இந்தியா

வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2022-12-18 08:06 GMT   |   Update On 2022-12-18 08:06 GMT
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைக்கிறார்.
  • புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320க்கும் அதிகமான 4ஜி செல்போன் கோபுரங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுராவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளை பாரதீய ஜனதா கடந்த வாரமே தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேகாலயா, திரிபுராவுக்கு சென்று ரூ.6,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் அவர் இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் (ஐ.ஐ.எம்.) புதிய வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர் மோடி வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதோடு ரூ.2,450 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதோடு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வடகிழக்கு மாநில முதல் அமைச்சர்களும் இதில் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பிராந்தியத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 320க்கும் அதிகமான 4ஜி செல்போன் கோபுரங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மேகாலயா, மணிப்பூர், இமாச்சல பிரதேசம் இடையே அமைக்கப்பட்டு உள்ள சாலை, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ள 21 இந்தி நூலகங்கள் உள்பட பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து திரிபுரா செல்கிறார். அங்கு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி செலவில் கட்டப்பட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை பயனாளிகளிடம் பிரதமர் ஒப்படைக்கிறார்.

விரிவுப்படுத்தப்பட்ட அகர்தலா புறவழிச்சாலையை அவர் திறந்து வைக்கிறார். அந்த மாநிலத்தில் 230 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைத்தல், 540 கிலோ மீட்டர் தொலை வில் 112 சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Tags:    

Similar News