புதுச்சேரி

இயற்கை மூல பொருட்கள் கொண்டு விநாயகர் சிலைகள் செய்ய உத்தரவு

Published On 2025-08-02 11:14 IST   |   Update On 2025-08-02 11:14:00 IST
  • பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
  • சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது முன்னோர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வண்ணம் தீட்டாத, களிமண் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்தனர். இதனால், நீர் நிலை மாசுபடவில்லை. தற்போது, வண்ணம் தீட்டிய சிலைகளை வைத்து வழிப்பட்டு, கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைகிறது.

இதனை தவிர்க்க விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. சுற்று சூழலுக்கு நலம் பயக்க, விநாயகர் சிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். சிலைகளை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் தயாரிக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள், உள்ளாட்சி துறைகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன்பதிவு செய்ய வேண்டும். பிரசாதங்கள் வழங்க வாழை இல்லை, ஆலம் மற்றும் சால் இலைகள், மக்கும் காகித கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

பூக்கள், இலைகள், உடைகள் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை, சிலைகளை நீர்நிலைகளில் விடுவதற்கு முன்பாக அகற்றப்பட்டு, சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து, வண்ண குறியிடப்பட்ட தொட்டிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News