சிட்பண்டு- கிரிப்டோ கரன்சி சேமிப்பு பலன் தருமா?
- உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
- வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்துக்கு ஆண், பெண், கறுப்பு, சிவப்பு போன்ற எந்தப் பாகுபாடும் இல்லை. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி தன்னைத் தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்க அது தயாராகவே இருக்கிறது. அந்தக் கடல்களையும், மலைகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டி வருகிறோம். நமக்காகத் திறந்திருக்கும் பலவிதமான முதலீட்டுக் கதவுகளைக் காணும் பாதையின் முடிவில் இருக்கிறோம். இந்த வாரம் வங்கிகள் சென்றடையாத சிறு ஊர்களில் வசிக்கும் மக்களுக்குக் கூட சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை ஒன்றாகத் தரும் சிட்பண்டுகள் பற்றியும், உலகில் புதிதாக முளைத்து அனைத்து இளைஞர்களின் மனதிலும் குடியிருக்கும் கிரிப்டோ கரன்ஸி பற்றியும் பார்க்கலாம்.
சிட்பண்டுகள் சாதாரணக் குடும்பஸ்தர் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவருக்கும் பேருதவியாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள், பதிவு செய்யாமல் நடத்தப்படும் சிட்பண்டுகள் தவிர உறவினர்/ நண்பர்கள் என பத்து பேர் சேர்ந்தால் உடனே ஒரு சீட்டுக் குழு ஆரம்பிப்பதும் நடக்கிறது. நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. மாதம் ஒரு முறை மதிய நேரங்களில் சந்தித்து விளையாட்டுக்கள், உரையாடல்களுடன் பார்ட்டிகள் நடத்தும் சில பெண்கள் சீட்டுக் குழுவையும் நடத்துகின்றனர். டிஜிடலைசேஷனின் வருகைக்குப் பின் ஆன்லைனிலும் சீட்டுக் குழு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு சீட்டுக் குழுவுக்கும் ஒரு நடத்துனர் இருப்பார். 50 உறுப்பினர்கள், 50 மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000/ கட்டிவருவதை ரூ.50000/ சீட்டு என்பார்கள். முதல் மாதம் ஒருவர் சீட்டை ரூ. 45000/க்கு ஏலம் எடுத்தால், மீதி இருக்கும் ரூ.5000/ குழு உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். 5% அளவு கமிஷனை சீட்டு எடுத்தவர், நடத்துனருக்குத் தரவேண்டும். இது ஏலச்சீட்டு எனப்படும். குலுக்கல் முறையிலும் இது நடத்தப்படுகிறது.
இவை சிட்பண்ட்ஸ் ஆக்ட் 1982வின் கீழ் முறைப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலும், கர்நாடகாவிலும் மாநில அரசே சிட்பண்ட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மார்கதரிசி, ஸ்ரிராம் க்ரூப், முத்தூட், பாலுசேரி போன்ற தனியார் நிறுவனங்களும் இதில் பெயர் பெற்றுள்ளன. அதிக மதிப்புள்ள சீட்டுக்களில் பணம் எடுக்கும்போது, தங்கம், நிலம் என்று எதையாவது அடமானமாக வைக்கவேண்டி இருக்கும். ஹைதராபாதில் உள்ள மாடல் சிட் கார்பரேஷன் நடத்தும் ரூ. ஒரு கோடி வரை உள்ள சீட்டுக்களில் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெறுகின்றன.
தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர், வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? சிலர் சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். சரோஜா என்ற ஒரு பெண் தீபாவளிச் சீட்டு நடத்துபவருக்கு உதவி வந்தாள். மொத்தமாக 50 குடும்பங்களில் இருந்து மாதாமாதம் தலா ரூ.1000/ வசூல் செய்து, அவரிடம் கொண்டு தருவாள். தீபாவளியின் போது, பலசரக்கு, பட்டாசு, எவர்ஸில்வர் பாத்திரங்கள், துணிமணி என்று ஒவ்வொருவருக்கும் 15000/ பெறக்கூடிய பொருட்கள் தருவதாகப் பேச்சு.
