இந்தியா

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்: மகாலட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார் ரேவந்த் ரெட்டி

Published On 2023-12-09 10:22 GMT   |   Update On 2023-12-09 11:14 GMT
  • பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம்.
  • தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

திருப்பதி:

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவேந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். சோனியா காந்தி பிறந்தநாளான இன்று பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பஸ் திட்டத்தை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பஸ்களிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களில் பயணிக்கும்போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், 3-ம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News