இந்தியா

திருப்பதி படிக்கட்டில் மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவர்

Published On 2022-10-05 10:58 IST   |   Update On 2022-10-05 10:58:00 IST
  • ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் வீர வெங்கட சத்ய நாராயணா.
  • மனைவியின் சவாலை ஏற்ற வீர வெங்கட சத்ய நாராயணா தனது மனைவியை தோளில் சுமந்து கொண்டு வேகமாக படிக்கட்டுகளில் நடந்து சென்றார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் வீர வெங்கட சத்ய நாராயணா. லாரி அதிபர். இவரது மனைவி லாவண்யா. தம்பதிக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்.

மகள்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூத்த மருமகன் தனக்கு அரசு வேலை கிடைத்தால் தனது குடும்பத்தினர் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு அரசு உயர் பதவியில் வேலை கிடைத்தது. இதையடுத்து வீர வெங்கட சத்யநாராயணா மற்றும் அவரது மருமகன் குடும்பத்தினர் சாமியை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தனர்.

அவர்கள் ஸ்ரீ வாரி மேட்டு நடைபாதையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வீர வெங்கட சத்திய நாராயணா வேகமாக மனைவிக்கு முன்பாக நடந்து சென்றார்.

இதனைக் கண்ட அவரது மனைவி லாவண்யா உனக்கு திராணி இருந்தால் என்னை தோளில் சுமந்து கொண்டு செல்ல முடியுமா என கணவரிடம் சவால் விட்டார். மனைவியின் சவாலை ஏற்ற வீர வெங்கட சத்ய நாராயணா தனது மனைவியை தோளில் சுமந்து கொண்டு வேகமாக படிக்கட்டுகளில் நடந்து சென்றார்.

இதனைக் கண்ட பலர் இந்த காட்சியை தங்களது செல்போன்களில் வீடியோ போட்டோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். மனைவியின் சவாலையேற்று கணவர் தனது மனைவியை தோளில் சுமந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Similar News