கேரளாவில் தென் மாநிலங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த வாலிபர் கைது
- அனகேஷ் மீது பல்வேறு போதைப்பொருள் வழக்குகள் உள்ளன.
- அனகேஷ் திருப்பதி, மும்பை மற்றும் இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்தவர் அனகேஷ் (வயது 24). பெங்களூரூவை சேர்ந்த இவர், போலீசாரால் கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். இவரை பிடிக்க கோழிக்கோடு துணை கமிஷனர் பைஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அனகேஷ், கேரளாவை சேர்ந்த ஒருவருடன் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த வீட்டை போலீசார் கண்காணித்து வந்தனர். சம்பவத்தன்று அங்கு அனகேஷ் வந்தபோது, தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், அனகேஷ் மீது பல்வேறு போதைப்பொருள் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு அவர் பெங்களூரூவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்தபோது தனது காரை விட்டு விட்டு தப்பிச்சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் திருப்பதி, மும்பை மற்றும் இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தோம்.
இந்த நிலையில் தான் கேரளாவை சேர்ந்த ஒருவருடன் அனகேஷ், லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு பதுங்கி இருந்த அவரை கைது செய்தோம் என்றனர்.