Rewind 2025: இந்திய வீராங்கனைகளை சாம்பியனாக்கிய ஆண்டு
- முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
2025-ம் ஆண்டு இந்திய மகளிர் வீராங்கனைகளுக்கு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். இந்த 2025-ம் ஆண்டில் கிரிக்கெட், கபடி, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை:
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை 2025:
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது. பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகள் மற்ற கிரிக்கெட்டுகளிலிருந்து வேறுபட்டவை என்றாலும் இந்த வெற்றியும் இந்திய மகளிருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் புது உத்வேகத்தை கொடுத்தது.
பார்வையற்றோர் கிரிக்கெட்டில் பார்வையே இல்லாதவர்கள், மிகக் குறைந்த பார்வை உள்ளவர்கள் மற்றும் ஒரு கண்ணில் மட்டும் பார்வை உள்ளவர்கள் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் நேபாளத்தை தோற்கடித்து முதல் பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றது.
மகளிர் கபடி உலகக் கோப்பை 2025:
இந்திய அணி 2025ம் ஆண்டு மகளிர் கபடி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், இந்திய மகளிர் கபடி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து கொண்டது. இந்திய மகளிர் கபடி அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அரையிறுதியில் ஈரானை தோற்கடித்த இந்திய அணி, பின்னர் இறுதிப் போட்டியில் சீன தைபேயை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற விளையாட்டுகளில் இந்திய மகளிர் அணி:
தெலுங்கானாவின் தேஜம் நிகாத் ஜரீன் 51 கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
நூபுர் ஷெரோன் 80+ கிலோ பிரிவில் உலக குத்துச்சண்டை கோப்பையையும், அருந்ததி 70 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை அனுபமா ராமச்சந்திரன் படைத்துள்ளார்.
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி கைகள் இல்லாத போதிலும், தனது கால்களால் அம்பை எய்து உலக பாரா சாம்பியனானார்.
உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்புத் துறையில் மிஸ் ஜோத்ஸ்னா வெங்கடேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐசிஎன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.
டென்னிஸில் ஸ்ரீவள்ளி ரஷ்மிகா பாமிடிபதி ஃபெனெஸ்டா ஓபன் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றார்.
கோல்ஃப் விளையாட்டில் இளம் நட்சத்திரம் பிரணவி உர்ஸ் 14 வயதில் ஐஜிபிஎல்லின் முதல் பெண் சாம்பியனாகி வரலாறு படைத்தார்.