கண்ணை மறைக்கும் காதல் ரகசியங்கள்
- காதல் என்பது மனம் சார்ந்த உணர்வா? வம்சம் தழைக்க இயற்கை வழங்கிய கொடையா? என்ற கேள்விக்கு எத்தனை யுகங்கள் கடந்தாலும் பதில் சொல்ல முடியாது.
- பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உங்கள் மேல் உள்ள காதலால் தான் உங்களை இழக்க மனமின்றி தவிக்கிறார்கள்.
காதல் ஒரு சுகமான அனுபவம். பருவ வயதை கடக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சுவாரசியமான சம்பவம். ஜடப்பொருளைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வு உண்டு. காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமல்ல. வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் நபர் மேல் உண்மையான அன்பு வைத்து இருந்தால் அது உள்ளுணர்வுடன் கலந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஆன்மாவுடன் இணைப்பில் இருக்கும்.ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி பலம் பெற்றால் அடுத்தடுத்து காதல் உருவாகிக் கொண்டே இருக்கும். இவர்கள் எந்த வயதிலும் காதல் உணர்வுடனே இருப்பார்கள்.ஆழ்மன உணர்ச்சியை தூண்டும் சம்பவங்கள் இவர்களின் அடுத்தடுத்த காதலுக்கு காரணமாக அமைகிறது. தான் ரோல் மாடலாக நினைக்கும் நபர்கள், சமுதாய அந்தஸ்துள்ள நபர்கள், சினிமா நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என மிகப் பெரிய காதல் லிஸ்ட்டு வைத்திருப்பார்கள். இவர்களுடன் மனதால் மானசீகமாக குடும்பம் நடத்துவார்கள். இவ்வளவு ஏன் இவர்கள் கடவுளை கூட காதல் உணர்வுடன் தான் பார்ப்பார்கள்.
ஐந்தாம் பாவகமும் காதலும்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.
பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5, 7, 11ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.
காதலும் சுக்ரன் ராகுவும்
சுக்ரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் பரவசம் பெருகும். வயது வித்தியாசமின்றி ஒருவரின் மனதில் இன்ப அலைகளை பரவ விடுவதில் சுக்ரனுக்கு நிகர் சுக்ரனே. காதலுக்கும், காமத்திற்கும் அடிமையாகாத நபரை உலகில் பார்ப்பது அரிது. எல்லா மனிதனுக்கும் பொதுவான, சிற்றின்பத்தை காதல் ஆர்வத்தை தூண்டும் கிரகம் சுக்கிரன். காதல் மற்றும் பெண் ஆசைக்கு பல கோட்டைகள் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு உள்ளோம். அந்த ஆசையை தூண்டுவது சுக்கிரன் தான். ஒரு மனிதனுக்கு அழகு கவர்ச்சியை கொடுப்பதும் சுக்கிரன் தான். ஒரு மனிதன், இப்பூமியில் வாழ்ந்தான் என்பதற்கு அடையாள மாக, தன் வாரிசை விட்டுச்செல்லும் அமைப்பிற்கு மூலகாரணமான, காதல், இல்லற இன்பத்தை அனுபவிக்கும் அமைப்பை கொடுக்கும் சிற்றின்ப அரசன் சுக்ரன் நவகிரகங்களில் வலிமை யானவரான ராகு. உலக இயக்கத்தை தன் பிடியில் வைத்தி ருப்பதுடன் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் நிழலால் தோஷமடையச் செய்பவர். ராகு மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு நின்ற இடம் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசை. ஏற்படும் ராகுக்கு சொந்த வீடு இல்லாததால் தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாகிக் கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார்.ஒரு ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறாரோ, அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ, அந்த கிரக காரகத்துவங்களும்,பாவக கிரக காரகத்துவ உறவுகள் தார்மீகமற்ற ஆசைகளை ஏற்படுத்து கிறார். ஒரு மனிதனுக்கு, எந்தெந்த வயதில், என்னென்ன தேவையோ, அது, அந்தந்த வயதில், சரியான அளவில் கிடைத்தே தீர வேண்டும் . அதுதான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கு முழு ஆதாரம். ராகுவோ, கேதுவோ தன்னுடன் 3 டிகிரி அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்களை கிரகணப்படுத்திவிடும். இதில், ராகு பிரம்மாண்டத்தையும், உலக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கும் கிரகம். இதில் பருவ வயதை ஒட்டி சுக்கிரனை கிரகணம் செய்த, ராகு திசை நடந்தால், அதிலும் குறிப்பாக சுக்கிரனின் வீடுகளான, ரிஷபம் துலாத்தில் ராகு, சுக்கிரன் இருந்து ராகு திசை நடந்தால் காதல் கண்டிப்பாக ஏற்படும். சுக்கிரன் வலுவாகி சனியுடன் நெருக்கமாக இணைந்து, தசை நடந்தால் தனக்கு ஒவ்வாத அமைப்பில், எதிர்பாலினத்தின் மேல் ஈர்ப்பு ஏற்படும். சுக்கிரனின் வீடுகளில் ராகு அமர்ந்து, ராகு ,சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டு, சுக்கிர புத்தி அல்லது ராகு புத்தியோ நடந்தாலும்,இது போன்ற காலகட்டங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேலும் ராகு தசை சுக்ர தசை, சுக்ர புத்தி ராகு புத்தி, போன்ற காலகட்டங்களில் எவ்வளவு வயது முதிர்ந்தவராக இருந்தாலும் காதல் உணர்வு அரும்பும்.பலர் பாலியல் வழக்கில் சிக்குவது இது போன்ற காலகட்டத்தில் தான். முறைகேடான உறவை மட்டுமே அடைய நினைக்கும் எண்ணத்தை தூண்டி காதலால் அசிங்கம், அவமானம், நிம்மதியின்மை நீடிக்கச் செய்வார்கள்.
