தெலுங்கு தேசம், பவன்கல்யாண் கட்சியினர் மோதல்
- தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
- 2 கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து உள்ளது.
மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இணைந்து அந்தந்த பகுதியில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தி ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பித்தம் புறத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வர்மா தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார்.
அப்போது அவர் என்னுடைய தொகுதியில் கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் ரூ.2,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன் என பேசினார்.
இதற்கு ஜனசேனா கட்சி தொகுதி பொறுப்பாளர் உதய சீனிவாஸ் இவ்வளவு வளர்ச்சி திட்ட பணிகளை நீங்கள் செய்து இருந்தால் கடந்த தேர்தலில் மக்கள் உங்களை ஏன் தோற்கடித்தனர் என கேள்வி கேட்டார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது முறையான வளர்ச்சி பணிகளை செய்யாததால் தான் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததாக கூறினார்.
இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் உங்கள் கட்சி தலைவர் பவன்கல்யாண் மற்றும் ஜனசேனா கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. நாங்கள் போட்டியிட்ட இடங்களில் கணிசமான வாக்கு பெற்று உள்ளோம்.
ஆனால் உங்கள் கட்சிக்கு அனுதாப வாக்குகள் மட்டுமே கிடைத்தது இந்த நிலையில் நீங்கள் எங்கள் கட்சியை பற்றி பேசக்கூடாது என்றனர்.
இதனால் 2 கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜனசேனா கட்சி பிரமுகர் ஒருவர் மேசை, நாற்காலிகளை எட்டி உதைத்தார்.
இதனால் 2 கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.அப்போது ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.
பின்னர் ஜனசேனா கட்சி நிர்வாகி உதய சீனிவாஸ் இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தனது கட்சி தொண்டர்களை வெளியே அழைத்துச் சென்றார். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்த கூட்டத்தில் 2 கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவரை குற்றம் சாட்டி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 கட்சியின் மேல்மட்ட தலைவர்களும் கூட்டணியை அறிவித்து இருந்தாலும் கீழ்மட்ட நிர்வாகிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என தொண்டர்கள் ஆதங்கப்பட்டு சென்றனர்.