இந்தியா

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது - மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து மம்தா பானர்ஜி

Published On 2025-10-12 17:48 IST   |   Update On 2025-10-14 21:59:00 IST
  • குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
  • மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன்.

மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தில் ஒதுக்குபுறமான இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

தற்போது மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் இதேபோல் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மருத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பாஜக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சம்பவம்.

மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? என்று நான் கேட்கிறேன். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்

பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதேவேளை இதுபோன்ற குற்றங்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. யாரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கத்தை குறிவைப்பது சரியல்ல. மணிப்பூர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசாவில் எவ்வளவு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஒடிசாவில், கடற்கரைகளில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?.

நாங்கள் 1-2 மாதங்களுக்குள் குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். மேலும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது"" என முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு மம்தா பேசினார். 

Tags:    

Similar News