ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியை கொன்ற புலி சிக்கியது- பொதுமக்கள் நிம்மதி
- புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.
- கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு அருகே கடந்த மே மாதம் ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சோக்காடு கல்லமுலா பகுதியை சேர்ந்த அப்துல்கபூர்(வயது45) என்ற தொழிலாளி புலி தாக்கியதில் பலியானார்.
அப்துல் கபூரை கொன்ற புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட இடங்களில் வனத்துறையினர் சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. புலியை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் சிக்காமல இருந்துவந்தது.
இந்த நிலையில் அப்துல்கபூரை கொன்ற புலி, எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் அங்கு ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூண்டில் சிக்கியது 13 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஆகும். அதனை காட்டுக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கூண்டுக்குள் சிக்கியதும் ஆக்ரோஷமாக அங்கும் இங்கும் ஓடியதால் கூண்டில் மோதி புலியின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தொழிலாளியை கொன்ற புலி 50 நாட்களுக்கு பிறகு சிக்கியுள்ளதால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.