8 வயது தலித் மாணவனின் Pant-இல் தேளை விட்டு சித்ரவதை செய்த ஆசிரியர்கள்
- சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
- ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள், சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாக்கப்பட்டதால், அந்தச் சிறுவனின் காதில் இரத்தம் வந்துள்ளதுடன், செவிப்பறையும் சேதமடைந்துள்ளது என்று சிறுவனின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதோடு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவனது காற்சட்டைக்குள் ஒரு தேளைப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களை வெளியே சொன்னால், கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாலோ வாழ்க்கையையே தொலைத்துவிடுவீர்கள் என மிரட்டப்பட்டுள்ளனர்.
பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும், ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.