சிறப்புக் கட்டுரைகள்

கோவிந்தபுரம் பாணபுரீஸ்வரர்-கதாதரன்

Published On 2024-03-28 11:38 GMT   |   Update On 2024-03-28 11:38 GMT
  • அம்பு குத்திய இடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாயிற்று. அதுவே பாண தீர்த்தம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.
  • ஆற்றங்கரையில் லட்சுமணன் கொண்டுவந்த பொருட்களைக் கொண்டு சீதை அன்றைய பிண்டப் பிரார்த்தனைக்கு செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்தாள்.

கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் ராமாயண கால நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. கும்பகோணத்தை சுற்றியுள்ள பல ஆலயங்களில் ராமபிரான் பாதம் பட்டிருப்பதாக தல புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அப்படி ராமபிரான் பாதம் பட்ட ஒரு தலம்தான் கோவிந்தபுரம். இந்த தலம் வடநாட்டில் இருக்கும் கயை தலத்துக்கு சமமான பெருமை உடையது. தட்சிண கயை என்றும் ராமர் கயை எனவும் இது அழைக்கப்படுகிறது.

இந்த தலம் தமிழ்நாட்டிலேயே இருந்தும் அநேகமாகப் பலருக்கும் தெரிந்திராத அற்புத வரலாறு கொண்ட தலம். இந்த தலத்தின் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

கைகேயி பெற்ற ஒரு வரத்தால் ராமபிரான் வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. தம்பி லட்சுமணன் துணையாக வர சீதையுடன் காட்டுக்குப் போனார், ராமன். அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றான்.

அனுமன் துணையோடு ராமன், சீதையைக் கண்டுபிடித்து போரில் வென்றார். பிறகு விபீஷணனை இலங்கை மன்னனாக பட்டாபி ஷேகம் செய்து வைத்தார். பின்னர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தன் தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு தலத்திலும் சிவபூஜை செய்தார்.

அப்போது ஒருநாள் தந்தை தசரதனுக்கு உரிய நீர்க்கடனைச் செய்ய வேண்டிய குறிப்பிட்ட நாள் வரவே, எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்யத் தீர்மானித்தார். அதற்கு ஏற்ற இடத்தைத் தேடினார். கயைப் போல் ஆறும் அட்சய வடமும் இருக்கும் ஓர் இடத்தைக் கண்டவர், அதுவே உரிய தலம் என்று தீர்மானித்தார்.

கயையைப் போல் ஆற்றிலும் அட்சய வடத்திலும் பிண்ட தானம் செய்துவிடலாம். முக்கியமானதும் மூன்றாவது இடமுமான விஷ்ணு பாதத்தில் சேர்ப்பதற்கு உரிய இடம் இல்லையே என ராமர் எண்ணினார்.

இதற்கிடையே வேண்டிய பொருட்களை சேகரிக்க தம்பி லட்சுமணனை அனுப்பிவிட்டு, அருகில் சிவபூஜைக்கு உரிய லிங்கம் இருக்கும் இடத்தைத் தேடிப்போனார், ராமன். ஊரின் உட்புறமாய் ஓரிடத்தில் மேற்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி கொடுத்த லிங்க உருவைக் கண்டு மகிழ்ந்த ராமபிரான், அவருக்கு அபிஷேகம் செய்து, அன்றைய சிவபூஜையை நடத்தினார்.

அதன் பிறகு பிண்ட தானம் செய்ய விரும்பினார். அதற்காக நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து அன்னம் படைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சென்றார். வெகுதூரம் சென்றும் நீர் கிடைக்காத நிலையில் லிங்கத் திருமேனி கண்ட இடத்திற்குத் திரும்பினார்.

அதன் தெற்குப்புறம் தன் வில்லின் துணை கொண்டு பாணத்தை எய்தார். அந்த அம்பு குத்திய இடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாயிற்று. அதுவே பாண தீர்த்தம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.

அத்தீர்த்தத்தால் அபிஷேகமும், கொண்டு வந்த மலர்களைத் தூவி அர்ச்சனையும் செய்து வழிபட்டு சிவபூஜையை நிறைவு செய்தார். பாண தீர்த்தத்தை எடுத்து ராமன் அபிஷேகம் செய்ததால் அந்த இடத்திற்கு பாணபுரம் என்ற பெயரும். இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என பெயரும் உண்டாயிற்று.

மானிட அவதாரம் எடுத்திருந்த ராமபிரான், கயையில் விஷ்ணுபாதத்தில் பிண்டம் சமர்ப்பிப்பது போல் இங்கும் பிண்டம் சமர்ப்பிக்க அருள்புரிய வேண்டும் என்று பாண புரீஸ்வரர் சிவலிங்க வடிவை வணங்கினார். பிறகு ஆற்றங்கரை நோக்கி சீதையும் தம்பி லட்சுமணனும் பின் தொடர புறப்பட்டார்.

