சிறப்புக் கட்டுரைகள்

பாலர் மருத்துவம்

Published On 2024-02-11 08:55 IST   |   Update On 2024-02-11 08:55:00 IST
  • பதினெட்டு வகையான கரப்பான் நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் “பால வாகடம்” கூறுகிறது.
  • மூலச்சூடு அதிகமாவதால் குழந்தைகளுக்கு நாவேக்காடு ஏற்படும்.

குழந்தைகளுக்கு வரும் நோய்களை நம் முன்னோர்கள் முற்காலம் தொட்டே அனுபவ முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரிசெய்து வந்தனர். வாய்விட்டு பேச தெரியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட அவர்களின் அழுகை, உறக்கம், மலம், நீர் இவற்றின் தன்மைகளை வைத்து நோயின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற மருந்துகளை வழங்கினர். அதன் நுட்பத்தை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் நோய்களின் குறிகுணம் மற்றும் அவற்றை நீக்குவதற்கான எளிய வழிமுறைகளையும் நாம் அறிந்து வருகிறோம். அவ்வகையில் இந்த கட்டுரையில் குழந்தைகளுக்கு ஏற்படும் கரப்பான், சுரம், சன்னி, காமாலை போன்றவற்றை குறித்து அறியலாம்.

குழந்தைகள் கடின உணவு பொருட்களான சோளம், கம்பு, வரகு, வாழைக்காய், பாகற்காய், கெளிற்றுமீன் போன்றவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் கரப்பான் எனப்படும் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயால் உடலில் அரிப்பு, புண், தடிப்பு, வெடிப்பு, நீர்க்கசிதல் போன்ற குறிகுணங்கள் ஏற்பட்டு உடலின் இயற்கை நிறம் மாறுபடும். பதினெட்டு வகையான கரப்பான் நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் "பால வாகடம்" கூறுகிறது.


கரப்பான் ஏற்பட்ட இடத்தில் திரிபலா கஷாயம் அல்லது வேப்பம்பட்டை கஷாயத்தை வைத்து நன்றாக துடைக்க வேண்டும். பின்பு அவ்விடத்தில் பூவரசன் இலை பழுப்பை சுட்டு கரியாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்து தடவலாம் அல்லது புங்கன் விதையை சுட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்து போட அரிப்பு, தடிப்பு, நீர்க்கசிவு மாறும். தேவைக்கேற்ப சித்த மருத்துவர்களின் பரிந்துரைப்படி உள்மருந்துகளை வழங்கி வரலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமலும், வயிற்றில் பூச்சி தங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கரப்பான் நோய் தொற்றும் குணமுடையது. கரப்பான் புண்ணிலிருந்து கசியும் நீர்பட்டால் அங்கும் கரப்பான் உண்டாகி விடும். எனவே முடிந்த வரை சுத்தமாக துடைத்து அடிக்கடி வெளிமருந்திட்டு வர விரைவில் ஆறும்.

அடுத்து அக்கரம் எனப்படும் அச்சரம் குறித்து காணலாம். மூலச்சூடு அதிகமாவதால் குழந்தைகளுக்கு நாவேக்காடு ஏற்படும். இதனால் குழந்தைகளின் நா வெளுத்து மாவு படிந்து காணப்படும். மிளகின் காரத்தை கூட தாங்க முடியாது. சொள்ளு நீர் வாயிலிருந்து அதிகமாக வடியும்.

வாயில் அக்கரம் ஏற்படுவதற்கு மூலச்சூடு மட்டுமின்றி பல காரணங்கள் உண்டு. வாய் சுகாதாரமின்மை அதில் முக்கியமானதாகும். எனவே முறையாக பல் துலக்கி வாய் கொப்பளித்துவரின் வாய்ப்புண் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும். வாயில் புண்ணுண்டானால் திரிபலாக் குடிநீர் அல்லது தேன் சிறிது நீரில் சேர்த்து வாய் கொப்பளித்து வரலாம். மாசிக்காய் அல்லது வசம்பு சுட்ட சாம்பலை நெய்யில் குழைத்து புண்ணுக்கு பூசிவரலாம். வெப்பு குணமிருந்தால் நல்லெண்ணைய் விட்டு வாய்க்கொப்பளித்து வரலாம்.

