'லிவ்-இன்' உறவால் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள் - மாணவிகளை எச்சரித்த உ.பி. ஆளுநர்
- இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன.
- கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது.
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீத், ஜனநாயக் சந்திரசேகர் விஸ்வவித்யாலயா மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இளம் பெண்கள் லிவ் இன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். லிவ்-இன் உறவுகளின் விளைவை பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களை பாருங்கள். அங்கு 15-20 வயது சிறுமிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.
இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன. ஆனால், அதிலிருந்து விலகி இருங்கள். பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தாய்வழி குடும்பங்களோ அல்லது மாமியாரோ பின்னர் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கல்விப்பட்டங்களுடன் கடமை உணர்வையும் தேசியப் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது. சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் 75% வருகையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆனந்திபென் படேல், இயற்கை விவசாயத்தை பின்பற்றவும், தூய்மையை மேம்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க ஆராய்ச்சி நடத்தவும் மாணவர்களை வலியுறுத்தினார்.