இந்தியா

திருமாவளவன்,குமாரசாமி,சந்திரசேகரராவ்,கட்சி நிர்வாகிகள்

பாரத ராஷ்டிர சமிதி என்ற பெயரில் புதிய கட்சி- தெலுங்கானா முதல்வர் தொடங்கினார்

Update: 2022-10-05 09:08 GMT
  • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன், திருமாவளவன் சந்திப்பு.
  • புதிய கட்சி தொடக்க விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பு.

ஐதராபாத்:

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மாநில கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர்.


முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுவதற்காகவே சந்திரசேகரராவ் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கட்டளைப்படி சந்திரசேகர ராவ் செயல்படுவதாகவும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

Tags:    

Similar News