தீபாவளி வந்தது. சீட்டு நடத்தியவர் சரோஜாவிடம் ஏழரை லட்சத்திற்கு பதில் நான்கு லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து, "எனக்குப் பெரிய நஷ்டம் வந்துவிட்டது. போலீஸில் வேறு என்னைத் தேடுகிறார்கள். இதை வைத்து சமாளி. நான் பிறகு வந்து மீதியைத் தருகிறேன்" என்று கூறிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகி விட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீதுதானே பாயும்? அந்த 50 குடும்பங்களின் கோபத்தை சமாளிப்பதற்குள் சரோஜா பட்ட பாடு! தலையை அடகு வைப்பது ஒன்றுதான் பாக்கி! இப்படி சில மக்கள் பாதிக்கப்படுவதும் உண்டு.
சுந்தரி ஜகதீசன்
நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக் கடைகளே காட்டி விட்டன. வட இந்தியாவில் நடைபெற்ற சாரதா ஊழல், ரோஸ்வேலி ஊழல் போன்ற பிரமாண்டமான ஏமாற்றுத் திட்டங்களால், பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள் மீது கூட சந்தேக நிழல் விழுகிறது.
மக்கள் உணராத ஒரு விஷயம் என்னவென்றால் சிட்பண்ட்கள் தரும் வட்டி வருமானம் 6.30% மாத்திரமே. ஏனெனில் நடத்துனருக்குத் தரவேண்டிய கமிஷன் ஒரு 5 சதவிகிதத்தை விழுங்கிவிடுகிறது. சிட்பண்ட், கடன் பெறுவதற்கு நல்ல வழி என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டால் சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது.
அப்படியானால் சீட்டுக் குழுக்களால் என்னதான் நன்மை? அவசரத்துக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கும், வங்கியை விட சிறிது அதிக வட்டி எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் சிட்பண்ட் உகந்ததாக உள்ளது. மாதாமாதம் ஒரு தொகையைச் சேமிக்கும் ஒழுக்கத்தை இது கற்றுத் தருகிறது. சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூ. ஐம்பது, நூறு என்று வசூலித்து, அவர்கள் மொத்தமாக சேமிக்க உதவும் சீட்டுக் குழுக்களும் உள்ளன. இதனால் அந்த வியாபாரிகள் தினந்தோறும் வங்கிகளுக்குச் சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது.
சீட்டை நடத்துபவர் நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது; சீட்டுக் கட்டுபவர்களும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காகத் திருப்பிக் கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அதனால் இதில் ரிஸ்க் அதிகம். ஆகவே பாலுசேரி, ஸ்ரீராம் சிட்பண்ட் போன்று பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் கம்பெனிகளில் சீட்டு சேர்வது உத்தமம்.
கிரிப்டோ கரன்சி
நண்பர் ஒருவரின் 24 வயது மகன் "புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். கிரிப்டோ அக்கவுன்ட் ஒன்று ஆரம்பித்து விட்டேன். வேறெங்கு முதலீடு செய்யலாம்?" என்று கேட்டபோதுதான் கிரிப்டோ கரன்சி எவ்வளவு தூரம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று தெரியவந்தது. உலக அளவில் அதிகக் கிரிப்டோ கரன்ஸி வாங்குவதில் வியட்நாமுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஆனால் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சரகமும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றன – "இந்தியாவில் அரசு அல்லாத தனி நபர் கிரிப்டோ கரன்ஸி செல்லாது" என்பதே அது. இதைக் கேட்ட பல இளம் முதலீட்டாளர்கள் "நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்" என்று கொதிக்கிறார்கள். நாட்டை விட்டுக் கூட வெளியேறும் அளவுக்கு அந்த கிரிப்டோ கரன்ஸியில் என்னதான் இருக்கிறது?
அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் பணம், வங்கிக் கணக்குகள் மூலமும், க்ரெடிட் கார்ட்/டெபிட் கார்ட்/யுபிஐ மூலமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோகரன்ஸி. டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை அந்தந்த நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
2009இல் சடோஷி நகமோடோ என்ற முகம் தெரியாத மனிதரால் பிட்காயின் என்னும் கரன்ஸி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ ஒரு டிஜிட்டல் கரன்ஸி; அதாவது அதை நாம் தொட்டுப்பார்க்க இயலாது. இவை ப்ளாக்செயின் என்ற டெக்னாலஜி மூலம் இணையதள பரிவர்த்தனைக்காக தயாரிக்கப்படுபவை. கிரிப்டோ கரன்ஸியில் டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 6700 வகை உண்டு.
கிரிப்டோகாயினை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்றால் கிரிப்டோகாயின் இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இந்த இணையதளங்களில் மட்டுமே கிரிப்டோகாயினை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. டெபிட் கார்டு வசதி கூட உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முதலீட்டு வகைகளில் ஒன்றாக மாறி வரும் இவற்றை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவதற்குக் காரணங்கள் உண்டு. இன்று பணவீக்கத்தில் இருந்து காக்கும் கருவியாக இருப்பவை தங்கமும், கிரிப்டோகரன்ஸியுமே. கள்ள நோட்டு அடிப்பது போல கள்ள கிரிப்டோகரன்ஸிகளை தயாரிக்க முடியாது. ஆனால் கிரிப்டோகரன்ஸியின் கோடிங் முறை தெரிந்தவர்கள் இவற்றைத் தயாரிக்க முடியும். எத்தனை கிரிப்டோகாயின்கள் தயாரிக்கலாம் என்பதற்கு வரம்பு இருப்பதால் இவை எதிர்காலத்தில் அதிக விலையேற்றம் காணும்.
ஆனால் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த கிரிப்டோ கரன்ஸிகள் வருவதில்லை என்பதால் மாபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரௌண்ட் ஆட்டங்களுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால் இதனை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா போன்ற எதுவும் யாருக்கும் தெரியாது.
கிரிப்டோவின் மதிப்பு ஏன் ஏறுகிறது; ஏன் இறங்குகிறது என்பது யாருக்குமே புரியாத மர்மம். 2011இல் ஒரு டாலராக இருந்த பிட்காயினின் விலை பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் 2025இல் 112000 டாலரைத் தொட்டு இறங்கியது. இதன் மதிப்பு தாறுமாறாக ஏறி இறங்குவதால் இதை கரன்ஸியாக பயன்படுத்தாமல் பதுக்குவதையே பலரும் விரும்புகின்றனர். இதனை வைத்திருக்கும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் தளங்களும் அடிக்கடி சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாவதால், முதலீட்டாளர்கள் போட்ட முதலை வெளியே எடுப்பதில் சிரமம் உள்ளது. உதாரணமாக வாசிர் எக்ஸ் தளத்தில் முதலீடு செய்தவர்கள் இன்றுவரை பணத்தை வெளியே எடுக்கமுடியாமல் தவித்துவருகிறார்கள். இந்தியாவில் சிறு ஊர்களில் பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, கிரிப்டோ வியாபாரம், கிரிப்டோ சிட்பண்ட் என்று பலவழிகளில் ஏமாற்று நடக்கிறது.
கிரிப்டோ எதிர்காலத்திற்கான கரன்ஸி. பின்னொரு காலத்தில் இது பங்குச் சந்தை போன்று பலராலும் விரும்பப்படும் முதலீட்டு வழியாக உருவாகலாம். ஆனால் இன்றையத் தேதியில் இது ஒரு நிலையற்ற முதலீடாக விளங்குவதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரமாக இதில் இறங்காமல் பொறுமை காப்பது நல்லது. நீங்கள் சீட்டு கட்டியதுண்டா? கிரிப்டோகரன்சி வாங்கியதுண்டா? உங்கள் அனுபவம் என்ன?