இந்தியா

கேரளாவில் இன்று முதல் அரசு பஸ்களில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் வினியோகம்

Published On 2022-12-28 14:38 IST   |   Update On 2022-12-28 14:38:00 IST
  • இனி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
  • பயணிகள் பஸ்களில் வைக்கப்பட்டிருக்கும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

தற்போது அனைத்து பெட்டிக்கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பட்டு விட்டது. 5 ரூபாய்க்கு பழம் வாங்கினால் கூட செல்போனை எடுத்து கடையில் இருக்கும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிட்டு செல்கிறார்கள்.

இந்த முறைக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளிலும் தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனை தொடங்கப்பபட்டு வருகிறது.

அந்த வகையில் கேரளாவில் உள்ள அரசு பஸ்களிலும் இந்த நவீன தொழில்நுட்பங்களை மாநில அரசு புகுத்தி வருகிறது. அதன்படி கேரள அரசு பஸ்களில் இன்று முதல் டிஜிட்டல் டிக்கெட் வினியோக முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதனை கேரள போக்குவரத்து துறை மந்திரி அந்தோணி ராஜ் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் இனி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள் பஸ்களில் வைக்கப்பட்டிருக்கும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.

வழக்கமாக பஸ்களில் பயணிகளுக்கும், கண்டக்டருக்கும் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனால் பல நேரங்களில் பயணிக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு கூட நடக்கும்.

டிஜிட்டல் டிக்கெட் வினியோகம் மூலம் பஸ்களில் இனி சில்லறை இல்லை என்ற பிரச்சினை ஏற்படாது.

மேலும் அரசு பஸ்களில் கியூஆர் கோடு வைக்கப்பட்டிருக்கும். பஸ்சில் பயணம் செய்யும் பயணி கியூஆர் கோடை ஸ்கேன் செய்து சரியான கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.

அதற்கான மெசேஜ் வந்ததும் பஸ்சில் பயணம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இது அனைத்து பஸ்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள போக்குவரத்து துறையில் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு முறை செயல்பாட்டில் உள்ளது. தற்போது டிஜிட்டல் டிக்கெட் வினியோக முறையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதோடு அடிக்கடி பஸ்களில் பயணம் செய்வோருக்காக ஸ்மார்ட் டிராவல் கார்டுகளையும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News