கவர்னரை நியமிக்க வரையறை தேவை: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
- கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி.
- மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்
மும்பை :
மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அடிக்கடி ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மேலும் கவர்னருக்கு எதிராக பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே, சாவித்திரிபாய் புலே ஆகியோரை அவமதித்து உள்ளார்.
மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் துரோகத்தை, சத்ரபதி சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பித்து வந்ததுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதுபோன்றவர்கள் தங்கள் பதவியில் தொடர்ந்து வருகின்றனர்.
கவர்னர் இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதி. எனவே யாரை கவர்னராக நியமிக்க வேண்டும் என வரையறை இருக்க வேண்டும். அது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். மராட்டியத்தையும், அதன் அடையாளங்களையும் அவமதிப்பவர்களுக்கு எதிராக பொது மக்கள் ஒன்று சேர வேண்டும். இதுதொடர்பாக வரும் நாட்களில் அறிவிப்புகளை வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.