புதுச்சேரி

பிளஸ்-2 தேர்வு முடிவு: புதுச்சேரி-காரைக்காலில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

Published On 2025-05-08 11:12 IST   |   Update On 2025-05-08 11:12:00 IST
  • புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
  • 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அரசு பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தை கைவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுதேர்வுகள் நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்காலில் 101 தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 881 மாணவர்கள், 3 ஆயிரத்து 683 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதில் புதுச்சேரி, காரைக்காலில் 3 ஆயிரத்து 794 மாணவர்கள், 3 ஆயிரத்து 659 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 453 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகும்.

புதுச்சேரியில் மட்டும் 3 ஆயிரத்து 637 மாணவர்கள், 3 ஆயிரத்து 289 மாணவிகள் என 6 ஆயிரத்து 926 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 561 மாணவர்கள், 3 ஆயிரத்து 266 மாணவிகள் என 6 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 98.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் 244 மாணவர்கள், 394 மாணவிகள் என மொத்தம் 638 பேர் தேர்வு எழுதினர். இதில் 233 மாணவர்கள், 393 மாணவிகள் என 696 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 98.12 ஆகும்.

புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் 1, பிரெஞ்சு 75, இயற்பியல் 5, வேதியியல் 23, உயிரியல் 5, கணிப்பொறி அறிவியல் 253, கணிதம் 28, விலங்கியல் 1, தாவரவியல் 2, பொருளியல் 12, வணிக வியல் 16, கணக்குபதிவியல் 29, வணிக கணிதம் 9, கணிப்பொறி பயன்பாடு 122, வரலாறு 1 என மொத்தம் 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News