இந்தியா

யுகாதி, ரம்ஜான் பண்டிகையையொட்டி பெங்களூரு பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

Published On 2025-03-29 14:45 IST   |   Update On 2025-03-29 14:45:00 IST
  • பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
  • பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.

பெங்களூரு:

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். 

Tags:    

Similar News