இந்தியா

கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Published On 2023-05-06 15:44 IST   |   Update On 2023-05-06 15:44:00 IST
  • கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது.
  • காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.

கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது. தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள் எரிந்துள்ளன.

காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆல்பர்ட்டாவில் சில பகுதிகளில் தீயின் சீற்றத்தால் பனி உருகுவதால் பிரிட்டிஷ் கொலம்பியா உட்புற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆறுகளின் கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

வெப்பம் காரணமாக பனி உருகுவது அதிகமாகியுள்ளது. இது ஆறுகள், சிற்றோடைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியது என்று அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது. காட்டுத்தீ, வெப்பம் காரணமாக 13 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News