null
தொழில்நுட்ப கோளாறு.. டெல்லி, மும்பை விமான நிலையங்களில் விமான சேவை கடும் பாதிப்பு - பயணிகள் அவதி
- AMSS ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
- பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தானியங்கி அமைப்பில் (AMSS) ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
நேற்று மாலை தொடங்கிய இந்தக் கோளாறு, ஆட்டோ டிராக் சிஸ்டம் (ATS) மற்றும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பு (AMSS) ஆகியவற்றைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் குழு கோளாறை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், விரைவில் அதைச் சரிசெய்வதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்க்க தங்கள் ஊழியர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (AMSS) தொழில்நுட்பக் கோளாறால் தங்கள் விமான நிலையத்திலும் விமான இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணம் மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் தடங்கலுக்கு வருந்துவதாகவும் மகாரஷ்டிராவின் மும்பை சத்திரபதி மகராஜ் விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.