நிஜத்தில் ஒரு ஜென்டில்மேன்... கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்துக்கு செலுத்திய கொள்ளையன்
- மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
- திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவு என்கிற சிவராப்பன். பிரபல கொள்ளையன். இவர் சமீபத்தில் பைதரஹள்ளி போலீசாரால் கூட்டாளிகள் அனில் மற்றும் விவேக் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார். இந்த 3 பேரும் நகரில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஷிவு மீது மட்டும் குறைந்தது 11 வழக்குகள் உள்ளன. 3 பேரும் திருடிய சுமார் 260 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். அதில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஷிவுவிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அவர் போலீசாரிடம் கூறுகையில், தனது குற்றவியல் வாழ்க்கை முறையின் அவமானம் மற்றும் சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இருப்பினும் எதையாவது செய்ய வேண்டும் என கருதி கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டேன்.
அப்போது தனது பகுதியில் உள்ள குடும்பங்களின் அவலநிலையை கண்டு மனம் நெகிழ்ந்து, திருடப்பட்ட பணத்தை கல்வி கட்டணம் செலுத்தப் பயன்படுத்த முடிவு செய்தேன். பல மாணவர்கள் கட்டணம் செலுத்த சிரமப்படுவதை கண்டபோது, எனக்கு ஒரு புதிய நோக்கம் கிடைத்தது. சட்டத்தை மீறுவதாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். பிரபல கொள்ளையன் 'ராபின் ஹூட் பாணியில்' தான் திருடிய நகை, பணத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 ஏழை மாணவர்களின் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தினேன். மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன். மாணவர்களுக்கு நிதியுதவி செய்ததை தவிர, தனது 2 உதவியாளர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆட்டோரிக்ஷாக்களை வாங்கியதாக கூறினார்.
இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கல்விக்கு நிதியளிக்கவும், வாகனங்கள் வாங்கவும் ஷிவு பயன்படுத்தியதாக கூறப்படும் 14 லட்சம் ரூபாய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட திருடர்களிடமிருந்து நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அசாதாரணமானது. அவர் உண்மையை சொல்கிறாரா? அல்லது அனுதாபத்தை பெற முயற்சிக்கிறாரா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும், திருடர்கள் பிடிபட்டவுடன் உணர்ச்சிகரமான கதைகளை கொண்டு வருவார்கள். உண்மைகளை கண்டறிய நாங்கள் ஆழமாக ஆராய்வோம். அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு குற்றம் நடந்துள்ளது. அவரது கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என்றார்.