துணை ஜனாதிபதி தேர்தல்- வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம்
- துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.
- பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 21-ந்தேதி மனுதாக்கலுக்கான கடைசி நாளாகும்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். பாராளுமன்ற மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்களும், மேல்சபையில் 240 எம்.பி.க்களும் இருக்கிறார்கள். இவர்களில் 391 வாக்குகள் பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெறுவார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 293 பேரும், மேல்சபையில் 129 பேரும் உள்ளனர். எனவே பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மனுதாக்கல் தொடங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக நேற்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் நட்டா இருவரும் ஆலோசித்து தேர்வு செய்யும் வேட்பாளரை ஏகமனதாக ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்தியுமான நட்டாவும் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை தொடங்கி உள்ளனர். முன்னாள் கவர்னர்கள் அல்லது பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்று பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், கர்நாடகா கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் சேஷாத்திரி சாரி ஆகிய 3 பேர் பெயர் பா.ஜ.க. வேட்பாளருக்கு அடிபடுகிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் பா.ஜ.க. வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரை கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
அதன் பிறகு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் அறிவிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதியாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று ராகுல்காந்தி தனது வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் உள்ள 25 கட்சிகளின் 50 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் நடந்த வாக்குகள் திருட்டு தொடர்பான தகவல்களை ராகுல்காந்தி தெரிவித்ததாக தெரிகிறது. அவர்களிடம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் எப்படி தில்லுமுள்ளு செய்யப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி விளக்கி கூறினார்.
அதன் பிறகு 12 கட்சி தலைவர்களுடன் மட்டும் ராகுல்காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் இந்த 12 கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று தெரிய வருகிறது.
இவர்கள் மீண்டும் டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர். அப்போது இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும்.