காரசாரமான உணவுகளை தவிர்த்து திரவ ஆகாரங்களை உட்கொள்ளலாம். பால் சாதம், இடியாப்பம், கஞ்சி, நெய், மோர் போன்றவைகளை அருந்தலாம். அதிக சூடாக அல்லது குளிர்ச்சியாக உண்பதை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக சுரம் குறித்து காணலாம். சுரமானது குழந்தைகளுக்கு தனி நோயாகவோ அல்லது வேறு நோய்களுக்கு குறிகுணமாகவோ ஏற்படலாம். சுரத்தை பொறுத்தவரை சரிவர கணித்து உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சரிவர சிகிச்சை அளிக்காது விட்டால் வலிப்பு போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் வெப்ப அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

நல்ல சுத்தமான பருத்தி துணியை நீரில் நனைத்து தண்ணீரை பிழிந்து நெற்றி பகுதியில் வைத்து எடுக்க வேண்டும். மேலும் உடலையும் துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் உடலின் அதிகப்படியான வெப்பநிலை குறையும். உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க இது மிக உதவியாக இருக்கும்.


சுரம் வந்த குழந்தைகளுக்கு சுக்கு, மிளகு, அரிசிதிப்பிலி, சுட்ட வசம்பு சம அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி குடிநீராக்கி தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை தேன் கலந்து 10 மி.லி., – 20 மி.லி., கொடுத்து வரலாம்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு மாந்தத்தால் சுரம் ஏற்படும். அந்நிலையில் வெங்காயம், வில்வ இலை, அவுரி ஒவ்வொன்றும் ஒரு பிடி எடுத்து குறுக அரிந்து சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு வேளைக்கு இரண்டு சங்களவு வீதம் மூன்று நாட்கள் கொடுக்க மாந்த சுரம் தணியும்.

சித்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப பால சஞ்சீவி மாத்திரை, கஸ்தூரி மாத்திரை மற்றும் நிலவேம்பு, ஆடாதோடை போன்ற கஷாய வகைகளை வழங்கி வரலாம்.

உணவாக சுக்கு, பாசிப்பயிறு, நெற்பொரி மூன்றும் கூட்டி கஞ்சி செய்து வழங்கி வரலாம். மந்த உணவுகளான பால், இறைச்சி வகைகள், மாவுப்பொருட்கள், மாங்காய், தேங்காய், முட்டை, பழங்கஞ்சி போன்றவற்றை காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டும். முடிந்த வரை திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மந்த உணவுகளை சுரம் உள்ளபோது சேர்த்துக்கொண்டால் சந்நி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனையே திருமூலர் சித்த மருத்துவ நூல்களில்

"உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்

அற்றே வருமட்டும் அன்னத்தை காட்டாதே" என்று உரைக்கின்றார். அடுத்ததாக குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் குறித்து காணலாம். மலமானது தண்ணீராகவும், அடிக்கடியும் குழந்தைகளுக்கு கழியும். சில குழந்தைகளுக்கு மலமானது அடிக்கடி சீதமாகவும் அல்லது ரத்தமாகவும் அல்லது இரண்டும் சேர்ந்தும் கழியும். சித்த மருத்துவ நூல்கள் கழிச்சலை மூன்று வகையாக கூறுகிறது. கழிச்சலுக்கு கூறப்பட்டுள்ள மருந்துகள் பெரும்பாலும் குடிநீராகவே இருக்கிறது இதன் மூலம் கழிச்சலினால் ஏற்பட்ட நீரிழப்பு தீரும். தற்கால மருத்துவமும் கழிச்சல் ஏற்பட்டவர்களுக்கு நீரிழப்பு மற்றும் உப்புகள் இழப்பை சரிசெய்வதையே முதல் நிலை மருத்துவமாக கொண்டுள்ளது.

கழிச்சல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு மாதுளை பழத்தோல் மற்றும் சுக்கு இரண்டும் 15 கிராம் அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி இறக்கி 15-30 மிலி அளவு தேனுடன் சேர்த்து வழங்கி வரலாம்.

மாங்கொட்டை, வசம்பு, சுக்கு, வெள்ளுள்ளி ஆகிய பொருட்களை கருக வறுத்து நீர்விட்டு காய்ச்சி பருகினாலும் கழிச்சல் நிற்கும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு கழிச்சல் ஏற்பட்டால் மஞ்சளை வசம்பின் மேல் 5 முறை அரைத்து தடவி உலரவிட்ட பின் தீயில் கருக்கி அரைத்து ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை மோர், தாய்ப்பால் அல்லது தேனில் கலந்து கொடுக்க உடனே கழிச்சல் அடங்கும்.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி மலக்கட்டு ஏற்படும். அந்த நிலையில் உயர்ந்த ரக காய்ந்த திராட்சை ஐந்தை வெந்நீரில் போட்டு பிசைந்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வந்தால் மலக்கட்டு நீங்கும்.