டீன் ஏஜ் பருவம்:-
மனிதன் வாழ்வில் இரண்டாம் நிலையில் அடியெடுத்து வைக்கும் காலம். முப்பது வரை தொடரும் இப்பருவத்தை நினைத்தாலே இனிக்கும் பருவமெனச் சொல்லலாம். புதிய நண்பர்களின் அறிமுகம், அவர்களுடன் கேலி, கொண்டாட்டங்கள், நள்ளிரவு விருந்துகள், விதவிதமான பைக், கார்களில் நெடுந்தூர திரில் பயணங்கள், காதல் உணர்வு என வாழ்க்கை படு சுவாரஸ்யமாக தொடங்குவது இப்பருவத்தில்தான். தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க வேண்டிய தருணமும் இதுவேயாகும். அதேசமயம், கேலி, கொண்டாட்டங்களும், காதலும் மட்டுமே இந்த நிலையை அர்த்தப்படுத்தி விடாது. உண்மையில் நாம் யார், வாழ்வில் என்னவாக போகிறோம், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் ஒருவருக்கு இந்த நிலையில் எழுந்தால் அதுவே இந்த நிலையை முழுமை யாக்கும். மேலும், இந்த நிலையில் பெரும்பாலும் மனம் சார்ந்து உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதையே விரும்புவார்கள். அவ்வாறு செயல்பட விரும்பும்போது மனம் எல்லைகள் இல்லாமல், கட்டுப்பாடற்று தன் போக்கில் பயணப்பட விரும்பும்.
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
இந்த பாடல் வரிகளில் இருந்து காதல் என்ற உணர்வு உயிரையும் எடுக்கும் என்று உணர முடிகிறது. உலகம் தோன்றியது முதல் காதல் இருந்தாலும் இந்த நவநாகரீக உலகில் நடக்கும் காதல் பிரச்சினைகள் மனித குலத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது.
ஒருவரின் உணர்வை தூண்டும் காதலை முறையான காதல், முறை தவறிய காதல் என வகைப்படுத்தலாம். அறியாத இளம் பருவத்தினர் இனக்கவர்ச்சியால் பருவக் கோளாறினால் செய்யும் காதலை கூட அறியாப் பருவம் என்று மன்னிப்பு கொடுக்கலாம். முறையற்ற கீழ்தரமான காதல் பல குடும்பங்களை கூறு போடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். முறையற்ற காதலால் எத்தனையே கணவன்கள், மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள்,
நண்பர்கள் பாதிகப்பட்டு இருக்கிறார்கள். புனிதமான இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு இந்த அந்நிய நாட்டு கலாச்சாரம் ஒத்து வருமா?அடுத்தவரின் குடும்பத்தை கெடுக்கும் தவறான நட்பு போற்றுதலுக்குரியதா? அடுத்தவரின் மனைவியை பெற்ற தாய்க்கு சமமாக நினைக்க வேண்டும். சக பெண்ணின் கணவரை உடன் பிறந்தவராக பாவிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் மரபு. ஒருவர் செய்யும் தவறால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்ற உணர்வு வராதா?பருவ வயதினர்கள் முதல் வாழ்நாளை எண்ணும் முதியவர்கள் வரை ஏதாவது ஒரு காதல் உணர்வு ஆழ்மனதில் உருத்திக் கொண்டு தான் இருக்கிறது.
எந்த வகை காதலாக இருந்தாலும் ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதியுடன் இணைந்த கிரகங்கள் மற்றும் புதன்+கேது சம்பந்தமுமே காதலுக்கு காரக கிரகங்களாகும். புதனும் கேதுவும் வைத்த புள்ளியை கோலமாகவும் அலங்கோலமாகவும் செய்வது உடன் இருக்கும் மற்ற கிரகங்களின் கோலாட்டம் என்றால் மிகைப்படுத்தலாகாது. ஒரு நாளைக்கு பத்து ஜாதகம் பார்த்தால் ஐந்து ஜாதகத்தில் காதல் பிரச்சினை தான் பிரதானமாக இருக்கிறது.
