சபரிமலையில் சாமி தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர் உயிரிழப்பு
- இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
- ஒருவரையொருவர் தாண்டி செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பதினெட்டாம் படி அருகே தள்ளுமுள்ளு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. வரிசையில் நிற்கும் பக்தர்களை தாண்டி சில பக்கதர்கள் செல்வதால் அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது.
பதினெட்டாம் படிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பக்தர்களை பாதுகாப்பாக படிகளில் ஏற்றி விடுகிறார்கள். கூட்டம் அதிகரித்துள்ளதால், கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பக்தர்கள் சிறுவர்களுடன் வந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்த பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவர் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செலவில் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் இருந்து 33 பக்தர்களுடன் வந்த பேருந்து கோட்டயம் மாவட்டம் எருமேலியில் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர்.