடம் சென்றடைந்த தலம்தான் குடவாசல்.

அந்த குடத்தை உருட்டி வந்த நதியின் பெயர் குடமுருட்டி நதி என்றானது. மகாவிஷ்ணு உத்தரவுப்படி தனது படைப்பு தொழிலை பிரம்மா மீண்டும் தொடங்கிய இடம்தான் குடவாயில். அதுவே மருவி குடவாசல் என்றானது.

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் வரும் வழியில் குடவாசலுக்கு 1 கி.மீ முன் குடமுருட்டி ஆறு உள்ளது. இங்கு தாயாருக்கு தனி சன்னதி இல்லாமல் எப்போதும் சீனிவாச பெருமாளுடன் இணைந்து திருமணக்கோலத் தில் காட்சி தருகிறார்.

இந்த சீனிவாச பெருமாள் தன்னை தானே வெளிப்படுத்திக் கொண்டு இந்த தலத்தில் அமர்ந்த சிறப்பை பெற்றவர். அதிலும் ஒரு பின்னணி வரலாறு இருக்கிறது.

இந்து மதம் எங்கும் பரவ வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் இந்தக் குட வாசலைக் கடந்து சென்றார். இந்த இடத்தை மிகவும் அழகாகக் கண்ட அவர், பெருமாளுக்கு கோவில் எழுப்பினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அவர் பல்வேறு வேத பண்டிதர்களுடன் கலந்துரை யாடினார் அவர்கள் பரிந்துரைத்தபடி முதலில் அவர் ஆலய திருக்குளத்தை கட்டத் தொடங்கினார்.

அப்போது திருப்பதி -திருமலை ஸ்ரீ பெருமாள் ஒரு வைஷ்ணவர் கனவில் வந்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆலயக் கட்டுமானப் பணி தொடங்கும் நாளுக்கு முன் ஈசான்ய மூலையில் (கட்டுமான நிலத்தின் ஒரு பகுதி) பெருமாள் சிலை இருப்பதாகக் கூறினார்.

சிலையை சேதமடையாமல் எடுக்க வேண்டும். மணலை மென்மையாக்க, பால் ஊற்றலாம். பெருமாள் வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் திருமலையின் சகோதரர் (இளையவர்) சீனிவாசர் மற்றும் ஸ்ரீ ஒப்பிலியப்பனின் மூத்த சகோதரர் என்றும் பெரிய பிரார்த்தனை தலமாக இந்த தலம் மாறும் என்றும் கூறினார்.

கனவில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவர் மன்னனிடம் இதுபற்றித் தெரிவித்தார். இதையடுத்து கனவில் பெருமாள் சொன்னபடியே ஈசான்ய மூலையில் தோண்டத் தொடங்க உத்தரவிட்டார். அதன்படி நிலத்தில் நிறைய பாலை ஊற்றி மென்மை உண்டாக்கி, கடைசியில் சீனிவாசப் பெருமாளின் சிலை இருப்பதை கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்தனர். அந்த சிலையை கருவறையில் வைத்து அவருக்கு கோவில் எழுப்பினார்கள். சீனிவாசர் மூலவருக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் செய்யப்படுகிறது. திருமலை திருப்பதியில் வெள்ளிக்கிழமை செய்யப்படும் திருமஞ்சன சேவையைப் பெற முடியாத பக்தர்கள், திருமலை சீனிவாசரின் சகோதரராகக் கருதப்படும் குடவாசல் சீனிவாசரின் திருமஞ்சன சேவையைப் பெறலாம். மூலவர் சீனிவாசப் பெருமாள் வடக்கு நோக்கிய படி காட்சி தருகிறார். வடக்கு திசைக்கு அதிபதி குபேரன். இங்கே பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவ தாகவும் அந்த குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக சீனிவாசப்பெருமாள் வடக்கு பார்த்தபடி எழுந்தருள்வதாகவும் சொல்கிறார்கள்.


பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு நோக்கிய சொர்க்க வாசல் திறக்கப்படும். அன்று பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலனை வடக்கு நோக்கிய இத்தலத்தில் தினமும் பெறலாம்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் எல்லா வழி பாடுகளும் வைபவங்களும் திருப்பதி - திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படு கின்றன. திருப்பதியில் வெள்ளிக்கிழமை நடை பெறும் திருமஞ்சன தரிசனம் காண முடியாதவர்கள் இத்தலத்துக்கு வந்து கண்டு மகிழலாம். இதனால் இல்லங்களில் மகாலட்சுமியின் அருளுடன் ஐஸ்வர்யம் பெருகும். பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த தினமாகும் அந்த நாளில் விரதம் இருந்து இவரை வணங்கினால் பெருமாள் குபேர சம்பத்தைத் தந்தருள்வார் என்பதில் ஐயமில்லை.