பன்னிரண்டு பாவகங்களில் ஏன் ஐந்தாம் பாவகத்தை காதலுக்கு ஒப்பிடு கிறார்கள் என்று ஆய்வு செய்தால் ஐந்தாமிடம் என்பது உள்ளுணர்வு, ஆழ்மனம் மற்றும் பூர்வ ஜென்ம தொடர்ச்சி. பூர்வ ஜென்ம வினையின் தாக்கத்தால் தொடர்ந்து வரும் உணர்வு என்பதால் தான் யாராலும் கட்டுப்ப டுத்த முடியாத ஒரு சமுதாய வியாதியாக பரவியிருக்கிறது.
காதலிப்பதும், காதலிக்கப்ப டுவதும் சுகமான அனுபவம் தான்.தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காதல் வயப்படாதவர்கள் இருப்பது அரிது. காதல் என்பது மனம் சார்ந்த உணர்வா? வம்சம் தழைக்க இயற்கை வழங்கிய கொடையா? என்ற கேள்விக்கு எத்தனை யுகங்கள் கடந்தாலும் பதில் சொல்ல முடியாது. ஜோதிட ரீதியாக இந்தக் கேள்விக்கு விதிப் பயன், வினைப் பதிவு என்று எளிதாக கூறிவிடலாம். மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் தோன்றி மறையும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வு உண்டு.பகுத்தாயும் திறன் கொண்ட மனிதர்கள் உணர்வை அடக்க முயல வேண்டும்.உலகின் ஒவ்வொரு மூலையிலும் தன்னைச் சார்ந்தவர்களின் நலன் கருதி காதலர்கள் நண்பர்களாக வாழ்கிறார்கள் அல்லது எந்த தொடர்புமின்றி மனதளவில் தனிமையில் அழுது வாழ்கிறார்கள்.முறையற்ற மற்றும் குலகவுரவத்திற்கு விரோதமான காதல் நிச்சயமாக தவறுதான். தன் சுகத்தை விட தன்னைச் சார்ந்த வர்களின் உணர்வு மிக முக்கியம். பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் உங்கள் மேல் உள்ள காதலால் தான் உங்களை இழக்க மனமின்றி தவிக்கிறார்கள். அதனால் காதலிக்கும் முன்பு குடும்ப சூழலுக்கு இது ஒத்து வருமா? என்று யோசிக்க வேண்டும்.தன் நலத்தை மட்டும் யோசிக்க கூடாது.பெற்றோர் தேர்ந்தெடுத்த வரை திருமணம் செய்வது நல்லது.
பரிகாரம்
பலர்மன வேதனையுடன் ஜோதிடரை அணுகும் போது சொல்வது உறவுகளின் விருப்பம் என்ன? பரிகாரம் என்ன செய்தால் என் பிள்ளைய நான் மீட்க முடியும் என்பதாகவே இருக்கிறது. ஜோதிடர் ரீதியாகஇந்த கேள்விக்கு தீர்வு தர முடியும்.காதலுக்கு காரக கிரகம் புதன். காதலுக்கான தைரியத்தை தந்தாலும் காதல் பிரிவினையை தரக் கூடிய கிரகங்கள். செவ்வாய் மற்றும் ராகு.கோட்சார புதன் ஜனன கால செவ்வாய் மற்றும் ராகுவுடன் சம்மந்தம் பெறும் காலங்களில் பிள்ளைகளுடன், முறையற்ற நட்பில் இருப்பவர்களுடன் பேசும் போது நல்ல தீர்வு கிடைத்து பிரச்சினை முடிவுக்கு வருகிறது.
கோட்சாரத்தில் லக்னாதிபதி பன்னிரண்டில் மறையும் போது அல்லது கோட்சாரத்தில் ஆறு,எட்டு,பன்னிரண்டாம் அதிபதிகள் லக்னாதிபதி மேல் சஞ்சரிக்கும் போது எடுக்கும் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர் களின் மனதில் தெளிவை ஏற்படுத்துகிறது.
உளவியல் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் பத்தாவது கிரகமான தகவல் தொடர்பு சாதனமான செல்போன் பலரின் வாழ்க்கையில் விளையாடுகிறது. கொரோனா காலத்தில் மிதுனத்தில் சஞ்சாரம் செய்த கோட்ச்சார ராகு கல்வி நிறுவனங்களை மூடச் செய்து அனைத்து பிள்ளைகளுக்கும் ஆன்லைன் வகுப்பு என்ற போர்வையில் செல்போனை பரிசாக தந்து விட்டது.கிரகங்கள் தங்கள் கடமையை செய்யட்டும். பெற்றோர்கள் தங்களின் பங்களிப்பாக செல்போனை அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் செல்போனை பயன்படுத்தும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும்.
பிள்ளைகளை தவறான பிரச்சினைக்காக தகாத வார்த்தைகளால் திட்டக்கூடாது, அடிக்கக் கூடாது, சபிக்க கூடாது. அன்பால் திருத்த முயற்சிக்க வேண்டும். புதன்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிவரையான ராகு வேளையில் வெள்ளை பசுவிற்கு பசும்புல்லை உண்ணத் தர வேண்டும். இரவில் உறங்கும் போது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைக்கவும். காலையில் அந்த நீரை செடிக்கு ஊற்ற வேண்டும்.
தவறான உறவுகளால் வரும் பிரச்சினைகளுக்கு கருட பகவானை வழிபடலாம்.