இந்தியா

குஜராத் தேர்தல் பணியின்போது துப்பாக்கி சூடு- துணை ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு

Published On 2022-11-27 04:16 GMT   |   Update On 2022-11-27 05:17 GMT
  • ஜாம்நகர் மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
  • துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குஜராத்தில் டிசம்பர் மாதம் 1ம் தேதி, 5ம் தேதி ஆகிய 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மணிப்பூரை சேர்ந்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் துணை ராணுவ படையினர், போர் பந்தலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு துணை ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர் ஒருவர் சக ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

துப்பாக்கி சூட்டில் மேலும் 2 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு வயிற்றிலும், மற்றொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது.

அவர்கள் உடனடியாக போர் பந்தலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஜாம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் தொய்பாசிங், ஜிதேந்திரா சிங் என்று தெரியவந்தது.

மேலும் சொராஜித், ரோஹிகானா ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது இனாவ்ச்சா சிங் என்று தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மணிப்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மோதலுக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News