இந்தியா

ரீல்ஸ் எடுக்க ரிஸ்க் எடுத்த பெண் - கடும் நடவடிக்கை எடுக்கக் கோரும் நெட்டிசன்கள்

Published On 2025-07-11 10:45 IST   |   Update On 2025-07-11 10:45:00 IST
  • நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம்.
  • வீடியோவில் உள்ள அந்த பெண் இயக்கும் ஷாலினி பாண்டே என்பது தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக கான்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பாடலுக்கு அந்த பெண் நடனமாடி உள்ளார்.

பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.

இதுதொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் தயவுசெய்து உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.

ஒரு பயனர், அந்த நபர்களது துப்பாக்கிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த கன்னாஜ் காவல்துறை, இந்த விஷயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் கான்பூர் நகரில் வசிப்பவர் என்றும், அவர் கான்பூர் நகர் மாவட்டப் பகுதிக்குள் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக கான்பூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் ஷாலினி பாண்டே என்றும், அவருக்கு 60,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் 2,550க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, "லக்னோ ராணி" என்று அழைக்கப்படும் சமூக ஊடகத்தில் பிரபலமான சிம்ரன் யாதவ், லக்னோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ மூலம் வைரலானார். வைரலான அந்த வீடியோவில், அவர் துப்பாக்கியை அசைத்துக்கொண்டே போஜ்புரி பாடலுக்கு நடனமாடுவது காட்டப்பட்டது. லக்னோ காவல்துறை இந்த வீடியோவை கவனித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News