இந்தியா

உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-02-13 05:09 GMT   |   Update On 2023-02-13 05:09 GMT
  • காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
  • உம்மன் சாண்டிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி.

கேரள மாநில முதல்-மந்திரியாக 2 முறை பதவி வகித்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உம்மன் சாண்டிக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என தகவல் பரவியது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டை உம்மன் சாண்டியின் உறவினர்கள் மறுத்தனர். அவரது மகனும், தனது தந்தைக்கு உரிய சிசிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார். இதற்கிடையே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மேலும் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உம்மன் சாண்டிக்கு மேல் சிகிச்சை அளிக்க அவரை பெங்களூரு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர் தனி விமானம் மூலம் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.

அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது பற்றி உம்மன் சாண்டி கூறும்போது தனக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து எந்த சர்ச்சையும் வேண்டாம், என்றார்.

Tags:    

Similar News