இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2023-09-22 10:12 GMT   |   Update On 2023-09-22 10:12 GMT
  • வருகிற 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மசோதா சட்டம் ஆனதும் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

புதுடெல்லி:

புதிய பாராளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. இந்நிலையில், கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்த பிரதமர் மோடிக்கு அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின், பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய மாநிலங்களவை பெண் எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த மசோதா சட்டப்பேரவைகளிலும், பாராளுமன்றத்திலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும். இந்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேறிய நிலையில் அடுத்த கட்டமாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது.

வருகிற 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும்.

இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதுதான் மசோதா அமலுக்கு வரும். சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

மசோதா சட்டம் ஆனதும் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

Tags:    

Similar News