சிறப்புக் கட்டுரைகள்

பாலர் மருத்துவம்

Published On 2024-02-02 16:41 IST   |   Update On 2024-02-02 16:41:00 IST
  • குழந்தை பிறந்தவுடன் அதுவரை இருந்த சூழ்நிலைக்கு புறம்பான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழத் துவங்குகின்றது.
  • எட்டு வகையான காரணங்களால் 25 விதமான தோடங்கள் ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் 'பாலவாகடம்' உரைக்கின்றது.

பெரியவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவது போல் குழந்கைகளுக்கும் அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும். குழந்தைகள் பிறந்தது முதல் 12 வயது வரை கிரந்தி, தோஷம், மாந்தம், கணம், வலிப்பு, கரப்பான், சுரம், சன்னி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

சில தாய்மார்கள், குழந்தைகள் லேசாக சிணுங்கினால் கூட மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்துகளை வழங்குகின்றனர். அவ்வித குழந்தைகள் எப்போதும் நோயாளிகளாகவே இருந்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு முக்கியமாய் தவிர்க்க கூடாத சந்தர்ப்பங்களில் மட்டுமே மருந்தை உபயோகிக்க வேண்டுமே தவிர அடிக்கடி மருத்துவரிடம் காண்பிப்பதும், மருந்துகளை தருவதும் தவறாகும். இது குழந்தையின் வளர்ச்சியை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் பாதிக்கும். முடிந்த வரை குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை வீட்டில் உள்ள இயற்கை மூலிகை பொருட்களை வைத்தே மருத்துவம் செய்வது சிறந்ததாகும்.

குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்தவுடனேயே அதற்கு பல நோய்கள் ஏற்படக் காரணம் வெளிச்சூழ்நிலைகள் மட்டுமல்ல பெற்றோர்களின் உடல்நிலையும் அதற்கு காரணமாகிறது. இதனை அகக்காரண நோய்கள் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது. மேலும் குழந்தை பிறந்தவுடன் அதுவரை இருந்த சூழ்நிலைக்கு புறம்பான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழத் துவங்குகின்றது. இவ்வேறுபட்ட சூழ்நிலை காரணமாக குழந்தைக்கு விக்கல், பொருமல், வயிறு வீங்கல், பால் எதிரெடுத்தல், கொட்டாவி, வயிற்று நோய், மலக்கட்டு, நீர்க்கட்டு, தோடம் போன்ற புறக்காரண நோய்கள் ஏற்படுவதாகவும் நூல்கள் கூறுகின்றன. புறக்காரண நோய்கள் தீர சித்த மருத்துவ நூல்கள் கீழ்க்காணும் வைத்திய முறைகளை கூறுகின்றன.


குழந்தைகள் சீறி சீறி அழுதாலோ, குழந்தைகளுக்கு விக்கல், வயிறு பொருமல் ஏற்பட்டாலோ திப்பிலியை எடுத்து வெயிலில் உலர்த்தி பொடியாக்கி துணியில் வடிகட்டி, அந்த மெல்லிய பொடியை பசு நெய்யுடன் சேர்த்து தாயின் மார்பில் பூசி குழந்தையை பாலுண்ணும்படி செய்ய வேண்டும். இதனால் சீறியழுதல், விக்கல் பொருமல் தீரும்.

குழந்தைகளுக்கு சில நேரம் வயிறு லேசாக வீங்கி காணப்படும். அந்நிலையில் அதிமதுரப்பொடியை எடுத்து நீர் விட்டு அரைத்து வயிற்றில் பூசலாம். வீக்கம் படிப்படியாக குறையும்.

குழந்தைகள் பால் உண்ணாவிட்டால் அதிமதுரத்தை மெல்லிய பொடியாக செய்து, தாய்ப்பால் விட்டு அரைத்து தாயின் மார்பில் பூசி குழந்தையை பாலுண்ணும்படி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு மலங்கட்டினால் அதிமதுரம் -1 கிராம், வேப்பந்துளிர் -1கிராம், நாட்டு சர்க்கரை - 1 கிராம் எடுத்து மூன்றையும் நெய்விட்டு அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க மலம் போகும். நீர்கட்டினால் வெள்ளரி பழ விதையை தண்ணீர் விட்டு அரைத்து குழந்தையின் அடிவயிற்றில் பூச வேண்டும். நீரும் நன்றாக இறங்கும். பாலும் நன்றாக உண்ணும்.

குழந்தைகளுக்கு பால் எதிரெடுத்தால் வெள்ளைப்பூண்டு திரி - 5 எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு சட்டியிலிட்டு இளவறுப்பாக வறுத்து அத்துடன் ஓமம் சேர்த்து வெடிக்கும் போது நீர் விட்டு சரிபாதியாக காய்ச்சி குடிக்க செய்யலாம்.

