சிறப்புக் கட்டுரைகள்

ராகு தோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்

Published On 2024-02-08 16:39 IST   |   Update On 2024-02-08 16:39:00 IST
  • பூமி பாரம் தாங்காமல் சோர்வு அடைந்த அவர் சிவபெருமானை நோக்கி வழிபட்டார்.
  • சிவனை மட்டுமே வணங்கும் பழக்கம் கொண்டவர் பிருங்கி முனிவர்.

கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. இங்கு ராகு பகவானுக்கு தனி கோவில் இருக்கிறது. இதனால் இந்த தலத்தை ராகு தோஷம் போக்கும் அற்புதமான தலமாக கருதுகிறார்கள்.

கும்பகோணத்துக்கு ஆலய யாத்திரை செல்பவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்று வந்தால் பல்வேறு தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பாடல்பெற்ற சிவாலயங்கள் வரிசையில் 90-வது ஆலயமாக இந்த ஆலயம் உள்ளது.

இந்த தலத்தில் சிவபெருமானை நாகராஜா வழிபட்டு சக்தி பெற்றார். அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் தேவர்களின் கைகளுக்கு சென்றதும் அசுரனான ராகு உருமாறி சென்று அமிர்தத்தை வாங்கி அருந்தினான். இதை அறிந்த மகாவிஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க அவனது தலை தனியாகவும், உடம்பு தனியாகவும் பிரிந்தது.

என்றாலும் அமிர்தம் சாப்பிட்ட காரணத்தால் தலை பகுதியில் மட்டும் உயிர் இருந்தது. அந்த தலை பகுதி ராகு மனம் வருந்தி சிவபெருமானை வேண்டி வழிபட்டார். அவனுக்காக இரக் கப்பட்ட சிவபெரு மான் அவனுக்கு பாம்பு உடல் கொடுத்து நிழல் கிரகமாகவும் மாற்றினார். ஒரு சமயத்தில் ஆதி சேஷன் பூமியை தாங்கிக் கொண்டிருந்தார்.

பூமி பாரம் தாங்காமல் சோர்வு அடைந்த அவர் சிவபெருமானை நோக்கி வழிபட்டார். அவனுக்கு காட்சியளித்த சிவ பெருமான் கும்பகோணம் பகுதியில் வில்வம் விழுந்த இடமான நாகேஸ்வரம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும் என்றார். அதன்படி நாகராஜா நாகேஸ்வரம் வந்து லிங்க பிரதிஷ்டை செய்து ஈசன் அருள் பெற்று சக்தி பெற்றார்.

இதன் காரணமாக இந்த தலத்து இறைவனுக்கு நாகநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ராகு இந்த தலத்தில் ஆற்றல் பெற்றதற்கு இன்னொரு வரலாறும் கூறப்படுகிறது. சுசீலர் என்ற முனிவரின் மகனான சுகர்மன் என்பவனை நாக அரசனான தக்கன் தீண்டி விட்டான். இதனால் சுசீலர் கோபம் கொண்டு, தன் மகனைத் தீண்டிய தக்கனை நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாய் என சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் கருத்துப்படி பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் செண்பக மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான், தக்கன்.


அவனுக்கு சிவன் காட்சி அளித்து சாப விமோசனமும் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இங்கு 12 தீர்த்தங்கள் உள்ளன. ஆதியில் செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளி இருந்ததால் இறைவனுக்கு செண்பகா ரண்யேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இவருக்கு வில்வனேசர், பாதாள பீஜனாதர், செண்பகா ஆரண்யேஸ்வரர், திருநாகேஸ்வரமுடையார், மகாதேவர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இவரை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடி அருள் பெற்றுள்ளனர்.

சிவாலயம் என்றாலும் ராகு ஆற்றல் பெற்றதால் இங்கு அவருக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் உடனே பலன் தருவதாக நம்பிக்கை உள்ளது. பொதுவாக ராகுவை மனிதத்தலை, நாக உடலுடன் காண முடியும். ஆனால் இக்கோவிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகு பகவான், கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாககன்னி ஆகிய தன் இரு தேவியருடன் மங்கள ராகுவாக தனிக்கோவிலில் அருள்கிறார்.

இவரை வழிபட்டால் ராகு-கேது தோஷம், திருமணத்தடை, பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் மாங்கல்ய தோஷம், நீங்கும். ஜாதகத்தில் ராகுதசை, ராகு புக்தி நடப்பவர்கள் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பலன் பெறுகிறார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பால் நீலநிறத்தில் மாறுவது அதிசயமாக கருதப்படுகிறது.

ராகு தோஷம் போக்கி கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று இந்த தலத்துக்கு வந்து ராகு காலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இந்த ஆலயத்தில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும். கல் நாகத்தை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம்.

ராகு தோஷம் மிக கடுமையாக இருந்தால் செவ்வாய்க்கிழமை, அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் இங்கு விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

இந்த தலத்து அம்பாளுக்கு பிறையணி வாள்நுதல் அம்பாள் மற்றும் கிரிகுஜாம்பாள் என்று இரு பெயர்கள் உள்ளன. அதற்கு ஏற்ப இத்தலத்தில் அம்பாளுக்கு இரண்டு சன்னதிகள் அமைந்து உள்ளன. சுவாமி சன்னதிக்கு அருகில் பிறையணி வாள்நுதல் அம்மையை தரிசனம் செய்யலாம். பி என்றால் சந்திரன். நுதல் என்றால் வாள் போன்ற நெற்றியை உடையவள் என்பது பொருளாகும். நெற்றியில் பிறைச்சந்திரனைத் தரித்தவள் என்ற அர்த்தமும் உண்டு.

அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பவுர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகிறது. கார்த்திகை மாதத்து பவுர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.


அவள் கிரிகுஜாம்பிகை என்ற பெயரோடு இங்கு அருள் வழங்கிக்கொண்டிருக்கும் வரலாறு வித்தியாசமானது. பிருங்கி முனிவர் கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார். இதனால் கவலை கொண்ட பார்வதி, சிவனை பூஜை செய்து இருவரும் ஒன்றாய் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி அக்னிப் பிழம்பில் கடும் தவம் புரிந்தாள்.

பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள். சிவனும் அவ்வாறே ஆகுக என ஆசி வழங்கினார்.

சிவனை மட்டுமே வணங்கும் பழக்கம் கொண்டவர் பிருங்கி முனிவர். இருவரும் ஒன்றானதால் சிவனை மட்டும் அவர் வணங்கிச் செல்ல முடியாது என நினைத்தாள். ஆனால் பிருங்கி முனிவர் தான் கொண்ட கொள்கை யில் உறுதியானவர். சக்தி அர்த்தநாரீஸ்வ ரர் ஆகி இறைவனின் இடது பாகத்தைப் பெற்ற பிறகு, பிருங்கி ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸ்வர உருவில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார்.

அதைக் கண்டு வெகுண்ட அம்மை, முனிவரிடம் இருந்த தன் பாகமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், ரத்தத்தையும் திரும்பப்பெற்றுக் கொண்டாள். அதனால் எலும்புக் கூடாக மாறி வேதனையுடன் மெல்ல மெல்ல நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செய்கையை பிருங்கி முனிவர் விடாமல் செய்து கொண்டிருந்தார்.

தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட சிவபெருமான், நீ என்னை விட்டுப் பிரிந்து பூவுலகில் செண்பக வனம் சென்று சிலகாலம் தவம் செய்து வரும்படியும், உரிய காலத்தில் உரிய நேரத்தில் அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டார்.

சாபம் பெற்ற பார்வதிக்குத் துணையாக லட்சுமியும் சரஸ்வதியும் இருப்பார்கள் என்றும், அக்கோலத்தில் உன்னை வணங்குவோருக்கு அளப்பரிய கல்வி, புகழ், மேன்மை ஆகியவை குறைவின்றிக் கிடைக்கும் என சிவபெருமான் கூறினார்.

தேவியான பார்வதி பூலோகத்தில் செண்பக வனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். அந்தத் தவக்கோலத்திலேயே நவராத்திரி நாயகியரான மூவரையும் ஒரே சன்னதியில் தரிசிக்க முடியும்.

இந்த வரலாற்று அடிப்படையான இறைவியாக கிரிகுஜாம்பிகை சன்னதி தனிக்கோவிலாக உள்ளது. நாகநாதர் கோவிலின் வடகிழக்குப் பக்கத்தில் அன்னை கிரிகுஜாம்பாள் கோவில் நான்கு புறமும் மதிற்சுவர் கொண்டு விளங்கு கிறது. தெற்குப் புறமாக அக்கோவிலுக்குச் செல்லும் வாயில் கோபுர அமைப்போடு அமைந்துள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கோவில். மூன்று திசைகளில் கோபுரங்களும் மூன்று பிரகாரங்களும் உள்ளது. கோவிலின் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. சன்னதி முன்புறம் உள்ள கிழக்கு வழி அடைக்கப்பெற்று, அதன் முன் ஒரு கூரை அமைப்புடைய மண்டபம் உள்ளது. அது வழியாக பைரவர் நடு ஜாமத்தில் திரிசக்திகள் மூவரையும் வந்து வணங்கிச் செல்வதாக சொல்லப்படுகிறது.

அம்பாள் கோவிலில் முன்மண்டபம், உட்பிரகா ரம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை அமைந்துள்ளன. உட்பிரகார தொடக்கத்தில் வாயிலின் கிழக்குப் புறத்தில் இருபுறமும் சங்கநிதி, பதும நிதியங்கள் உள்ளன. தென்கி ழக்கு மூலையில் பாலவிநாயகரும், வடமேற்கு மூலையில் பாலசுப்பிரமணியரும், கிழக்கில் பைரவரும் இருந்து அருள்கின்றனர்.

இங்கு கருவறையில் அன்னை தவக்கோ லத்தில் நின்றகோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவளுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படும். கிரிகுஜாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.

வலதுபுறம் வீணையை கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் அருளுகின்றனர். இவர்கள் மூவரையும் வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார்கள்.

திருநாகேஸ்வரம் நாகநாத கோவிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. இது அவரது அவதாரத் தலம். கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஞாயிறு தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு கால நேரத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனாலும் சிறப்புக்கு சிறப்பாக நவராத்திரி நாயகியரான கிரிகுஜாம்பிகை சன்னதியில் நவராத்திரி பண்டிகை பத்துநாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News