இந்தியா

கோஷம் எழுப்பாதவர்களை கண்டித்த மத்திய மந்திரி: இதுதான் காரணம்

Published On 2024-02-04 02:13 GMT   |   Update On 2024-02-04 02:13 GMT
  • கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி மீனாட்சி லேகி பங்கேற்றார்.
  • அப்போது, பாரத் மாதா கீ ஜே என கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரு யுவகேந்திரா மற்றும் கேலோ பாரத் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி இளைஞர்கள் விழிப்புணர்வு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது, ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே ஆகும். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

நாட்டின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் 65 சதவீதம் பேர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது என தெரிவித்தார்.

பேச்சின் முடிவில் அவர் 'பாரத் மாதா கீ ஜே' என முழக்கமிட்டார். அதற்கு பார்வையாளர்களிடம் இருந்து எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், இந்தியா உங்கள் தாய் அல்லவா? என்று கேட்டார். சொல்லுங்கள், சந்தேகம் உள்ளதா என மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

அதன்பின், அவர் திரும்ப திரும்ப முழக்கத்தைச் சொன்னார். அப்போது முழக்கமிடாமல் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார். அந்தப் பெண் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த மத்திய மந்திரி, பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என காட்டமாக கூறினார்.

தொடர்ந்து அவர், பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டார். அப்போது அங்கிருந்த அனைவரும் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News