இந்தியா

'சோசலிஸ்ட்', 'மதச்சார்பின்மை' வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் - துணை ஜனாதிபதி

Published On 2025-06-29 14:30 IST   |   Update On 2025-06-29 14:30:00 IST
  • இது சனாதன உணர்விற்கு ஒரு அவமானம் என்று துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
  • இந்த நாட்டின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆதரித்துள்ளார்.

வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அரசியலமைப்பின் முகவுரையிலிருந்து 'சோசலிச' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரினார்.

அவசரநிலையின் போது 42வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவை நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அம்பேத்கர் வரைந்த அரசியலமைப்பின் முகவுரையில் இந்த வார்த்தைகள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனை விமர்சித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதனை தீயிட்டு எரிந்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். இன்று பாஜகவோடு கூட்டு சேர்ந்து அரசியலமைப்பை அகற்றிவிட்டு மனுஸ்மிருதியை அமல்படுத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், அரசியலமைப்பின் முகவுரையில் சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளைச் சேர்த்ததற்காக காங்கிரஸை விமர்சித்தார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறினார்.

இது சனாதன உணர்விற்கு ஒரு அவமானம் என்றும், இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு இருத்தலியல் சவால்களை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் ஆன்மாவாக முகவுரையை விவரித்த அவர், அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. முகவுரை அரசியலமைப்பின் விதை போன்றது என்று தெரிவித்தார். நாட்டின் குடியரசு துணைத் தலைவரே முகவுரையை மீண்டும் மாற்றக்கோருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News