2025 REWIND: தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி; அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி... மடப்புரம் அஜித் குமார் வழக்கு
- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.
சினிமாவில் தான் நம்ப முடியாத சம்பவங்கள் நடைபெறும். இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்பவர்களுக்கு தற்போது அவை நிகழ்வது அதிர்ச்சியை அளிக்கிறது. காவல் நிலையங்களில் நடைபெறும் மரணம் தொடர்பான தகவல்கள் நம்மை நடுங்க வைக்கும் அளவிற்கு உள்ளது என்றால் அது மிகையல்ல...
அப்படி ஒரு சம்பவம் தான் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு. அஜித்குமார் என்றால் நடிகர் என்று தான் நினைத்தது போய் தற்போது மடப்புரம் அஜித்குமார் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அந்தஅளவுக்கு அந்த வழக்கு நம்மில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார் (29). இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒருநாள் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தனது காரை பார்க்கிங் செய்யுமாறு அஜித்குமாரிடம் காரின் சாவியை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்றுவிட்டார். சில மணி நேரம் கழித்து வெளியே வந்த நிகிதாவிடம் அஜித்குமார் காரையும், சாவியையும் ஒப்படைத்தார்.
காரை பார்க்கிங் செய்தது ஒரு குற்றமா? என்பது போல் நிகிதா, காரில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதாக அஜித்குமார் மீது புகார் கூறினார். இதுதொடர்பாக திருப்புவனம் தனிப்படை போலீசார், அஜித் குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஜித் குமாரின் உடலில் சிகரெட்டால் சூடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பது தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிகிதா அளித்த புகாரில் முறையாக வழக்கு பதிவு செய்யாததும், இதில் பெரிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அஜித் குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு அழைத்து சென்று தாக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணை தொடர்பாக ஆரம்பத்தில் மாநில சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கு, பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 தனிப்படை காவலர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகன ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த வழக்கை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அஜித் குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.7.5 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல எனக் கூறி, மேலும் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் வீட்டுமனை வழங்கப்பட்டது.
வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. டெல்லி தடயவியல் ஆய்வக அறிக்கைக்காக சிபிஐ காத்திருக்கிறது.
இந்த வழக்கு காவல் நிலைய மரணங்களுக்கு எதிரான ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கப்படுகிறது. மேலும் சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 ஆண்டுகள் ஆகியும் விசாரணை நிறைவடையாத நிலையில், சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அஜித் குமார் மரண வழக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
புகார் அளித்ததும் விசாரணை நடத்த மட்டுமே காவலர்களுக்கு அனுமதி உள்ள நிலையில், நீதி வழங்க நீதிமன்றங்கள் உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 27 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு காவல் அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எது இப்படியோ அடுத்த காவல் மரணம் நிகழ்வதற்கு முன்பாகவாவது சாத்தான்குளம் தந்தை மகன் மற்றும் மடப்புரம் அஜித் குமார் வழக்குகளில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.