புதுச்சேரி

புதுச்சேரியில் அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் திடீர் விலகல்

Published On 2025-11-19 12:08 IST   |   Update On 2025-11-19 12:08:00 IST
  • நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
  • பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க.வில் ஜெ.பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர்.

இவர் கடந்த 2006 முதல் 2011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகர் வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திடீரென இன்று அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.

ஜெயலலிதா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுவை நகராட்சியில் கவுன்சிலராகவும், 2 முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன்.

2021-ம் ஆண்டு கட்சி பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்.

நான் தொடர்ந்து கட்சி பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள்.

மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கட்சி வளர்ச்சிக்கும் வார்டு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரும் பெற்றுள்ளேன்.

தற்போது என்னால் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. எனவே நான் வகித்து வரும் புதுவை மாநில ஜெ.பேரவை செயலாளர் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடியார், எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். பதவி விலகிய பாஸ்கர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News