பீகார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
- ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 20 ஆம் தேதி புதிய அமைச்சரவையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.