புதுச்சேரி

மதுஆலைக்கு அனுமதி அளிக்காததால் கவர்னர் மீது முதலமைச்சர் ரங்கசாமி அதிருப்தி- நாராயணசாமி மீண்டும் குற்றச்சாட்டு

Published On 2025-05-19 16:15 IST   |   Update On 2025-05-19 16:16:00 IST
  • பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது.
  • மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் எற்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கவர்னர், முதலமைச்சரிடையே எந்த மோதலும் இல்லை என்றும் அரசியல் காழ்புணர்ச்சியால் நாராயணசாமி உள்நோக்கத்தோடு பேசுகிறார் என அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்தார்.

இந்த நிலையில் மது ஆலைகளுக்கு அனுமதி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மீது அதிருப்தியில் இருப்பதாக மீண்டும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. எங்கு பார்த்தாலும் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு கும்மாளம் போடுவதுதான் ஆன்மிகமா? ஒரு புதிய தொழிற்சாலை இல்லை, தரமான சுற்றுலா இல்லை. கலாச்சார சீரழிவுதான் நடக்கிறது.

பெஸ்ட் புதுவை தோல்வியடைந்துவிட்டது. மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. அனைத்து திட்டங்களும் படிப்படியாக கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி கூறுகிறார். ரேஷன்கடைகளை திறக்க முடியவில்லை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000ம் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்ற அவர் நினைக்கிறார்.

உள் கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள், ஊழல் செய்வது குறையவில்லை. அமைச்சர்கள் பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர்.

மதுபான தொழிற்சாலைகளுக்கு, அனுமதி மற்றும் தனக்கு வேண்டிய அதிகாரிகள் இடமாறுதலுக்கு அனுமதியளிக்காததால் கவர்னர் மீது முதலமைச்சர் அதிருப்தியில் உள்ளார். புதுவையில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Tags:    

Similar News