"டேட்டிங்" செயலிகள் எனும் பேராபத்து...
- கருத்து பரிமாற்றம் என்ற அளவில் இருந்தவரை டேட்டிங்களில் பிரச்சனை இல்லை.
- ஆன்லைன் டேட்டிங் மோசடி கும்பல், சம்பந்தப்பட்ட நபரிடம் உருக்கமாக பேசி முதலில் அவர்களை நம்ப வைப்பார்கள்.
காதல்...
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும், இயற்கையாய் இருக்கும் உணர்வு.
இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலத்திலேயே காதல் உணர்வு அவனுக்கு இருந்தது.
சங்க இலக்கியங்களில் கூட காதல் குறித்து பல பாடல்கள் உள்ளன.
மனித குலத்துக்கு எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டிய அய்யன் வள்ளுவன் கூட அறத்துப்பால், பொருட்பாலுடன் இன்பத்துப்பாலையும் நமக்கு கொடுத்துள்ளார்.
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்குதல் இடத்து
என்ற குறளில் காதலின் வேகம் குறித்து வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தனிமையில் சந்திக்க வரும் காதலி தன்னுடன் இருக்கும்போது, உடலோடு உயிர் இருப்பது போல் உள்ளது. அவர் பிரிந்து செல்லும்போது உயிரே பிரிவதுபோல் உள்ளது என்று காதலன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே... காதல் வயப்பட்ட இருவர் சந்தித்துக்கொள்வது ஒன்றும் புதிது அல்ல. அது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது.
டேட்டிங்
காதல் சரி...
அது என்ன... 'டேட்டிங்'
ஆங்கிலத்தில் டேட்டிங் என்று கூறுவதற்கு தமிழில் பொருத்தம் பார்த்தல் என்று குறிப்பிடலாம்.
பொதுவாக டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த டேட்டிங் பார்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் தாங்கள் விரும்புவரை தங்களது தோழன், தோழி மூலமாகவே தொடர்பு கொண்டார்கள். பிற்காலத்தில் கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசி மற்றும் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.
ஆனால் இப்போது அப்படி அல்ல... நமக்கான தேர்வை நாமே தேர்ந்து எடுத்துக்கொள்வோம் என்று தங்களின் மனம் கவர்ந்தவரை குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரச்சொல்லி, இருவரும் மனம் விட்டு பேசி... விருப்பங்களை அறிந்து, பிடித்து இருந்தால் தங்கள் துணையாக தேர்ந்து எடுப்பதை டேட்டிங் என்ற பெயரில் செய்கிறார்கள்.
தடம் மாறும் நிலை
கருத்து பரிமாற்றம் என்ற அளவில் இருந்தவரை டேட்டிங்களில் பிரச்சனை இல்லை.
தனிமை சந்திப்புகள் எல்லை மீறி... உடல் ரீதியாக செல்லும் போதுதான் பிரச்சனையே ஏற்படுகிறது.
இந்த சந்திப்புகள் திருமணத்தில் முடிந்தால், எந்த விவகாரமும் ஏற்படாது. அது நடக்காத சூழல் வந்தால்...?
இன்றைய நிலையில் டேட்டிங் கலாசாரம் தடம் மாறும் சூழலில் இருப்பதால் பாதிக்கப்படுவர்கள் பலர் போலீஸ்நிலைய படிக்கட்டுகளில் ஏறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
செயலிகளால் வரும் ஆபத்துகள்
அறிவியல் வளர்ச்சியின் குழந்தையான செல்போனுக்கு, தம்பி-தங்கைகளாக பல்வேறு செயலிகள் வந்துவிட்டன. அவைகளில் பல நல்லவை. ஒரு சில செயலிகள் தீங்கானவை.
இன்று பல்வேறு செயலிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் டேட்டிங்கிற்கும் செயலிகள் வந்துவிட்டன. அதில் சில செயலிகள் பாதுகாப்பானவை. சில மிகவும் ஆபத்து நிறைந்தவை.
இந்த செயலி மூலம் ஒருவர் தனது விருப்பங்களை பதிவிட்டு, தேவையானவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து விடுவார்கள். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் அப்பாவிகள் மோசம் போவதும் உண்டு.
சமீபத்தில் சென்னை வடபழனி பகுதியில், டேட்டிங் செயலி மூலம் தான் தொடர்பு கொண்ட பெண்ணை சந்திக்கச் சென்றவரை, ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் அந்த பெண்ணுடன் அவரை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஏமாந்தவர்களில் பலர் போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இது மோசடி கும்பலுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
செயற்கை நுண்ணறிவு
இதுபோன்ற மோசடி செய்பவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களது குறியே நடுத்தர வயதுக்காரர்கள்தான்.
குடும்ப சுமை, பொருளாதார சிக்கல் போன்றவற்றில் சிக்கித்தவிக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் சிலர் இதுபோன்ற மோசடி கும்பலின் பிடியில் சிக்கி விடுகிறார்கள்.
டேட்டிங் செயலியில் அழகான பெண் பேசுவதுபோல் தொடர்பு கொண்டு தனிமையான இடத்துக்கு அழைத்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வைத்து, அதன் மூலம் மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மேலும் ஆன்லைன் டேட்டிங் மோசடி கும்பல், சம்பந்தப்பட்ட நபரிடம் உருக்கமாக பேசி முதலில் அவர்களை நம்ப வைப்பார்கள். பின்னர் மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம் என்று ஏதாவது ஒரு கதையை கூறி சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை கறந்துவிடுவார்கள்.
பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் டேட்டிங் மோசடிகள் டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் அதிகம் நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னையிலும் இந்த மோசடி அதிகரித்து வருகிறது.
2022-ம் ஆண்டு வெளியான தேசிய குற்ற ஆவணக்காப்பக தரவுகளின்படி டேட்டிங் மோசடிகள் நாடு முழுவதும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்த மோசடி மூலம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலிகளின் பெருக்கத்தால், இதுபோன்ற மோசடிகளும் அதிகரிப்பதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கிறார்கள்.
இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள், பெரும்பாலும் தங்களது ஐ.டி.களை கண்டுபிடிக்க முடியாத அளவில் குறிப்பிட்ட சில செயலிகளை பயன்படுத்துவதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு...
பாதுகாப்பற்ற செயலிகளை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடாது.
வெளியே தெரிந்தால் எங்கே பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சமே மோசடி பேர்வழிகளின் மூலதனம். அதை உடைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும்.