அடுத்தது அகக்காரண நோய்கள் குறித்து காணலாம். குழந்தைகள் பிறந்தது முதல் மூன்று மாதத்திற்குள் கிரந்தி என்னும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும்போதே கபம்/குளிர்ச்சி அதிகம் சேர்வதாலும், தாய்க்குள்ள மேக நோயினாலும் இந்நோய் ஏற்படுகின்றது. செவ்வாப்பு, கருவாப்பு என இரண்டு வகையாக வழக்கத்தில் அழைக்கப்படும் இந்நோயில் செவ்வாப்பானது குழந்தையின் உடம்பு முழுவதும் சிவந்த நிறத்தால் மூடிக் கொள்ளும்.


இந்நோயை தடுக்கும் பொருட்டே நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பால் வழங்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். கழுதைப்பால் அதிக வெப்பமானதால் குளிர்ச்சியை குறைத்து இந்நோயை குறைக்கிறது. மேலும் செவ்வாப்பு ஏற்பட்ட குழந்தைகளை கோழி முட்டை வெண்கருவை தேய்த்து குளிப்பாட்டலாம். குழந்தைகள் குளிக்கும் நீரில் செம்முள்ளி கீரையை போட்டு காய்ச்சி அந்நீரை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். ஒரு மாதம் வரை இவ்விதம் நீராட்டி முழுவதும் குணமானவுடன் எண்ணெய் குளியல் செய்விக்கலாம்.

அடுத்ததாக தோடம்/தோஷம் குறித்து காணலாம். குழந்தைகள் பிறந்த மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை தோடம் ஏற்பட வாய்ப்புள்ளது. எட்டு வகையான காரணங்களால் 25 விதமான தோடங்கள் ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் 'பாலவாகடம்' உரைக்கின்றது.

உடல் சுத்தமில்லாத ஆணோ, பெண்ணோ குழந்தையை தொடுவதாலும், தூக்குவதாலும், உடல் நிலை வேறுபட்டவர்கள் அதாவது குழந்தையின் உடற்சூட்டிற்கு ஒவ்வாத உடல் நிலை உள்ளவர்கள் தூக்குவதாலும், மாதவிலக்கான நேரங்களில் குழந்தையை தொடுவதாலும், கருக்கலைத்தவர்கள் சுத்தமில்லாத நிலையில் குழந்தையை தூக்குவதாலும், தொடுவதாலும், அடுத்தவரின் எச்சில் குழந்தையின் மீது படுவதாலும், நோயுற்ற காக்கை, குருவி போன்ற பறவைகள் பறந்து போகும்போது அவைகளின் நிழல் குழந்தைகளின் மேல்படுவதாலும் தோஷம்/தோடம் ஏற்படுகிறது.

குழந்தையை எப்போதும் கவனமாக வளர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓராண்டு காலம் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். வந்தவர், போனவர், நின்றவரிடம் குழந்தையை கொடுப்பது சிறிதும் நல்லதல்ல சிலருடைய மனவேகம், உடல் உணர்வுகள், வியர்வை இவைகள் குழந்தையின் உடல் நலத்தை கெடுக்கும். குழந்தையின் படுக்கை, குளியல் நீர், உடை இவைகளை இயன்ற அளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலே கூறிய பொதுவான விஷயங்களை கடைபிடித்தாலே குழந்தையை தோடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். தோடம் ஏற்பட்ட குழந்தையின் உடல் இளைக்கும், கெட்ட நாற்றம் வீசும், உச்சியில் குழி விழும், கண்கள் குழி விழுந்து காணப்படும். மேலும் குழந்தைகள் எப்போதும் கைகளால் தன் முகத்தை தேய்த்து கொண்டு அழும். மலம் வேறுபட்டு காணப்படும்.

தோடம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு அதிமதுரம், மரமஞ்சள், கடுக்காய்தோல், வசம்பு, கோரைக்கிழங்கு இவற்றை சம அளவு எடுத்து பொடுதலை சாறு விட்டு அரைத்து 130 மி.கி. அளவு தாய்ப்பால் அல்லது தேனில் வழங்கலாம். இப்படி மூன்று அல்லது ஐந்து நாட்கள் கொடுத்து வந்தால் அனைத்து தோடங்களும் நீங்கும். மேலும் வசம்பு, அறுகம்புல், கருந்துளசி மூன்றையும் சம அளவு எடுத்து மைபோல அரைத்து குழந்தையின் உச்சி தலையில் பற்றிடலாம்.

குழந்தைகள் பிறந்த ஓராண்டிலிருந்து முன்று ஆண்டுகள் வரை மாந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த ஓராண்டிற்குள் தாய் கடலை, வெல்லம், மாம்பழம், தேங்காய், எருமை பால், தயிர், நெய், மொச்சைக் கொட்டை, மாவினால் செய்யப்பட்ட பொருள்கள் வாயுப்பொருட்கள் போன்றவற்றை அதிகமாக உண்பதாலும், விரால் மீன், கெண்டை மீன், பாகற்காய் போன்றவற்றை உண்பதாலும் தாய்க்கு மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அத்தாயினிடம் பால் குடித்தால் குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக எந்த வகையான மாந்தமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவே காரணமாக அமையும் என்பதை உறுதியாக கூறலாம். ஆதலால் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதில் மிகவும் கவனம் வேண்டும்.

