இந்தியா

திருப்பதியில் நேற்று இரவு மாட வீதியில் அம்ச வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்த காட்சி

திருப்பதி பிரமோற்சவ விழாவில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் உலா

Published On 2023-09-20 05:03 GMT   |   Update On 2023-09-20 11:22 GMT
  • பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.
  • திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. அன்று இரவு பெரிய சேஷா வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்தனர்.

இன்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர்.

பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் 2 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர்.

மேலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன பக்தர்கள் மற்றும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் குறைந்து 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

திருப்பதியில் நேற்று 67,267 பேர் தரிசனம் செய்தனர். 20,629 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News