 

ஆற்றங்கரையில் லட்சுமணன் கொண்டுவந்த பொருட்களைக் கொண்டு சீதை அன்றைய பிண்டப் பிரார்த்தனைக்கு செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்தாள். இதையடுத்து அருகில் உள்ள பல்குனி நதிக்கு சமமான ஆற்றங்கரைக்குச் சென்று அரசமரத்தடியில் ராமர் அமர்ந்தார். லட்சுமணன் சற்று தள்ளி நிற்க, சீதை உடன் இருக்க, பித்ரு வழிபாட்டை ராமர் செய்யத் தொடங்கினார். இறுதியில் பிண்டங்களை விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க கையில் எடுத்தபோது ஒளிக்கீற்றாய் விஸ்வரூபியாய் மேல் கைகளில் தாமரை மற்றும் சக்கரம் தாங்கி, கீழ்க்கையில் பத்மம் மற்றும் கதை தாங்கி நின்ற கோலத்தில் மகாவிஷ்ணு தோன்றினார். அவர் ராமரின் முன்னோருக்கு விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க வைக்கப்பட்டிருந்த அவிசுகளைப் பெற்றுக்கொண்டார். இதனால் ராமரின் ஆசை நிறைவேறியது. விஷ்ணுவே கதாதரனாக வந்து பெற்றுக்கொண்டதில் ராமர் பூரணமாக மகிழ்ந்தார்.

ராமபிரான் வழிபட்ட தலமான பாணபுரம், வாணாபுரம் என்று இன்று அழைக்கப்படுகிறது. பாணபுரீஸ்வரர் ஆலயம், குடந்தைக்கு அருகில் உள்ள திருவிடைமருதூர் தலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ளது. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் திருவிடை மருதூருக்கு அடுத்ததாக உள்ளது கோவிந்தபுரம். இங்கு பாண்டுரங்கன் கோவில் பிரபலமானது.

இந்த பாண்டுரங்கன் கோவில் அடுத்த நிறுத்தம் வாணாபுரம். இங்கு மேற்கு நோக்கி கோவில் கொண்டுள்ளார் இறைவன் பாணபுரீஸ்வரர். இறைவி அபிராமி தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார்.

மேற்கு நோக்கி நெடிதுயர்ந்த மூன்று நிலை ராஜகோபுரம், அதனை அடுத்து பெரிய வளாகத்தில் மையமாக நாயக்கர் பாணியிலான முகப்பு மண்டபம் பார்க்க மிக அழகானது செங்கல் வேலைப்பாடுகள் கொண்ட மண்டபம். ராமர் பூஜித்த இறைவன், பாணபுரீஸ்வரர் எனும் பெயர் கொண்டு அருள்புரியும் தலம். வடமேற்கில் விஸ்வலிங்கம் வாயுலிங்கம், விஸ்வநாதர், முருகன், லட்சுமி சன்னதிகள் உள்ளன. தென்மேற்கில் விநாயகர் உள்ளார்.

இறைவன் கருவறை சுற்றி ஓர் பிரகார அமைப்பு உள்ளது. துர்க்கை, பிரம்மன், விஷ்ணு, தென்முகன் விநாயகர் ஆகியோருக்கு கோட்டங்கள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் பெரிய வில்வமரம் ஒன்று உள்ளது. வடகிழக்கில் பெரிய யாகசாலை மண்டபம் உள்ளது. ஒரு காலத்தில் நான்கு தேர் வீதிகள் கொண்டு இருந்த கோவில் தற்போது அமைதியாக ஒரு அக்கிரகார தெரு என்ற பெயருடன் அதிக மக்கள் வரவின்றி உள்ளது.

தலவிருட்சம் அரசமரம். மூலவர் பாணபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக மேற்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார். சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் அபிராமி என்ற பெயரோடு தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறாள். திருக்கடவூரில் தன் ஆயுளை நீட்டித்து சிரஞ்சீவி வரமளித்த அன்னை அபிராமியையும் பெருமானையும் மார்க்கண்டேயர் இங்கு வழிபட்டார் என தலவரலாறு கூறுகிறது.

அதேபோல் அய்யனாரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு காவல் தெய்வமாக தனிக்கோவில் கொண்டுள்ளார் என திருக்குடந்தைப் புராணம் சொல்கிறது. அம்மன் சன்னதியின் இருபுறமும் நடராஜப்பெருமான், ஆடிப்பூர அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன.

வெளிச்சுற்றில் தல விநாயகர் பஞ்சலிங்கங்கள், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜ லட்சுமி, பிரம்மன், திருமால், தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன், சண்டேஸ்வரர் திருமேனிகளும், ஈசான திசையில் யாகசாலையும், தென்புறத்தில் பாண தீர்த்தமும் அமைந்துள்ளது.