சில தாய்மார்கள் தங்கள் குழந்தை கனமாக இருந்தால் தான் அழகாகவும் வலுவாகவும் இருக்கும் என்ற ஆசையால் கண்டவர் பேச்சை கேட்டும் நம்பியும் கண்ட கண்ட உணவு பண்டங்களை கொடுக்கிறார்கள்.

இதனால் குழந்தையின் உடல் கனக்கும். மிகுதியான வியர்வை உண்டாகும். சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்திருக்கும், அடிக்கடி வாந்தியாகும், பசி ஏற்படாது, கெட்டுப்போன பால் போலவும், தண்ணீர் போலவும், பல நிறமாகவும் பேதி ஆகும். கைகால்கள் சூடு இல்லாமல் குளிர்ந்து போகும்.

இந்நிலையில் மாந்தத்தை போக்க குழந்தைகளுக்கு நொச்சியிலை, நுணா இலை, வேலிப்பருத்தி ஆகிய மூன்று இலைகளின் சாறை சரியளவு எடுத்து ஒன்றாக சேர்த்து சிறுபாலாடை அளவு குழந்தைக்கு காலையில் கொடுக்க வேண்டும். இவ்விதம் மூன்று நாள் கொடுக்க மாந்தம் குணமாகும்.

வெற்றிலைக்காம்பு, வசம்பு, வெள்ளைப் பூண்டு, திப்பிலி எடுத்து வெதுப்பி வெந்நீர் விட்டு அரைக்க வேண்டும். அதை குழந்தையின் பருவத்திற்கு தகுந்த அளவுப்படி எடுத்து நன்றாக காய்ச்சிய வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ய மாந்தம் தீரும்.

ஓமத்தை இளவறுப்பாக வறுத்து தூள் செய்து கொண்டு அதை வெந்நீரிலாவது அல்லது தாய்ப்பாலிலாவது போட்டு கொடுக்க வேண்டும். இதனால் மாந்தத்தால் உண்டாகும் வயிற்றுப்பொருமல், கழிச்சல், வாந்தி இவைகள் உடனே நீங்கிவிடும்.

முடிந்தவரை தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்போது எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன நிலையும், உடல் நிலையும் பெரிதும் குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும். எனவே தாய் கோபத்துடனும், மனச்சோர்வுடனும் குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும்.


மாந்தத்தின் தொடர் நோயாக குழந்தைகளுக்கு கணம் என்னும் நோய் ஏற்படும். இது குழந்தைகளது மூன்றாமாண்டு முதல் ஏழாமாண்டு வரை துன்பத்தை கொடுக்கும் நோயாகும். கணம் பொதுவாக குழந்தைகளுக்கு மாந்த நோய் பலமுறை வந்து அது முற்றிலும் குணமடையாமல் உடம்பின் உட்பகுதியிலேயே இருந்து முற்றி இருப்பதினால் உண்டாகும். மேலும் பலவகையான நீரை பருகுவதாலும், அதிக சலதோடம் ஏற்படுவதாலும், பசியுடனிருக்கும் தாயின் பாலை குழந்தை உண்பதாலும் கணநோய் ஏற்படுகின்றது. மொத்தம் 24 வகையான இந்த கனநோய் ஏற்படுவதால் குழந்தைகளுக்கு வயிறு நோகும், நா வேக்காடாகும், மேல் மூச்சுண்டாகும், கர் கர் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகும், சுரம் ஏற்படும்.

கணம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு நீர்முள்ளி, பூண்டு, வெங்காயம், கடுத்தாய்தோல், நெல்லிக்காய், தான்றிக்காய்தோல் ஆகியவற்றை எடுத்து இடித்து அதை பசுமோரில் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு சங்காக இருவேளையும் மூன்று அல்லது ஐந்து நாள் கொடுக்க அனைத்து வகையான கணமும் தீரும்.

நொச்சியிலை, துளசியிலை, முசுமுசுக்கை யிலை மூன்றையும் 1 பிடி எடுத்து ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து அதைக் காலையும், மாலையும் ஒரு சங்களவு வீதம் கொடுத்துவர மாந்தத்தை தொடர்ந்து வந்த கணம் தீரும்.

வில்வ இலை, துத்தியிலை, வெள்ளை வெங்காயம், வெந்தயம், சீரகம் ஆகியவற்றை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையாக மூன்று அல்லது ஐந்து நாள் கொடுக்க வேண்டும். இதனால் அனைத்து வகையான கணங்களும் தீரும்.

Tags:    

Similar News