இந்தியா

பச்சைக்கல் மரகத விநாயகர் சிலை


விவசாய நிலத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் மரகத விநாயகர் சிலை மீட்பு

Published On 2022-06-14 10:36 IST   |   Update On 2022-06-14 10:36:00 IST
  • ஏர்ரகொண்ட பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி.
  • வெங்கடேஸ்வரா ரெட்டி மரகத விநாயகர் சிலையை மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏர்ரகொண்ட பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவரது மருமகன் இந்திர சேனா ரெட்டி. இவர்களது விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டியபோது 2½ அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட 9 கிலோ எடையுள்ள பச்சை கல் மரகத விநாயகர் சிலை கிடைத்தது. இந்த சிலையின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

மரகத சிலையை அரசிடம் வழங்கவேண்டுமென ஐதராபாத் கோர்ட்டில் ஆந்திர அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ராஜசேகர ரெட்டி இந்த சிலை தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமானது. எனவே உரிமைப் பத்திரம் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

மரகத விநாயகர் சிலை ராஜசேகர ரெட்டிக்கு சொந்தமானது என கோர்ட்டில் உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து மரகத விநாயகர் சிலையை ராஜசேகர் ரெட்டி வீட்டில் வைத்திருந்தார். வீட்டில் சிலை வைத்துள்ளதால் அவரது குடும்பத்திற்கு ஆகாது என ஜோதிடர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜசேகர ரெட்டி அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரர் ரெட்டியிடம் கொடுத்து வினுகொண்ட சாலையில் உள்ள பண்ணை வீட்டில் சிலையை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் மரகத விநாயகர் சிலையை விற்பனை செய்ய உள்ளதாக ஓங்கோல் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வெங்கடேஸ்வரர் ரெட்டியின் பண்னை வீட்டிற்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் சிலையை தாங்களே வாங்கி கொள்வதாகவும், சிலையை காண்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது வெங்கடேஸ்வரா ரெட்டி மரகத விநாயகர் சிலையை மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம் காண்பித்தார்.

மாறுவேடத்தில் இருந்த போலீசார் தாங்கள் போலீசார் என தங்களது அடையாள அட்டையை காண்பித்து மரகத விநாயகர் சிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ராஜசேகர் ரெட்டி கோர்ட்டு வழங்கிய உரிமை பத்திரத்தை போலீசாரிடம் காண்பித்தார்.

ஆனால் புராதன சின்னமான மரகத விநாயகர் சிலையை தனிநபர் ஒருவர் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தனர். இந்த விநாயகர் சிலை விற்பனையில் ஆந்திர மாநில 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தனர்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவியதால், போலீசார் ராஜசேகர், அவரது மருமகன் இந்திர சேனா மற்றும் வெங்கடேஸ்வரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News