குழந்தைகள் போதுமான சுகாதாரமின்மையால் குடற்புழுவால் பாதிக்கப்படுகின்றனர். அசுத்தமான நீர், உணவு போன்றவற்றாலும், நகம் வெட்டாது வளர்த்தல், உணவு உண்ணும் முன் கை கழுவாமை, அசுத்தமான இடங்களில் காலில் செருப்பணியாமல் செல்லுதல் போன்றவற்றாலும் குடல்புழு ஏற்படுகிறது. இந்த குடற்புழுவினால் குழந்தைகள் உறங்கும் போது பல் கடிப்பது, அரைக்கண் மூடிய தூக்கம், முகத்தில் வெள்ளை தழும்புகள், வயிற்றுவலி, மலத்துவாரத்தில் அரிப்பு, ரத்த சோகை, சளி, மேல் மூச்சு வாங்குதல், முடி உதிர்தல், தொப்புளை சுற்றி வலி, சுரம், வலிப்பு போன்ற குறிகுணங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

வாய்விடங்கத்தை பொடி செய்து 2 முதல் 3 சிட்டிகை தேனிலோ அல்லது வெந்நீரிலோ வாரம் ஒரு முறை வீதம் 4 வாரங்கள் கொடுத்து வர வயிற்றுப் புழு ஒழியும். பப்பாளி விதையை பொடி செய்து 2 கிராம் வீதம் தேன் கலந்து வாரம் ஒரு முறை கொடுத்து வர குடற்புழு சாகும்.

சில குழந்தைகளுக்கு கல்லீரல் மற்றும் பித்தப்பை கோளாறினால் காமாலை ஏற்படும். இந்நிலையில் கண் வெள்ளை விழி மற்றும் நகங்கள் மஞ்சள் நிறமாகின்றது. நாளடைவில் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாகும். சில சமயங்களில் சுரமும், வாய்கசப்பும் ஏற்படுவதுண்டு. பசி மந்தமும் வயிற்று உப்பிசமும் சிலருக்கு காணும். காமாலை என்றாலே பொதுவாக அனைவரும் பயப்படத்தான் செய்கிறார்கள். நோயை அறிந்து தக்க மருத்துவம் செய்தால் விரைவில் குணமாகும். குழந்தைகளுக்கு ஊது காமாலை, வரட்காமாலை, மஞ்சள் காமாலை என மூன்று வித காமாலை ஏற்படுவதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

காமாலை நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி கீழாநெல்லி, மணத்தக்காளி இலை எடுத்து பசுந்தயிரில் அரைத்து கொடுக்கலாம். மூன்றுமுறை அல்லது நோய் நீங்கும் மட்டும் கொடுக்கலாம். உப்பு, புளி நீக்கி பத்தியம் கடைபிடிக்க வேண்டும். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இரண்டையும் ஒரு பிடி எடுத்து இடித்து சாறு எடுத்து சுத்தமான தேன் கலந்து 30 மிலி அளவு காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

வாந்தி, விக்கல் குழந்கைகளுக்கு ஏற்பட்டால் மாதுளம்பூ, நெற்பொரி, நாட்டு சர்க்கரை, திப்பிலி சரி எடை எடுத்து பொடித்து, தேனில் கலந்து வழங்கலாம்.


தூக்கத்தில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பது மூன்று வயது வரை இயல்பான ஒன்றாகும். அதற்கு மேல் படுக்கையில் சிறுநீர் கழித்தால் மருத்துவம் செய்வது நல்லது. பெரியவர்கள் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் நேரத்தை அறிந்து அவர்களை எழுப்பி விட்டு பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்கட்டும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே மலக்கட்டு ஏற்படும் பட்சத்தில் உடனே சரிசெய்ய வேண்டும். சுண்டைக்காய், அவரை பிஞ்சு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு பண்டங்களை குறைக்க வேண்டும்.

நெல்லிக்காய் வற்றல் 100 கிராம், சாதிக்காய் 25 கிராம் எடுத்து நன்றாக வறுத்து இடித்து மண் சட்டியில் போட்டு பாலை ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பாலை நீக்கி மருந்தை நிழலில் உலர்த்தவும். எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை காலை மாலை வழங்கி வர படுக்கையில் சிறுநீர் கழிப்பது குணமாகும்.

கரு உருவானதில் இருந்து குழந்தை பிறந்து வளரும் வரை அவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தடுப்பு முறையும் நோய்கள் தீர்க்கும் முறையும் நம் முன்னோர்கள் நல்ல முறையில் கடைபிடித்து வந்தனர். அவர்கள் கருத்துகளை மூடநம்பிக்கை என ஒதுக்கி விடாமல் அவற்றில் உள்ள அறிவியல் கருத்துகளை ஆராய்ந்து, புரிந்து கடைபிடிக்க வேண்டும். நவீன உலகின் மாற்றங்களால் நமது பாரம்பரியத்தில் உள்ள நல்ல விஷயங்களை இழந்து விட கூடாது. நமது குழந்தைகளின் நலன் காக்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றி குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்போம்.

Tags:    

Similar News