இந்தியா

சாதியை சொல்ல முடியாது!.. கர்நாடக அரசின் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க சுதா மூர்த்தி மறுப்பு.. ஏன்?

Published On 2025-10-16 15:47 IST   |   Update On 2025-10-16 15:47:00 IST
  • சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.
  • "மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

பெங்களூருவில் வசித்து வரும் பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி கர்நாடக சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்துள்ளார்.

தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சாதி மாநிலத்தில் வாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட விருப்பமாக தனது சாதி விவரத்தைத் தெரிவிக்க மறுத்துள்ளார். அதை கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.

தாங்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், இந்தக் குடும்பத்தின் சாதித் தகவல்களை வழங்குவது அரசுக்கு உதவாது என்று சுதா மூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல்களை வழங்காததற்கு அவர் தனிப்பட்ட காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சுதா மூர்த்தி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு என்ற முறையில், இதில் பங்கேற்க யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

சுதா மூர்த்தியின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறிய அமைச்சர், ""மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இது குறித்துப் பதிலளிக்கையில், "இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தன்னார்வமாகச் செய்யப்பட வேண்டியது," என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்தக் சாதிவாரி கணக்கெடுப்பு, அக்டோபர் 19-ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News