பிற்காலச் சோழர் காலத்திலோ அல்லது அதற்குச் சற்று பின்போ கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இக்கோவில், பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களிடம் முதல் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதரால் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

பாத யாத்திரையாக தேச யாத்திரை செய்து வந்த போதேந்திர சுவாமிகள் இங்கு வந்து பாணபுரீஸ்வரர் மற்றும் அபிராமியை தரிசனம் செய்ததோடு இங்கேயே தன் இறுதிக்காலம் வரை தங்கி, ராம பிரான் பித்ரு காரியம் செய்து வழிபட்ட இத்தலத்தின் மற்றொரு புறமான கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் (ஞானசமாதி) கொண்டுள்ளார். வீரசோழன் ஆறு ஓடும் கோவிந்த புரத்தில் விஷ்ணுபாதம் மற்றும் கதாதரன் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள விஷ்ணு பாதம் ராமரால் பூஜிக்கப்பட்டது. தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணு பக்தர்களின் முன்னோருக்கான பிண்டங்களை ஏற்று நற்பேறு அருள்கிறார். கயைப் போலவே இங்கும் அரசமரமும், அருகிலேயே பல்குனியைப் போன்ற வீரசோழனாறும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கடன்களைச் செய்யத் தவறியோர், திதி தப்பியோர், திவசம் கொடுக்க முடியா தவர்கள், பித்ரு சாபத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் ஜோதிடக்குறிப்பு உள்ளவர்கள், நாடி ஜோதிடத்தில் வரும் குறிப்புக ளின்படி இங்குள்ள கதாதரன் சன்னதியை 16 திலதீபங்கள் ஏற்றி வழிபட்டு 16 முறை வலம் வருகிறார்கள். அதனால் பித்ருதோஷம் ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ இருந்தால் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

குறிப்பாக அவர்கள் அமாவாசை, பவுர்ணமி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விஷ்ணுபாதத்தையும் கதாதரனையும் வணங்கிச் செல்லும் நடைமுறை உள்ளது.

பாணபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஏகதினமாக தற்போது கொண்டாடப்ப டுகிறது. ஆடிப்பூரத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், கடைசி சோமவாரத்தில் 108 பூஜைகள், திருவாதிரை, பிரதோஷ மயிலாடுதுறையிலிருந்து வழிபாடு போன்றவற்றோடு, நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் தினமும் இரண்டு கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

இரண்டும் வெவ்வேறு கோவில்களாக இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று வரலாற்றுத் தொடர்பு கொண்டவையாக உள்ளன. உங்களுக்கு வாழ்வில் எந்தக் குறை இருந்தாலும் ஒரு முறை இத்தலம் வந்து ராம பிரான் வழிபட்ட அபிரா மியம்மை உடனாய பாணபுரீஸ்வர ரையும் வழிபடுங்கள். அதோடு, தட்சிண கயா, ஸ்ரீராம கயா என்றெல்லாம் போற்றப்படுவதும் ராமபிரான் தன் தந்தைக்கு உரிய பிதுர்கடனை செய்த இடம் கண்டு, அங்கே அவரது குறை யைப் போக்க கயையில் இருந்து வந்த கதாதரனை யும் ஸ்ரீவிஷ்ணு பாதத்தையும் தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் உன்னதங்கள் யாவும் வரும். இது பலரும் அனுபவித்த உண்மை.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரம் அக்ரகாரம் நிறுத்தத்தில் இறங்கினால், இடப் புறம் அரை கி.மீ.தொலைவில் பாணபுரத்தில் பாணபுரீஸ்வரர் கோவி லும், வலப்புறம் அரை கி.மீ.தொலைவில் கோவிந்த புரத்தில் கதாதர நாராயணன் கோவிலும் அமைந்துள்ளது.

இவை மட்டுமல்ல கோவிந்தபுரத்தில் பாண்டு ரங்கன் ஆலயமும் உள்ளது. பாண்டுரங்கனுக்கென தமிழகத்தில் சில கோவில்கள் இருந்தாலும், பண்டரிபுரம் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் கோவிந்தபுரத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவிலும், பகவான் நாமத்தின் மகிமையாலும் கோவிந்தபுத்தில் உருவான பாண்டுரங்கன் கோவிலில் 2011 ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா அன்று பரனூர் மகாத்மா ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகவான் நாமத்தின் பெருமையை நிலைநாட்டிய ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

729 சதுர அடி பரப்புள்ள கர்ப்பகிரகத்தில் உள்ள மேடையில் ருக்மணி சமேத பாண்டுரங்கன் காட்சி தருகிறார். பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு தினமும் கோ பூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நூறு கோடி விட்டல் நாமவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

கும்பகோணம் பக்தி பயணத்தில் இதையெல்லாம் பாார்த்து தரிசிப்பது உங்களுக்கு மேன்மை தரும். புண்ணியத்தைக் கொடுக்கும். தவற விடாதீர்கள்.

Tags:    

Similar News