புதுச்சேரி

ஜீப்பில் மது குடித்து குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்- உயர் அதிகாரிகள் விசாரணை

Published On 2025-11-14 15:06 IST   |   Update On 2025-11-14 15:06:00 IST
  • அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
  • உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் ஜீப்பில் புதுச்சேரிக்கு கோர்ட்டு விசாரணைக்கு வந்தனர்.

பின்னர் வழக்கு விசாரணை முடித்து மாலை மீண்டும் ஏனாம் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஏனாமில் தடை செய்யப்பட்ட மதுவகையான கள்ளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாட்டில் பாட்டிலாக வாங்கினர்.

ஓடும் ஜீப்பிலேயே அவர்கள் கள்ளு குடிக்க தொடங்கினர். போதை தலைக்கேறியதால் பாடல்களை போட்டு நடனமாடினர். ஏனாம் வரை குடித்து செல்வதற்கு போதுமான அளவிற்கு 'கள்' பாட்டில் வைத்திருந்தனர்.

பணியில் இருந்து கொண்டு 'கள்' குடித்து அட்டகாசம் செய்ததுடன் அதனை தைரியமாக அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.

போலீசார் 'கள்' குடித்து ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம்பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

இதனை "ஜஸ்ட் மிஸ்டு" என்று அவர் தனது குழுவில் கோடிட்டு காண்பித்துள்ளார். அதற்காக ஜீப்பில் பார்ட்டி வைப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே 'கள்' குடித்து ஆட்டம் போட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பி இருப்பது புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

Tags:    

Similar News