சிறப்புக் கட்டுரைகள்

சின்னம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி?

Published On 2024-03-30 10:18 GMT   |   Update On 2024-03-30 10:18 GMT
  • சின்னம்மை நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டவர்கள் சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
  • நீங்கள் பயன்படுத்தும் துணி மற்றும் பிற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

நமது மாநிலத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக நமது உடல் அதிக நீரிழப்பு, சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் (Sun Stroke), சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே வழக்கத்தை விட அதிக நீர் குடித்தல், மோர், வெள்ளரிக்காய் தர்பூசணி போன்ற பழங்கள், தயிர், வெந்தயம் ஊற வைக்கப்பட்ட தண்ணீர் போன்ற விஷயங்களை, வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மறக்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் நமது மாநிலத்தில் தொடர் வெப்ப சலனம் காரணமாக, சின்னம்மை (Chicken Pox) என்று சொல்ல கூடிய ஒருவகை அம்மை நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில், இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வரை 7644 சின்னம்மை நோய்தொற்று பதிவாகியுள்ளன. இந்த காலப்பகுதியில் சின்னம்மை காரணமாக ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் குழந்தைகளும் அடங்குவர்.

இதை தடுக்க நமது மாநிலத்தில் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். கைக்குழந்தைகள், பதின்வயதினர், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளுபவர்கள்,நீண்ட கால நுரையீரல் மற்றும் தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு நோய் கடுமையானதாக இருக்கலாம்.

சின்னம்மை நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டவர்கள் சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இதுவரை சின்னம்மை தொற்று இல்லாதவர்கள் அல்லது சின்னம்மை வைரஸ் தடுப்பூசி பெறாதவர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சின்னம்மை அல்லது ஹெர்பெஸ் ஜோஸ்டர் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் மூலம் நோய் பரவலாம். மேலும் இது இருமல் மற்றும் தும்மல் மற்றும் கொப்புளங்களில் இருந்து சுரக்கும் நீர்துகள்கள் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்:

ஆரம்பத்தில் காய்ச்சல், சோர்வு, உடல்வலி, பசியின்மை, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் தோல் கொப்புளங்கள் தோன்றும். சிவப்பு நிற கொப்புளங்கள் முகம், வயிறு மற்றும் மார்பு, முதுகு மற்றும் மூட்டுகளில் தோன்றும். பின்னர் அவை 4 முதல் 7 நாட்களுக்குள் பரவி காய்ந்து உலர்ந்துவிடும்.

4 நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல், கொப்புளங்களில் கடுமையான வலி அல்லது சீழ், அதிக தூக்கம், குழப்பம், அமைதியின்மை, நடப்பதில் சிரமம், கழுத்து வலி, அடிக்கடி வாந்தி, மூச்சுத் திணறல், கடுமையான இருமல், கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

இந்த அறிகுறிகள் நிமோனியா (Pneumonia), மூளையழற்சி (Encephalitis), கல்லீரல் அழற்சி (Liver Inflammation), செப்சிஸ் (Sepsis) போன்ற தீவிர சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.


நோய் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:

1. நன்கு காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வெடுக்கவும்.

2. நிறைய தண்ணீர் குடிக்கவும்.

3. பழங்கள் சாப்பிடுங்கள்

4. வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்.

5. நீங்கள் பயன்படுத்தும் துணி மற்றும் பிற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் பயன்படுத்திய பொருட்களை, ப்ளீச்சிங் கரைசல் போன்ற கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யுங்கள்.

6. அரிப்பு உள்ள இடத்தில் கலமைன் லோஷனை (Calamine Lotion) தடவவும்

7. மென்மையான ஈரத்துணியால் உடலை அடிக்கடி துடைக்கவும். சாதாரண நீரில் குளிப்பது அரிப்புகளை குறைத்து நிவாரணம் அளிக்கும்.

8. உங்கள் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருங்கள். நீங்கள் கொப்புளத்தை சொறிந்தால், உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.

9. நீங்கள் சிக்கன் பாக்ஸ் சிகிச்சை பெற்றாலும், வழக்கமான மருந்துகளை நிறுத்த வேண்டாம்.

இதுவரை சிக்கன் பாக்ஸ் இல்லாதவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோயைத் தவிர்க்கலாம்.

நோய் பாதிக்காதவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:

சின்னம்மை நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த உத்தி தடுப்பூசி. வெரிசெல்லா தடுப்பூசி, பொதுவாக இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. முதல் டோஸ் 12-15 மாத வயதில் பரிந்துரைக்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் 4-6 ஆண்டுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசி தனிநபர்களை சிக்கன் பாக்ஸிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடுமையான நோய் மற்றும் நோயினால் ஏற்படும் கடும்சிக்கல்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.

மேலும் நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பது சிக்கன் பாக்ஸ் பரவுவதை தடுக்க உதவும். சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது மூக்கை கையால் மூடுவது, நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் பிறருக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க அறிகுறிகள் தென்படும்போது வீட்டிலேயே இருப்பது போன்றவை முக்கியமான நோய் தடுப்பு முறைகளாகும்.

E-Mail ID: karthikspm@gmail.com 

Tags:    

Similar News