திருமலை பெருமாளைப்போலவே இந்த தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இங்கு நடைபெறும் ஏகாந்த சேவை (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. இந்த பூஜையில் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

வியாழக் கிழமைகளில் நேத்ர தரிசனம் கண்டு மகிழலாம். ஒவ்வொரு மாதமும் பெருமாளின் திருநட்சத்திரமான திருவோணத்தில் சன்னதியில் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சுமியுடன் கூடிய சீனிவாசர் தீப வடிவமாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அட்சய திருதியை அன்று இங்கு கருட சேவை நடைபெறுகிறது.

இங்கே கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மருக்கும் (மூலவர்) லட்சுமி நரசிம்மருக்கும் (உற்சவர்) பிரதோஷ காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும். தொழில் விருத்தியும், பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

கல்விக் கடவுளான ஹயக்ரீவருக்கும் இங்கு சன்னதி உண்டு. மாணவ-மாணவிகள் வியாழக் கிழமைகளில் இவரை வலம் வந்து ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறக்கலாம். இங்குள்ள ஆஞ்சநேயர் காரிய சித்திக்காக நூதன முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஐந்து வெற்றிலை, ஐந்து பாக்கு ஐந்து பழங்களை வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்து தொடர்ந்து 5 வாரங்களும் அமாவாசை நாட்களில் தொடர்ந்து 5 மாதங்களும் வழிபடுபவர்க ளுக்கு எண்ணிய காரியங்கள் கைகூடுகின்றன.

வெண்ணை காப்பு, வடைமாலை சாற்றி வேண்டுதலை நிறைவு செய்யலாம். ஞாயிற்றுக் கிழமை காலையில் நீராடி வெறும் வயிற்றுடன் இங்குள்ள கருட பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பேறு இல்லாதவர்க ளுக்கு குழந்தைப் பேறு கிட்டும் என்பது ஐதீகம்.

சீனிவாசரின் திருநட்சத்திரம் திருவோணமாகும். இந்த நாளில் சன்னதியில் சிரவண தீபம் (தெய் தீபம்) ஏற்றப்படுகிறது. ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீ கருடன் பெரிய ஆழ்வார்களும் இக்கோவிலில் உள்ளனர்.

நல்ல குழந்தைகளை நாடும் பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு தீபம் ஏற்றி நல்ல குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பது ஐதீகம். தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகளில் திருமஞ்சன தரிசனம் செய்து ஸ்ரீநிவாச பெருமாளை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்!

'பெருமாளே... கண் திறந்து கருணை பார்வை காட்டப்பா என்று மனம் உருகி வழிபடு வார்கள் அல்லவா, பக்தர்கள்... இங்கே வியாழக்கிழமைகளில் நேத்ர தரிசனம் சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து நேத்ர தரிசனம் செய்து வணங்கினால், வீட்டில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வடகலை சம்பிரதாயத்துக்கு உட்பட்ட இந்தத் தலத்தில், தாயாருக்கு தனிச் சந்நிதி இல்லை. சதாசர்வ காலமும் பெருமாளுடனேயே இருப்பதால், திருமண வரம் அருளும் திருத்தலம் இது. மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில் இங்கு வந்து பெருமா ளுக்கு திருமஞ்சனம் செய்து, அவரின் திருவடியில் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து, 9 முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்தால், திருமண பாக்கியம் கைகூடும்.

அதேபோல், பெருமாளுக்கு குங்குமப் பூ மற்றும் ஏலக்காய் அர்ச்சனை செய்து, அதையே பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு தினமும் சாப்பிட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்று போற்றுகின்றனர் பெண்கள்.

ஆழ்வார்கள், ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. உற்சவத்தின்போது. பெருமாளுடன் ஸ்ரீவேதாந்த தேசிகரும் தனி வாகனத்தில் வீதியுலா வருவது வேறெங்கும் காண்பதற்கு அரிய ஒன்று! புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

இங்கேயுள்ள ஸ்ரீயோக நரசிம்மர் மிகவும் விசேஷம்! புதன்கிழமை, சனிக்கிழமைகளில் ஸ்ரீயோக நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து, 9 முறை பிராகார வலம் வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும்; உத்தியோகத்தில் பதவி உயர்வு கைகூடும் என்கின்றனர்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு, மூலவர் சீனிவாச பெருமாள் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். வடக்குத் திசைக்கு அதிபதி குபேரன். இங்கே, பரம்பொருளை வடக்கில் இருந்தபடி குபேரன் வணங்கி வழிபடுவதாகவும், அந்தக் குபேரனுக்கு சகல செல்வங்களையும் வாரி வழங்குவதற்காக ஸ்ரீசீனிவாச பெருமாள் வடக்குப் பார்த்தபடி எழுந்தருள்வ தாகவும் சொல்வர். எனவே, சீனிவாச பெருமாளை 9 திருமஞ்சனம் செய்து வணங்கித் தொழுதால்... சகல ஐஸ்வரியங்களும் குபேர சம்பத்துகளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

குடவாசல் தலத்துக்கு வந்து, சீனிவாச பெருமாளுக்கு 9 முறை திருமஞ்சனம் செய்து, 9 முறை பிராகார வலம் வந்து வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் கை கூடும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News